புரிதல்

முதலுரை:

எழுத்து.காம் இணையதள அனைத்து அன்பர்களுக்கும் வணக்கம். எனது பெயர் ரா அருள்மணி. இந்த தளத்தில் என்னுடைய முதல் கட்டுரை இது. வாசகர்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னுரை:

இங்கு மக்களின் ஒரு பொருள் மீதான இரு மன நிலை அல்லது இரட்டை புரிதலையும் இறுதியில் என்னுடைய கருத்தினையும் முடிவுரையில் பகிர்ந்துள்ளேன். கவிதையினையும் அதற்கான பொருள் விளக்கத்தையும் முதலில் காண்போம்.

பொருளுரை:
திரி பேசுகிறது.
____________
எண்ணெய் குடித்து என்னையும் அழித்து
உன்னை மிளிரச் செய்தேன் ஒளியே!
ஆனால் கூறிச் சென்றனர் மாந்தர்கள்
விளக்கு எரிந்தது என்று!
விளக்கம்:

ஒரு திரியானது "நான் எனது தாகத்திற்கு நீரைக் குடிக்காமல் குடிக்க முடியாத எண்ணெயை குடித்ததோடு
மட்டுமல்லாமல் உனக்காக நான் என்னை கொன்று உன்னை வாழச் செய்தேன்" என்று விளக்கிடம் கூறுவது போல் அமைந்துள்ளது.

நேரிடை பொருள் விளக்கம்:

"பாவம் ஒருபுறம் பழி ஒருபுறம்" என்பது போல் ஒளியினுக்காக திரி எவ்வளவோ தியாகம் செய்து இறுதியில்
அழிந்தும் போகிறது. ஆனால் அந்த திரிக்கும் புகழ் சேராமல்
ஒளிக்கும் புகழ் சேராமல் அந்த விளக்கு எரிந்தன என மக்கள் விளக்கை புகழ்ந்தனர் எனவும் மேற்சொன்ன கவிதையினுக்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு கொள்வது எதிர்மறை மனோ நிலையினை குறிப்பதாகும்.

உட்பொருள் (மறைபொருள்) விளக்கம்:

எரிதல் என்பது இங்கு ஓர் வினை. அதற்காக திரி அதிகம் தன் உழைப்பை செய்தது. ஒளியும் காரண காரியங்கள் நன்கு அமையபப் பெற்றமையால் தன் பங்கினுக்காக தன் தொழிலாகிய
ஒளிர்தலை நன்கு மிளிரும்படிச் செய்தது. இருப்பினும் ஒளிர்தலுக்காக திரி, எண்ணெய் மற்றும் ஒளி ஆகிய மூன்றினையும் தாங்கிய விளக்கினுக்கே தர்மப்படி புகழ் சென்றடைந்தது.

எது எவ்வாறாயினும் எவனொருவன் தன் வேலையை சரிவர செய்கிறானோ அதற்குரிய பலன் நிச்சயம் இறுதியில் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட கவிதையினுக்கு இவ்வாறு பொருள் கொள்ளல் நேர்மறை மனோ நிலையினைக் குறிக்கும்.

இங்கு விளக்கினை மட்டும் புகழப்படவில்லை.
திரியின் உயிர் தியாகமும் ஒளியின் மிளிர்ந்த திறனும் எண்ணையின் இன்றியமையாத நீர் போன்ற தேவையினையும்
ஆசிரியரால் சுட்டப்பட்டது என்பதறிக. ஆக எந்த ஓர் வேலையினுக்கும் அதற்குரிய மதிப்பும் மரியாதையும் நிச்சயம் கிடைக்கும்.

முடிவுரை:

உலகில் முற்றிலும் நல்ல செயல் முற்றிலும் தீய
செயல் என்று எதுவும் இல்லை. நல்லது என்பதும் தீயது என்பதும் பார்க்கும் அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்தது.

எனவே எந்த ஒரு செயலிலும் எது பெரும்போன்மையோருக்கு நல்லதெனப் படுகின்றதோ அதனை எவனொருவன் நேர்மையோடு திறம்பட உழைக்கின்றானோ அவனுக்குரிய மதிப்பும் மரியாதையும் வெற்றியும் சமூகத்தில் நிச்சயம் கிடைக்கும்.

நன்றி!!!

*************************************************************************************************

எழுதியவர் : ரா. அருள்மணி (8-Mar-17, 2:17 pm)
சேர்த்தது : R Arulmani
Tanglish : purithal
பார்வை : 270

சிறந்த கட்டுரைகள்

மேலே