வேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்

அறிமுகம்
நீர்வளம்
தொழிற்சாலைக்கழிவுநீர்
கழிவுநீரைத் தூய்மைப்படுத்துதல்

அறிமுகம்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலவளமும், நீர்வளமும் இன்றியமையாதவைகளாகும். இந்த இரண்டு இயற்கை வளங்களைப் பேணி பாதுகாத்துவரும் நாடுகளின் வேளாண்மையும் பொருளாதாரமும் செழித்ததோடு மனித இனத்தின் கலாச்சாரமும் பண்பாடும் வளர்ந்தன என்பது வரலாறு கூறும் உண்மையாகும். நீர்வளம், நிலவளத்தை பேணிக்காப்பதின் மூலம் வேளாண்மை, சுற்றுச்சூழல், தொழிலகங்கள், சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண இயலும்.

பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது உயர் விளைச்சல் தரும் பயர் இரகங்களும் மண்வளப் பராமரிப்புமாகும். ஆனால் தற்சமயம் மண்வளம் நாளுக்கு நாள் குன்றிவருவதோடு வேளாண் நிலங்களின் பரப்பளவும் குறைந்து வருகின்றது. நகரமயமாதல் (urbanization) தொழில் வளர்ச்சி, மண் அரிமானம் போன்றவற்றால் வேளாண் விளைநிலங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே வருகின்றன. உலக மக்கள் தொகையில் சுமார் 17 சதம் மக்கள்தொகை உள்ள இந்தியாவில், உலக விளைநிலங்களில் 2.4 சதம் அளவே உள்ளன. வேளாண் விளைநிலங்களின் பரப்பளவை அதரிகரிப்பது பெரிய சவாலாகவே இருந்துவருகின்றது.

இந்தியாவில் ஏறக்குறைய 120.4 மில்லியன் எக்டர் நிலங்கள் பல்வேறு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. மண் அரிப்பினால் மட்டும் சுமார் 93 மில்லியன் எக்டர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நீரினால் ஏற்படும் மண் அரிப்பினால் உணவு உற்பத்தி ஆண்டுக்கு 187 மில்லியன் டன்கள் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 6.74 மில்லியன் எக்டர் நிலங்கள் உப்புக்களால் களர், உவர் நிலங்களாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதிப்பினால் விளைநிலங்களின் உற்பத்தித்திறன் 5 முதல் 75 சதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி 63.85 மில்லியன் எக்டர் நிலங்கள் தரிசு நிலங்களாகவும் உள்ளன.

இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு இத்தகைய நிலங்களை அறிவியல் தொழில் நுட்பங்களைக் கொண்டு தரம்பட மேலாண்மை செய்தால் மட்டுமே உணவு உற்பத்தியினைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.
நீர்வளம்

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. நீர் வளமே மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாகும். பூமியின் மேற்பரப்பில் முக்கால் பாகம் நீரினால் நிறைந்துள்ளது. இவற்றில் 97 சதவிகிதம் உப்பு நிறைந்த கடல் நீராக உள்ளது. மூன்று சத நீரே மனித பயன்பாட்டிற்காக உள்ளது. இந்த மூன்று சதவிகித நீரில் ஏறக்குறைய 70 சதவிகித நீர் பனிக்கட்டிகளாகவும், சுமார் 30 சதவிகிதம் நிலத்தடி நீராகவும் உள்ளன. அத்துடன் 0.3 சதவிகிதமே மேற்பரப்பில் ஆறு, குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகளில் காணப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் வேளாண்மைக்காகவே அதிகளவில் நீர் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. பெருகிவரும் மக்கள்தொகை, நகரமயமாதல், தொழில் வளர்ச்சி காரணமாக, உலகளவில் பல கோடி மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 4000 கன கி.மீ. நீர் மழை, பனிப்பொழிவு மூலமாக கிடைக்கப்பெறுகின்றது. இயற்கையாகவே சுமார் 342.4 கன கி.மீ நீர் நிலத்தடி நீராகின்றது. 89.46 கன கி.மீ அளவு நீர் வாய்க்கால் பாசனம் மூலம் வேளாண்மைக்குக் கிடைக்கின்றது. தற்சமயம் நமக்கு 813 கன கி.மீ (பில்லியன் கன மீட்டர்) நீர் தேவைப்படுகின்றது. இதில் 688 கன கி.மீ வேளாண்மைக்கும், 56 கன கி.மீ குடிநீருக்கும், 15 கன கி.மீ. தொழிலகங்களுக்கும் தேவைப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வேளாண்மைக்கு மட்டும் 910 கன கி.மீ. நீரும், குடிநீருக்கு 73 கன கி.மீ. நீரும், தொழிலகங்களுக்கு 23 கன கி.மீ. அளவும் நீர் தேவைப்படும்.

நம் நாட்டில் ஒரு நபரின் நேரடி நுகர்வுக்கு 1950ஆம் ஆண்டுகளில் ஆண்டொன்றிற்கு 5300 க.மீ நீர் இருந்தது. இது கணிசமாக குறைந்து 2001 ஆம் ஆண்டு 1820 க.மீ ஆக இருந்தது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த அளவு 1100 க.மீ க்கும் கீழே போய் தண்ணிர் தட்டுப்பாடு வரும் அபாயம் உள்ளது.

எனவே நீர் வளத்தை அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு திறம்பட மேலாண்மை செய்தல் மிக அவசியமாகின்றது. மனித பயன்பாட்டிற்கு கிடைக்கின்ற சிறிதளவு நீரும் , பல இடங்களில் தொழிற்சாலை, நகரக்கழிவுகளால் மாசுபட்டு பாசனத்திற்கும் குடிப்பதற்கும் உகந்ததாக இல்லாமல் மாறிவிடுகின்றது.
தொழிற்சாலைக்கழிவுநீர்

பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து ஏராளமான அளவில் கழிவு நீர் வெளியேறுகின்றது. இந்தியாவில் உள்ள தோல் பதனிடும் தொழிலகங்களில் 60 சதம் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றில் ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட தோல் பெறுவதற்கு சுமார் 35 லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் ஏறக்குறைய 30 முதல் 32 லிட்டர் தண்ணிர் வரை கழிவுநீராக வெளியேறுகின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 640 மில்லியன் லிட்டர் கழிவு நீர் இந்த தொழிலகங்கலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.

இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ளது. இங்கு 579 சர்க்கரை ஆலைகளும், 285க்கும் மேற்பட்ட வடிப்பாலைகளும் உள்ளன. தற்போது வடிப்பாலைகளின் மூலம் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் 40.7 மில்லியன் கன.மீ அளவிலான வடிப்பாலை கழிவுநீர் உற்பத்தியாகின்றது. தமிழ் நாட்டில் உள்ள பத்தொன்பதுக்கும் அதிகமான வடிப்பாலைகளின் மூலம் ஆண்டுக்கு 3178.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இது போன்றே நம் நாட்டில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இதுவும் அதிகளவில் நீரைப் பயன்படுத்தும் தொழிற்சாலையாகும். ஒரு டன் காகிதம் தயாரிக்க சுமார் 250000 முதல் 400000 லிட்டர் நீர் தேவைப்படுகின்றது. இதனால் காகித ஆலைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு சுமார் 696 மில்லியன் கன மீட்டர் கழிவுநீர் உற்பத்தியாகின்றது.

அதுமட்டுமன்றி சாயத் தொழிற்சாலைகள் மூலமும் அதிகளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. திருப்பூர் பகுதிகளில் இயங்கும் சாயப் பட்டறைகளிலிருந்து மட்டும் தினந்தோறும் சுமார் 75 முதல் 100 மில்லியன் லிட்டர் அளவிற்கு கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இதுபோக கார் தயாரிப்பு போன்ற பிற தொழிலகங்களிலும் ஏராளமான அளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இத்தகைய தொழிலக கழிவுநீர் பெரும்பாலும் நிலத்திலும், ஆறு குளங்களில் விடப்பட்டு நிலத்தையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றது. இதனால் வேளாண் விளைநிலங்களின் மண் வளம் குன்றி பயிர் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மாசுபட்ட நீரினால் கால்நடை, மனித சுகாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனமும், உணவு மற்றும் வேளாண் நிறுவனமும் (FAO), மாசுபட்ட நீரைக் குடிப்பதன் மூலம் 3.4 மில்லியன் மக்கள் இறப்பதாக தகவல் தெரிவித்துள்ளன.

கழிவுநீரைத் தூய்மைப்படுத்துதல்

பல்வேறு தொழிலகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் வேளாண் நிலங்களும், நீர் நிலைகளும் பெரிதும் மாசுபட்டு நீரின் தன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண்மைய் பல்கலைக் கழக சமீப ஆய்வில் கோயம்புத்துரில் உள்ள 12 குளங்களில், தொழிற் சாலை, நகரக் கழிவுகளில் உள்ள காரீயம், குரோமியம், தாமிரம், கேட்மியம், இரும்பு, நிக்கல், துத்தநாகம் போன்ற கன உலோகங்களால் பெரிதும் மாசுபட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தோல் பதனிடும் தொழிலகங்கள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 85 சதவீதத்திற்கு மேல் நிலத்தடி நீர் குரோமியம் எனும் நச்சு உலோகத்தால் மாசுபட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் சாயப்பட்டறை கழிவு நீரால் ஆயிரக்கணக்கில் கிணறுகள் மாசுபட்டு, அக்கிணற்று நீர் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் பயன்படா வண்ணம் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு காலத்தில் வளமாகவும், வாழ்வாதாரமாகவும் செழித்து காணப்பட்ட நொய்யல் ஆறு இன்று மாசுபட்டு தொழிலகக் கழிவு நீரையே பெரும்பாலும் கொண்டுசெல்கின்றது

தொழிலகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, நவீன தொழில்நுட்ப முறைகளில் தூய்மைப்படுத்தி அவற்றிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கிவிட்டால், சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிலகங்களில் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியும். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை பாசனத்திற்கும் திறம்பட பயன்படுத்த இயலும். இதனால் கழிவு நீரால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுவதோடு பாசன நீர் தேவையும் குறிப்பிட்ட அளவு பூர்த்தி செய்ய முடியும்.

தொழிலகக் கழிவுநீரை தூய்மையாக்க பல்வேறு உயிரிய, இரசாயன தொழில் நுட்பங்கள் உள்ளன. தாவரபடுக்கை முறையில் கழிவுநீர் துய்மையாக்கும் தொழில் நுட்பம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எளிதாக கிடைக்கும் சரளை, மணல், மண் போன்ற பொருட்களுடன் வெர்மிகுளைட் எனும் கனிமம் அல்லது பயோசார் எனும் உயிரிய கரிமத்துகள்களை ஒருங்கிணைத்து நாணல்புற்கள் (Reeds) கொண்டு தாவரப் படுக்கை அமைத்து கழிவு நீரை தூய்மையாக்கலாம். இந்த முறையில் கன உலோகங்கள், சோடியம் போன்ற உப்புக்களைக் கழிவு நீரிலிருந்து நீக்குவதோடு கழிவு நீரின் 'உயிரிய ஆக்ஸிஜன் தேவை', (BOD), "இரசாயன ஆக்ஸிஜன் தேவை (COD) போன்றவை 85 முதல் 90 சதம்வரை குறைக்க இயலும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் மாசுப்பட்ட நீர் நிலைகளிலிருந்து அதிகளவில் கன உலோகங்களையும், பாஸ்பரஸ், நைட்ரேட் உப்புக்களையம், உறிஞ்சி எடுத்துக் கொள்ளக்கூடியவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கேற்ற கழிவுநீரைத் தூய்மைப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்தி கழிவு நீரை தூய்மைப்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுவதோடு, தூய்ம்மைபடுத்தப்பட்ட கழிவுநீரை பாசனத்திற்கும் திறம்பட பயன்படுத்தமுடியும்.

நீர், விலை மதிப்பற்ற இயற்கை வளம். எனவே ஒவ்வொரு துளி நீரையும் கவனமாக பயன்படுத்துவதோடு பாதுகாக்கவும் வேண்டும். சிக்கன முறையில் பாசனநீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறவும் உணவு உற்பத்தியைப் பெருக்கவும் தொழில் நுட்பங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி வேளாண்மை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். வருங்காலங்களில் நீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (4-Mar-17, 8:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 478

சிறந்த கட்டுரைகள்

மேலே