பொங்கல்

அந்த பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தில் உணவு உண்ணும் கூடம்.. அந்த நீள் சதுர மேஜையில் ஒரு கோடியில் அமர்ந்திருக்க, என் இலை காலியாக இருந்தது.. எப்பொழுதும் வேண்டியதை மட்டும் போட்டுக் கொண்டு மீதம் வைக்காமல் உண்ணும் (தின்னும்) பழக்கம்.. முன்னால் இலையை கண் கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டே வேண்டாதவற்றை தவிர்த்தேன்...

முறுக்கை நீள் வாட்டில் பொட்டதுபோல் ஒரு பொருள்.. இனிப்பு என நினைத்து 'வேண்டாம் சுவீட்' என்றேன்... 'இல்லை இது முறுக்கு' என்று போட்டு விட்டு அகன்றார்.. பொங்கல் இருந்ததே என்று கேட்க ஒரு வயதான அம்மணி 'இதோ' என்று அதற்கான ஒரு தனி இலை போட்டு அப்படியே கையில் இருந்த பாத்திரத்தைக் கவிழ்த்தாள்...

பாத்திரத்தில் இருந்த பூரியெல்லாம் கொட்டி கீழே சிதற... 'என்னம்மா இப்படிப் பண்ணிட்ட ..?' என்று சுற்றியிருந்தவர்கள் கேட்க.. அவர் 'இது ஷூட்டிங்கா.. நிஜமா...?' என்றார்.. 'இது கல்யாண மண்டபம்மா..' என, அப்பொழுதுதான் கவனித்தேன் அந்த வயதானப் பெண்மணிக்கு இரண்டு கண்களும் இல்லை... தட்டுத் தடுமாறி 'ஒரு வேளை சோறு போச்சே..' என்று முனகிக் கொண்டே வேகமாக நடக்கத் துவங்கினார்...

சற்று தள்ளியிருந்தவர், 'ஒரு வேளை சோறு போச்சேன்னு புலம்புது, எவ்வளுவு பெரிய வீட்டுக் கல்யாணம்.. ஒரு நாள் சம்பளம் பத்தாயிரம் என்பது கூடத் தெரியல'

எனக்கு ஐயோ பாவம் என்று இருந்தது. கல்யாணம் நடத்துபவர் எனக்கு நெருங்கிய நண்பர்தான்.. எப்படியாவது சொல்லி அந்தப் பெண்மணிக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று, சாப்பாட்டிலிருந்து எழுந்து பின் தொடர்ந்தேன்.. அவர் வேகத்துக்கு என்னால் பின் தொடர முடியவில்லை.. இருந்தாலும் விடவில்லை.. சமையல் அறை என்று நினைக்கிறேன். வலது பக்கம் திரும்பினார்.. நானும் திரும்பினேன்.. நிறையபேர் சென்று கொண்டிருந்தார்கள், அவரைக் காணவில்லை..

சமையல் அறைபோல் இல்லை. ஏதோ சிறு தொழிற்சாலைகள் போல் இருந்தது.. ஒன்றில் எட்டிப் பார்க்க தீர்கமாக நாமம் இட்டுக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒருவர்

"என்ன சார் வேண்டும், எல்லாவித மெஷினிங் வேலை செய்கிறோம்.. டூல் செய்து தருகிறோம்.."

"இல்ல சமயல் அறை" என்றேன்.. அவர் கை காட்டினார்...

சிறிது தூரம் செல்ல ஸ்டூல் மேல் இருவர் அமர்ந்திருந்தனர்.. கையில் ஸ்பானர் வைத்துக் கொண்டு, கொஞ்சம் கிரீஸ் அழுக்குடன்.. என்னைப் பார்த்து 'எங்க சார் இந்தப் பக்கம்..?' என்றனர் கோரஸ்ஸா. அப்பொழுத்தான் கவனித்தேன் கல்யாண வீட்டுக்காரரின் கம்பெனியில் வேலை செய்பவர்கள்.. 'கல்யாண வீட்டுக் கிச்சன்..' என்றேன் தயக்கத்துடன்... 'கிச்சன்லாம் கிடையாது சார்.. எல்லாம் டாஜ் விவெண்டாவிலிருந்து வருது...'

பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு Taj Cheff, ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் லாகவமாக ஒரு கரண்டி பொங்கல் போட்டார்.. அதில் ஒரு குழிவைத்து சட்னியும் போட்டார்.. இன்னும் டப்பாவில் நிறைய இடம் இருந்தது. சரி நமக்கு பொங்கல் கிடைக்கும் என மனதுக்குள் நினைக்க, 'என்னால் பொங்கலையும், தயிர் சாதத்தையும் ஒன்றாகப் பாக் செய்ய முடியாது' என்று கோபமாக் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்று விட்டார்..

ஏமாற்றத்துடன், சற்று தொலைவில் இருந்த சில கட்டிடங்களைக் காட்டி அங்கு என்ன என்று கேட்க... "அது கல்யாண வீட்டார், ஏசி அறைகள்" என்றனர்..

ஒரு குண்டு பெண்மணி கருப்பு நிறத்தில் தங்க நிற மெல்லிய பார்டர் போட்ட சேலை அணிந்து மெல்ல என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்..

பின்னணியில் "வா.. வா.. அன்பே.. அன்பே..." என்ற வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் பாடி நேற்று முக நூலில் பதிந்த பாடல் கேட்டுக் கொண்டிருந்தது...

சட்டென்று கனவு கலைந்தது...

---முரளி

எழுதியவர் : முரளி (7-Mar-17, 9:24 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : pongal
பார்வை : 243

மேலே