சேவலின் கூவல்

சேவலின் கூவல்
================

வைகரையில் கூவியுனைஎழ வைத்துன்
துயில்கலைந்ததும் கேளுமடா என்சரிதம்!

செந்நிற கொண்டை சிவந்தயென் கண்கள்..
நிமிர்ந்தயென்பார்வை மிடுக்கானநடை கொண்ட..

“கோழி” யெனும்பெயரே சேவலெனைமட்டும் குறிக்குமாம்!
“செவல்” “மயில்” “நாடு” யென பன்பெயரென் புகழ்சொல்லும்!

பெ ட்டைக்கோழியிடம் மட்டற்ற ஆதிக்கம்பெற…ஆணவ.
ஆண்கோழிகள் சண்டையிடுவது இயற்கையானால்..

கோழியெனை சூதாக வைத்தாடுவது தகுமா?.மீண்டும்.
பாவிமனிதனெனும் பழிவேண்ட சேவல்சூதாட்டம் வேணுமா?..

சிவன்குமரப் பெருமானின் கொடியிலேறியதால்..எனைவைத்து..
சூதாட்டம்கூட “தென்திருவிளையாட்டானது”?..சூதில்நான்..

வெற்றிபெற்றால் “வெற்றி” யெனபெயர்படுவேன்!
தோல்வியெனில் “கோச்சை” யென நானறிவேன்!

செந்நீரைச் சிந்தியெந்தன் சேவலுயிர் போனாலும்..
செந்தமிழன் வீரமென்று சீராட்டுமென் தென்திருநாடு!

காலில் கத்திகட்டி கட்டாலிகள் விளையாடும்..
கள்ளாட்டம் புத்திகெட்டமானுடனின் செயலாகும்!

வெற்றுக்காலுடன் கத்தியின்றிரத்தமின்றி யான்பெறும்..
வெற்றியென்பது உண்மையகிம்சை வெற்றியாகும்!

காட்டமான சண்டையில் வெற்றிபெற என்னினத்தை..
காளிமுன்பு காவுகொடுத்தான் கயவனொருவன்!

காட்டுக்கோழியானால் காலனெனைத் துரத்தமாட்டான்!
நாட்டுக்கொழியானதால் நித்தம்நித்தம் ஆயுள்கண்டம்!

கோதாவில் கழுத்தறுந்து உயிரிழந்த பரிதாபத்தால்..
கடாயில்பல மசாலாவுடன் கோழிநான் குருமாவானேன்!

நெட்டைக்கழுத்தை நீட்டியென் பகைவன்மேல் பறந்து..
பட்டைதீட்டிய கத்தியால் எதிரிகழுத்தை அறுத்ததால்..

குலத்தைக் கெடுக்க வந்த கோடரிபோல்..என்..
இனத்தை நானேகெடுத்து வாழ்வில் இழுக்குற்றேன்!

பதார்த்த குணசிந்தாமணி படித்தவர் என்னிடமரும்..
மருத்துவகுணமுண்டென்று மருந்தாகயெனை சமைத்துண்டார்!

சாமக்கோழியென் அலரும் அறைகூவலுனக்கு..
சமயல்கட்டினுளென் வேதனையறிய வைக்குமடா!

சேவல்கொடியோன் அருளீன்ற என்னுயிரை…இனியும்..
காவல்காக்கமுடியா தென்பது இயற்கைவிதியாமோ?..

நாளை வல்லமை நடத்தும் கவிதைப் போட்டிக்காக இந்தக் கவிதையை சமர்ப்பித்து இருக்கிறேன்.

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (5-Mar-17, 2:12 pm)
பார்வை : 145

மேலே