இது ஒரு காதல் சங்கீதம்

இது ஒரு காதல் சங்கீதம்.
2010 இல் நடந்த செம்மொழி மாநாடு கோவை பக்கம் உலகையே திரும்பி பார்க்க செய்தது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மேதைகளும், ஆர்வலர்களும் , பற்றாளர்களும் கோவையில் படை திரண்டனர். அரசு ஊழியரக்ளுக்கு மாநாட்டின் ஏற்பாடுகளை கவனிக்க கல்லூரிகளில் இருந்து உதவி கரங்கள் நீட்டப்பட்டது. இணைய மாநாடு செம்மொழி மாநாட்டின் கிழை நிகழ்வாய் கொடிசியாவில் ஈடேறியது. அதன் சிறப்பம்சமே பல மேதைகளின் தமிழும் கணினியும் சார்ந்த படைப்புக்களை பிறர் பார்வைக்கு வழங்குதலே. அதற்காக கொடிசியா உள்ளரங்கில் பல சிறு அரங்குகள் ஒதுக்க பட்டிருந்தது.
மாணவ ஆர்வலர்களில் சுஜியும் ஒருவள். மாநாட்டின் நிகழ்வுகளை படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளராக வந்திருந்தான் கார்த்திக். வந்திருந்த அவ்வளவு விடியோக்ராபர்களோடும் சில மணி நேரங்களில் நண்பனாகி இருந்தான். அத்தனை ஜோவியல், அத்தனை குறும்பு. அங்கு நடந்த விளக்கக்காட்சிகளை தொகுத்து வழங்கும் வேலை சுஜிக்கு. வீடியோகிராபரான கார்த்திக் அதை படம் பிடிக்கும் பணியில். முதன் முதலில் கார்த்திக் தான் அவளை பார்த்தான். ஐந்து நாட்கள் நிகழாவான அந்நிகழ்ச்சியின் முதலாம் நாளே அவளறியாமல் பின்தொடர தொடங்கினான். துறுதுறுவென ஓடி கொண்டும், நண்பர்களை வம்பிழுத்து சிரித்து கொண்டும் அவளை சுற்றி அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி. வெகு இயலபாக கார்த்தி ஈர்க்கப்பட்டிருந்தான். இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், ஏனோ அவளிடம் பேச தைரியம் வரவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இருப்பது ஒரே அரங்கில்.
திண்ணையில் உட்காந்திருந்தவனக்கு திடுக்குன்னு வந்ததாம் CM போஸ்ட் போல.. அவன் உள்நுழைய எத்தனித்த அறையின்று சுஜி வெளிவர எதிர்பாரா மோதல் அரங்கேறிற்று. மன்னிப்பு, பயம், கோபம் எல்லாம் கலந்த முகத்துடன் கார்த்திக்கை ஏறிட்டு பார்த்தாள். இவன் முகம் முழுக்க புன்னகையும், வழியும் தோரணையுமாய்,
ஹேய் சாரி! என்றான்.
அவள் கொதிக்கும் எண்ணெயில் விழுந்த தண்ணீராய் முறைத்து, ஒதுங்கி நடக்கலானாள்.
“நில்லுங்க, ஒன்னு சொல்லனும். ஆனா, நம்புவீங்களா தெரில! நீங்க அப்டியே என் ப்ரெண்ட் மாதிரி இருக்கீங்க... சப்ரைஸிங்கா இருக்கு, என்றான்.
அப்பட்டமா ப்ளிர்ட் பன்றானே, என நினைத்து கொண்டிருக்கையிலேயே அவளது ஐடியிலிருந்து பெயரை மனதில் பச்சை குத்தி கொண்டான்.
பேரு என்ன தெரியுமா? சுஜி.
ஓ வாவ், பேரு கூட ஒன்னாயிருக்கில்ல என்று போலி ஆச்சரியம் காட்டினாள்.
கடுப்பாக்கிட்டமோ!? என உஷாரானவனாய்.. அட உண்மைங்க உங்ககிட்ட பொய் சொல்லி என்ன பன்ன போறேன்... என்று அதை மெய்யாக்க முற்பட்டான்.
சுஜியும், ‘ஒருவேளை உண்மையா இருக்குமோ’ என்று ஓரளவு நம்பியே விட்டாள்.
சரி, உண்மையோ பொய்யோ இருந்துட்டு போகட்டும் விடுங்க. பை!
அதுக்குள்ள போய்ட்டா எப்படி? உங்க பாவாடை தாவணி செம்மங்க , என்ன ஒரு சின்ன குறை… கலர் உங்களுக்கு சூய்ட் ஆகல என்றான். அதை சொல்லி முடிக்கையில் அவன் பொருக்கி என்று இவள் முடிவே செய்திருந்தாள். விருட்டென்று நகர்ந்தாள்
முன்பாவது , பார்க்க அழகாய் இருக்கிறாள் பேச முயற்சிப்போம் என்று தான் தோன்றியது. அவளிடம் பேசிய பின் நெருங்கி பழக உந்தப்பட்டான், கார்த்திக். அந்த படபடக்கும் கண்கள், தெனாவெட்டாய் கடக்கும் திமிர், நிறைய பேச தெரிந்தும் அவனிடம் அளவாய் பேசிய கஞ்சத்தனம் எல்லாம் ஒன்றாய் போட்டு தாக்கியது. நெருங்க சொன்னது. எப்படியும் சுஜியுடன் நண்பனாவது என்று சூளுரைத்துக்கொண்டான். பின் தொடர தொடங்கினான்.

எங்கு திரும்பினும் அவளிருக்கும் 20 -30 மீட்டர்க்குள் அவன் தென்படலானான். காபி எடுக்க அவள் சென்றால் தானும் செல்லுவான், சுஜி பார்த்து விட்டால் மேல பார்த்து பல்புகள் எண்ண வேண்டியது. தொகுத்தளிக்க உரை தயாரிக்கும் பொழுது அருகாமையில் அமர்ந்து அவள் சம்பாஷணைகளை ரசித்தும் ருசித்தும் மாட்டிக்கொள்வான், சமாளிக்க மணி கேட்டு மேலும் சொதப்பி விடுவான். அவளையும் மீறி அவனது கோமாளித்தனங்கள் சிரிக்க வைத்தது. இருந்தும் அதை வளர்க்க அவள் விரும்பவில்லை. அன்று வீட்டிற்கு கிளம்புவதற்கு முன்னதாக சுற்று வட்டாரத்தில் சுற்றி கொண்டிருந்த அவனை அழைத்து.. இங்க பாருங்க அண்ணா.. உங்க ஐடியா என்னனு கெஸ் பன்ன முடியுது ஆனா எனக்கு ஆள் இருக்கு. சோ டோன்ட் டிஸ்டர்ப் என்றாள்.

அண்ணாவா? ஏங்க.. கெட்ட வார்த்தைல கூட திட்டுங்க வாங்கிக்கிறேன். தயவு செஞ்சு அண்ணா மட்டும் சொல்லாதீங்க என்றான் கெஞ்சும் தோரணையில்.
லூசா நீங்க? ஏன் இப்டி இரிடேட் பண்றீங்க? சொன்ன புரியாதா? நான் காலேஜ் ஸ்டுடென்ட். இது என் ஊரு, நீங்க பின்னாடியே சுத்தறது யாரவது பாத்த என்ன நினைப்பாங்க ? என்று கோபமாய் கத்திவிட்டாள்.
கார்த்திக்கோ, சாரி… ஆனா கோப படாதீங்க . உங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன் என்று மிக பொறுமையாய் லேசாய் நகைத்து கொண்டு சொன்னான்.
எப்டி ஒருத்தன் அவ்ளோ திட்டியும் சிரிப்பான் ? ஆனா நான் அவ்ளோ ஹார்ஷா பேசிருக்கவும் கூடாது. அவன் திருப்பி திட்டிருந்த கூட பரவால்லை, சிரிச்சிட்டே போய்ட்டான். அப்படி இப்படியாக சுஜி பாவம் பார்க்கும் அளவிற்கு பேசிக்கொண்ட முதல் நாளிலேயே முன்னேறி இருந்தான். நாளைக்கு வந்து பேசுனா நல்லபடியா பேசிடனும் பாவம் என்று முடிவெடுத்து தூங்கிப்போனாள்.

பொதுவாக பெண்களின் உளவியல்…… தன்னை ரசிக்கும், சிரிக்க வைக்கும் ஆண்களை கவனிக்க தொடங்கி விடுவார்கள்.

அடுத்த நாள் சேலை கட்டி வந்திருந்த சுஜி அறைக்குள் நுழைந்ததும், உள்ளே தன் வரவை எதிர்பார்த்து காத்திருந்த கார்த்திக்கை கண்டாள். அவன் கண்கள் தேவதையை கண்டது போல் விரிந்தது,.. அவளுக்குள் ஆனந்தத்தை தந்தது. எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ லேசாய் சிரித்து வைத்தாள். அது போதுமே, அவன் அநியாயத்துக்கு உற்சாகம் ஆகி போனான். அவளுடைய ஜூனியர் பையன் மூசாவை அழைத்து, அவள் அருகே சென்று “டேய், வெண்பொங்கல் பிரேக் பாஸ்ட். செம்மையா இருக்கு போய் சாப்பிட்டு வா” என்றான். “அண்ணே, நாம ஒன்னாதான் சாப்பிட்டோம் .நான் என்ன பூதமா?” என்று போட்டு உடைத்தான். “இல்ல டா, நாம சாப்பிட்டோம்.. எல்லாரும் சாப்டாங்களா தெரிலயே” என்று அவளை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டான். அவள் புன்னைகைத்து கொண்டே தன் வேலைகளை கவனித்து கொண்டு இருந்தாள்.

அதே அறையில் ஒரு ஹிந்திக்கார சவுண்ட் என்ஜினீயர் நியமிக்க பட்டிருந்தார். எல்லாருடனும் பட்டென பேசி பழகிவிடும் கார்த்திக்கு அவரிடம் நண்பனாக தேவைப்பட்டதென்னவோ சில மணி துளிகள் தான். அவருக்கு தமிழ் சொல்லி தருகிறேன் பேர் வழி என சுஜியை சீண்ட தொடங்கினான்.

லிஸ்டன்… "வாட் இஸ் யுவர் நேம்" இன் தமிழ் இஸ், நீங்க அழகா இருக்கீங்க..
"ஹவ் ஆர் யூ " இன் தமிழ் இஸ், ஓடிப்போலாமா.. என்று தப்பு தப்பாய் சொல்லி தர அந்த அறையில் இருந்த அத்தனை நபர்களும் சிரிக்க தொடங்கி விட்டனர். சுஜிக்கு மட்டும் புரிந்தது கார்த்திக்கின் முயற்சி. என்ன இருந்தும், எவ்வளவு நேரம் முகத்தை விரைப்பாக வைத்து கொள்ள, ஒரு கட்டத்தில் அவளும் சிரிப்பை கொப்பளித்துவிட்டாள். அவன் பார்த்ததும் டக்கென முகத்தை மாற்றினாள்,
“நீங்க சிரிச்சத பாத்துட்டேன். இன்னைக்கு சாரீ ஹ்ம்ம்..., கடல்லையே இல்லையாம். அவ்ளோ அழகா இருக்கீங்க!” என்றான். லேசாய் சிரித்துக்கொண்டே முறைத்தாள். வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு,”காபி வாங்க போறேன் உங்களுக்கும் கொண்டு வரவா?” என்றான் கார்த்திக். சுஜியோ “ஹ்ம்ம், நானும் வரேன் வாங்க போய் எடுத்துட்டு வரலாம்” என உடன் நடக்க தொடங்கினாள். அச்சமயத்தே அவர்களுக்குள், உங்க சொந்த ஊரு? எந்த சேனல்'ல ஒர்க் பண்றீங்க? என ஒரு பரஸ்பர அறிமுகம் நிகழ தொடங்கியிருந்தது.
இப்போ நாம ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல ஜி ?
ஹ்ம்ம் ஆமா.
அப்போ உங்க நம்பர் தரலாமே ?
அவ்ளோ கிளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆஹலையே ? என நகைத்தாள்.
முகம் வாடி போனது கார்த்திக்கு. பொதுவாய் இதெற்கெல்லாம் வருந்தும் சுபாவம் அல்ல அவன். இருப்பின்னும் அவள் தன்னை அந்நியனாய் பார்ப்பதை ஏற்று கொள்ள ஏனோ வலித்தது.
என்ன அமைதி ஆயிட்டிங்க கார்த்திக் ?
ஒன்னுமில்ல ஒரு கால் வருது.. நீங்க முன்னாடி போங்க. சீ யூ லேட்டர், என நகர்ந்தான்.
என்னாச்சு, திடீர்னு அப்செட் ஆயிட்டான் கேட்டதும் நம்பர் தந்துடுவாங்களா? ரொம்ப தான். ம்ஹும், என்று தனக்குள் பேசிய படி வாங்கிய காபியில் இதழ் பதித்தாள்.
அறைக்கு திரும்பி வந்த பொழுது சுஜியின் தோழிகள் சூழ்ந்து கொண்டு எங்க டி உன் பாடி கார்டு என்று கேலி செய்தனர். கோபமாய் வந்தாலும் உள்ளுக்குள் ரசித்தாள். இப்படி அப்பட்டமா தெரிற மாதிரியா பின்னாடி சுத்துவாங்க. சரியான லூசு கார்த்திக் நீ என்று உள்ளுக்குள் கடிந்து கொண்டாள்.
சில மணி நேரங்கள் கழித்து திரும்பி வந்த அவனை எதிர் பார்த்திருந்தவளாய் எங்க காணாம போய்ட்டீங்க ?
சும்மா அப்டியே சுத்திட்டு இருந்தேன். இங்க இருந்து உங்களை தொல்லை பண்ண வேணாமேன்னு தான், என்றான் கண்ணில் உண்மையோடு. அவன் பேச்சு நிச்சயம் அவளை ரசிக்க செய்தது.
தொல்லை எல்லாம் இல்ல. உண்மையா சொல்லனும்னா உங்கள தேடிட்டு இருந்தேன்.
மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாய் என்னையா? தேடுனீங்களா? எதுக்கு?
வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு. கிளம்ப இன்னும் டைம் இருக்கு. அதான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கலாம்னு பார்த்தேன்.
என்டயா? பூரித்து போனான். பறக்கவே தொடங்கி இருந்தான்.
வரும் வழியில் அவனுக்கு கிடைத்திருந்த புத்தகம் ,காபி மக், பர்சனல் டைரி என சில பரிசாய் வந்த பொருட்களை சுஜியிடம் நீட்டினான். மீடியாவாம், அதான் ப்ரோமோஷன்க்கு குடுத்திருக்காங்க.
வாவ் புக்ஸ். தேங்க் யூ.
இவர்கள் பேசி கொண்டிருக்கையில் சுஜியின் தோழி தொலைவில் இருந்து அழைக்க, அவள் திரும்பிய நொடிகளில் கையிலிருந்த மொபைலை பிடுங்கி கொண்டு ஓட துவங்கினான் கார்த்திக்.
கார்த்திக்… நில்லுங்க! என்றபடி புடவையை தூக்கி பிடித்து அவனை துரத்த தொடங்கினாள், அவள் நெருங்குவதற்குள்ளாக தன் மொபைல்க்கு அவள் போனில் இருந்து கால் செய்து கொண்டான்.
என்ன விளையாட்டு இது ?
கேட்ட தர மாற்றீங்க, இன்னும் ஒன்னு ரெண்டு நாளுல தனி தனியா பிரிஞ்சு போயிடுவோம். அப்படி சட்டுனு விட்டு போக முடியாதுங்க. அதான் நானா நம்பர் எடுத்துக்கிட்டேன். சாரி. ஆனா இ அம் ஹாப்பி என்று கண்ணடித்தான்.

இனியும் அவனை திட்ட முடியுமா என்ன? போனை பிடுங்கி கொண்டு திரும்பி சிரித்து விட்டு நகர்ந்தாள். தூரமாய் சென்றதும் , நாளைக்கு பாப்போம் பை அன்று செய்கை செய்தாள். குறுஞ்செய்தி வந்த டோன் கேட்டு போனை கவனித்தாள். “ஐ அம் க்ரேஸி ஆன் யூ” வந்திருந்தது. தொலைவில் இருந்து அவனை நோக்கி செல்லமாய் முறைத்து பஸ் ஸ்டாப்க்கு நடக்க தொடங்கினாள்.
அன்று மாநாட்டின் இறுதி நாள்.. கார்த்திக் சுஜிக்கு ஏதானும் பரிசு பொருள் அன்பளிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தான். அதை வாங்கும் பொழுது அவள் எப்படி பார்ப்பாள், சிரிப்பாள் என்று நினைத்து நினைத்து குதூகலமானான். என்ன வாங்குவது என்று நெடு நேரம் யோசித்தும் எந்த யோசனையும் வரவில்லை. சமயமும் ஆகி விட்டதால் மதிய வேளையில் தேடி வாங்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்து கொடிசியா வந்து சேர்ந்திருந்தான்.
சுஜிக்கு கார்த்திக்க்கை பார்க்க போகிறோம் என்பதுவே மகிழிச்சி தந்தது.
இருவரும் ஆர்வமாய் வந்திருந்தனர். ஆனால் கேமரா செட்டிங்ஸ் முடிந்த சற்று நேரத்தில் அவன் காணாமல் போயிருந்தான். காலை உணவிற்காக தோழிகளுடன் டைன்னிங் ஹால் சென்ற சுஜியின் கண்கள் அவனை அங்கேயும் கூட தேடி கொண்டே தான் இருந்தது. சொல்லிவைத்தார் போல் சற்று நேரத்தில் இவளை தேடி அவன் அங்கு வந்திருந்தான். சாப்பிட்டு கொண்டிருக்கும் அவள் அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து "நான் இந்த ஸ்வீட் எடுத்துக்கவா" என்று குறும்பாய் கேட்டான். அவளது தோழிகளோ ஒஹ்ஹஹ் என்று கத்தி கலாய்த்தனர். வெட்கத்தில் கண்ணம் சிவந்தாலும் பொய் கோபம் காட்டி,
ஏன் உங்களுக்கு புபட்-ல தர மாட்டேன்னு சொல்லிடாங்களா ? என்றாள்.
இவ்ளோ ஸ்வீட்டா இருக்குமா தெரில.. சோ நீங்களே தாங்க என்ற பழைய டெக்ணிக்கை பயன் படுத்தியும் வெற்றி கண்டு விட்டான்.
கடவுளே.. நீங்க இருக்கீங்களே… இந்தாங்க நல்ல கொட்டிகோங்க! என்று கொடுத்து கை கழுவ சென்றாள். அவள் பின்னாலே எழுந்து தொடர்ந்து சென்றான் கார்த்திக். தான் பெண்கள் கழிவறைக்குள் நுழைகிறோம் என்பது கூட தெரியாமல் மேலும் நடக்க முயன்றவனை எங்கிருந்தோ வந்த அவன் நண்பன் தடுத்து நிறுத்தினான்.
இத்தனையும் சுஜி அங்கிருந்த கண்ணாடியில் விரிந்த விழியில் அதிர்ச்சியும் பதட்டமுமாய் பார்த்து கொண்டிருந்தாள். சுயம் திரும்பும் பொழுது அட கிறுக்கு பயலே. கழுண்டு'டுச்சு இதுக்கு, என்று நொந்து கொண்டாள். அனைத்தையும் தாண்டி அவளுக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளின் வண்ணங்கள் கடனாய் தந்தால் வானத்தின் நிறமே மாறி போயிருக்கும்.
அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் தங்கள் அரங்கத்துக்குள் குழுமி இருந்தனர். கார்த்திக்கும் கையில் ஒரு பூங்கொத்தோடு வந்து சேர்ந்தான். அவனை இப்பொழுது பல கண்கள் கவனிக்க தொடங்கி இருந்தது. கார்த்திக் பூங்கொத்தோடு சுஜியை நோக்கி நடந்து வர சூழ்நிலை சரியில்லை என தோன்றவே, அவள் அறையை விட்டு வெளியேற முனைந்தாள். அவள் தடத்தை மறித்து நின்றவன், ஏங்க எங்க இவ்ளோ வேகமா போறீங்க ? என்றான்.
இல்ல ஒரு கால் வருது, அதான். இருங்க வரேன்.
சுஜி, இதை நான் ஒரு அழகான பொண்ணுக்கு குடுக்க கொண்டு வந்திருக்கேன்.
அப்போ போய் குடுங்க, ஆனா எனக்கு இப்போ வழி விடுங்க.
அந்த பொண்ணு எங்கேயோ அவசரமா எஸ் ஆக பாக்குதுங்க அப்புறம் எப்படி குடுக்க?
வெட்கத்தில், நானா?
பின்ன? ப்ளீஸ் வாங்கிக்கோங்க.
நோ வே, எல்லாரும் நம்மள பாக்ராங்க. போய்டுங்க.
இவர்களின் உரையாடலின் மத்தியிலேயே, வாழைப்பழத்தை பிடுங்கி ஓடும் குரங்கை போல, சுஜியின் தோழி கார்த்திக் கையினின்று பூங்கொத்தை பறித்து ஓடினாள்.
ஐயோ மானத்தை வாங்குறாளே என இவள் நினைத்து கொண்டிருக்கையில் , ஏங்க லூசா அவுங்க? மண்ணள்ளி போட என் பீலிங்ஸ் தான் கெடச்சுதா? என்றான் கோபத்தை மறைத்தபடி.
சாரிங்க, அவ நான் இருந்தனாலா உரிமையா எடுத்துட்டு போய்ட்டா. கோவிச்சுக்காதீங்க. நீங்க இன்னோனு கொண்டு வந்தா நான் வாங்கிக்கிறேன். என்று மெலிதாய் சிரித்து வைத்தாள்.
ஓகே டீல். என்று நடந்து மறைந்து போனான்.
கல்லூரி மாணாக்கள் இறுதி நாளான அன்று புகை படம் எடுக்கவும், மற்ற கல்லூரி நண்பர்களோடு கைபேசி எண் பரிமாறவுமமாய் இருந்தனர். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து, கைமுழுக்க வெண்மேகங்களாய் வெள்ளை பூக்களோடு கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்து நின்றான்.
பட்டாம்பூச்சி எபெக்ட்டில் இருந்து இன்னும் மீளாத சுஜிக்கு வெள்ளை நிறம், இதழ் சுருக்க செய்தது. அந்த சிறு சுனக்கத்தை கூட புரிந்தவனாய் திரும்பி சென்று விட்டான். “ப்ச் நான் சரியான லூசு, அவனை திரும்ப திரும்ப ஹர்ட் பண்றேன் பாவம்! என சுஜி தன்னை நொந்து கொண்டாள்.
மாணவர்களுக்கு நன்றி சொல்வதற்கான கூட்டத்தை கலெக்டர் நடத்தி கொண்டிருக்க "கார்த்திக் காலிங்" வரவே அட்டென்ட் செய்து மேடைக்கு மறைவாய் நாற்காலியிலின்று கீழிறங்கி ஹஸ்க்கி குரலில் "ஹலோ கார்த்திக்?" சொல்ல சொல்ல கால் கட் ஆகி போனது. "பன்னி, மிஸ்ட் கால் குடுத்து வெளயாடுறே நேரமா இது!" என திட்டிக்கொண்டிருக்க பூக்கள் வைட்டிங் கம் அவுட் என்று மெசேஜ் பீப் செய்தது.
உடனே கிளம்பி வெளியில் வந்தாள். முகம் முழுக்க புன்னகை, குறும்பு தெறிக்கும் கண்கள், கையில் பூத்த பூக்காடு என அறையின் வாசலில் நின்றிருந்தான் கார்த்திக்.
இத்தனை அழகான காட்சியை கண்ட பின் கண்களில் பூரிப்பு தொத்தி கொண்டது சுஜிக்கு. அவன் தந்த பூங்கொத்தை பெற்றுக்கொண்டாள். தான் வாழ்வில் பெற்ற முதல் பூங்கொத்து . சுற்றிலும் அவ்வளவு பேர் பார்க்க உலகிலேயே அவள் மட்டும் தான் பெண் என்பதை போல் அவன் செய்து கொண்டிருந்த சேஷ்டைகள்... அவனை அளவில்லாமல் ரசிக்க வைத்தது.
"இன்னைக்கு கடைசி நாள், கண்டிப்பா உங்கள ரொம்ப மிஸ் பண்ண போறேன். நம்ம எல்லா சம்பாஷணைகளும் செம்மொழியான தமிழ் மொழியா பேக் ட்ராப்பிலேயே நடந்திருக்கு. இனி எப்போ இந்த பாட்டு கேட்டாலும் நீங்க தான் நியாபகம் வருவீங்க. 5 நாளா தான் பாக்கிறேன். ஆன பல வருஷம் பழகின பீல். நீங்க சொன்ன மாதிரி சமத்தா நடந்துப்பேன், நானா கால் பண்ணவோ மெசேஜ் பண்ணவோ மாட்டேன். உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். பட் மிஸ் பண்ணிட்டே இருப்பேன். உங்க கால்'கு வெயிட் பண்ணிட்டே இருப்பேன் என்று நெடிய வசனம் பேசி கை நீட்டுகையில் அவன் கண்கள் சிவந்து கண்ணீர் தேங்கியிருந்தது. தன்னையும் அறியாமல் அவனிடத்தே கையினை கொடுத்தாள்.
ஸ்டே இன் டச் என்று கையை பின்னிழுக்க முயன்றவளை கை விட மறுத்தான். அந்த கலங்கிய கண்களை பார்த்து கொண்டிருப்பதால் கோபம் வரவும் மறுத்தது. கொஞ்சம் போர்ஸ் ஆக கையை விடுவித்து கொண்டு திரும்பினாள், குட்டியாய் ஒரு அதிர்ச்சி. அரங்கங்களை அழகுபடுத்த வைத்திருந்த முக்கால்வாசி பூக்கள் காணாமற் போயிருந்தது.
ஃப்ராட், என்ன இது?
இங்கிருந்து வெளிய போகணும்னா அரைமணி நேரம் ஆகும். ஆனா இது ஹேண்ட் மேட், உங்கள நெனச்சு உங்களுக்காகவே செஞ்சது.
எப்டிலாம் பேசுறான். யார்ட்ட டா இதல்லாம் கத்துக்குற? மனதுக்குள் சிலாகித்துக்கொண்டிருந்தாள். சமயமாகவே, மௌனத்தில் தலை அசைத்து பரஸ்பரம் பை சொல்லி கொண்டனர்.
திரும்பி விலகி நடக்கையில் இருவற்குள்ளும் இதயத்தில் மெல்லியதாய் ஒரு கனம். கார்த்திக் போன பிறகு சுஜி அவனை சீரியஸாக மிஸ் பண தொடங்கியிருந்தாள். சில நாட்களாய் ஒட்டுனியாய் வாழ்ந்த அவன் இன்மை கலங்க செய்தது. பேருந்தில் அவனை பற்றி யோசித்தவாறே வந்து வீடு சேர்ந்தாள்.
கார்த்திக்க்கோ சென்னை ரயில் ஏறி அமர்ந்தது முதல் அவன் நண்பரகளிடத்தே சுஜியை பற்றி புலம்ப தொடங்கி இருந்தான். எனினும் அவளிடம் வீராப்பாய் சொல்லிவிட்ட வார்த்தைகள் அவளை தொடர்பு கொள்ள தடுத்தது. தூக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. சுஜியின் நினைவில் மிதக்க தொடங்கினான். அவளோ "நானா போய் எப்படி பேசுவேன், புத்து பிங் பண்ண என்னவாம்?" திட்டிய படியே ஈகோவை கட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள்.
காலை ஐந்து மணிக்கு அவன் சென்னையில் கால் பதிக்கையில், "குட் மார்னிங் கார்த்திக்" சுஜியிடம் இருந்து வந்தது. அப்பொழுது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை சில வருடங்கள் கழித்து தாம் கணவன் மனைவி ஆக போவது.
ஆடம்பர, கோலாகலமான அந்த தமிழ் திருவிழாவில் ஒரு அழகான அணியச்சையான காதல் பூத்தது.
ஒரு காதல் சங்கீதம் கம்போஸ் ஆக தொடங்கியிருந்தது.
இது ஒரு காதல் சங்கீதம்!

எழுதியவர் : சரண்யா (5-Mar-17, 9:44 pm)
சேர்த்தது : Saranya
பார்வை : 643

மேலே