ஏக்கம்

உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார்.

“என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆயத்தமானாள்.

அப்போது அங்கு வந்து நின்றாள் கரஸ்பாண்டன்ட் சித்ரா. அவளைப் பார்த்ததும் ஸ்வேதா படபடப்பானாள்.

“ஏம்மா, நீங்க ஹவுஸ் வொய்ஃபா?” சித்ரா கேட்டாள்.

“யெஸ் மேடம்” சிறுநடுக்கம் அவளையும் அறியாமல்.

“உங்க வீடு பக்கத்துல இருக்கா?”

“எப்படி மேடம் கண்டுபிடிச்சிங்க?!”

டென்ஷனில் இருந்த சித்ரா ஸ்வேதாவின் ஆர்வத்தை குப்பையில் தள்ளிவிட்டு, “இதை கண்டுபிடிக்கிறது பெரிய வித்தையா? உங்க வீடு பக்கத்துல இருக்கறதாலயும், நீங்க ஹவுஸ் வொய்ஃபா இருக்கறதாலயும் பொழுது போக்கா உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட வந்துடறீங்க. ஆனா, மத்த பிள்ளைங்களோட அம்மாக்களுக்கு அந்த மாதிரி இல்லை. ஒவ்வொருத் தருக்கும் ஒரு நெருக்கடி. நிக்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்களால நேரத்துக்கு இங்க வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு போக முடியுமா?

அவங்க பிள்ளைகள் எல்லாம் தானா சாப்பிடும்போது உங்க குழந்தைக்கு மட்டும் நீங்க கொஞ்சி, கொஞ்சி தினம் சாப்பாடு ஊட்டிட்டு போனா, அதைப் பாக்கிற மத்த குழந்தைங்க மனசு என்ன பாடுபடும். ஒரு அம்மாவா உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

சித்ரா கேள்விக்கு ஸ்வேதாவிடம் பதில் இல்லை. தன் தவறு புரிந்தது. இனி சாப்பாடு ஊட்ட வருவதில்லை என்கிற முடிவுக்கு ஸ்வேதா வந்தாள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Mar-17, 11:24 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : aekkam
பார்வை : 671

மேலே