நவயுவன்கள்

பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்ட் போனில் இருக்கின்ற ப்ளிப்கார்ட், ஸ்நாப் டீல், ஜபாங்க் போன்ற ஆப்ஸை வைத்தே தெரிந்து கொள்ளலாம். கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, அடிக்கிற வெயிலாக இருந்தாலும் சரி எப்போதும் அந்த குல்லா அட்டாச்சட் பனியனை தான் அணிவான். வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை ஊருக்கு வந்தான். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கியவன் குல்லாவை தலையில் இருந்து எடுத்து விட்டு “ச்சே” என்றான். ஏனெனில், பேருந்து நிலையத்திலே நிறைய டிரெண்டி பெர்னதத்துகள் நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு பாட்டி அவனிடம் பிச்சைக் கேட்டு வந்தார், நானும் உன்னை மாதிரி தான் என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டான். அச்சமயம், யார்ட்லி ரோஸ் வாசனை காற்றில் தவழ்ந்து வர வாசனை வந்த திசையை நோக்கி பல்லை இளித்தவாறே அந்த பாட்டிக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்தான். “லெட்ஸ் டேக் எ செல்ஃபி பாட்டி” என்றவாறு பாட்டியுடன் செல்ஃபி எடுத்த அடுத்த நொடி “ஹெல்ப்டு ஆன் ஓல்டு லேடி” என்று பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு லைக் பிச்சை கேட்டான். ஒருவன் கூட என்னவென்று கேட்கவில்லை. அதே நேரம் அவன் பிரெண்ட் லிஸ்டில் இருந்த ஜாஸ்மின் “இப்போ தான் எந்திரிச்சு பல்ல விளக்கினேன்” என்று பதிவேற்றிய ஸ்டேட்டஸ்க்கு நூற்றைம்பது லைக்ஸ். இதைக் கண்டு பெர்னார்டிற்கு ஒரு தார்மீகக் கோபம் வந்தது “ஆணுக்கொரு நியாயம், பெண்ணுக்கொரு நியாயமா? என்ன சமுதாயம் இது?”.
நேராக வீட்டுக்குச் சென்றான் பெர்னார்ட். அன்று பயணக்களைப்பில் தூங்கிப் போனான். மறுநாள் காலை தன் குட்டிச்சுவர் நண்பர்களான நாகராஜ், ராகவ் மற்றும் ஸ்டாலினை பார்க்க தன் யமாஹா ஆர்-15 பைக்கை எடுத்துக் கொண்டு நேராக குட்டிச் சுவற்றுக்கே போனான். சொல்லி வைத்தார் போல மூன்று பேரும் அங்கேயே இருந்தார்கள். கூடவே அவர்களின் எருமை மாட்டு சைஸ் பைக்குகளும் நின்றன.

“ஹாய் கைஸ்”
“மக்கா பெர்னதத்து ஆளே மாறிட்ட கேட்டியா, பைக் புதுசா மக்கா?”
“எஸ், ஆன்ட் கைஸ் கால் மீ பெர்னார்ட்”
“மக்கா! நாகராஜ் கேட்டியா பெர்னார்டாம், ஆட அறுத்திர வேண்டியது தான்”
“சரி சரி ஓவரா போவாதீங்க டே”
“அப்பிடி வா வழிக்கு, சென்னை போன உடனே நம்ம ஊரு பாஷை மறந்திருமோ”
“சரி இன்னிக்கு என்ன ப்ளான்”
“இண்ணு ஃபுல்லா சுத்தியோம் மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு போறம், ஃபோட்டோ எடிக்கியம், பேஸ்புக்ல போடியம்”
“ஓகே, லெட்ஸ் கோ மக்ளே”
எல்லோரும் கிளம்புகிறார்கள் பைக்கில் இறக்கைக் கட்டி பறக்கத் துவங்குகிறார்கள் நவயுவன்கள். அழகியமண்டபத்தில் டிராபிக் ஜாம்.
“அய்யோ! ச்சே என்ன மக்கா? என்ன ஆச்சு?”
“குளச்ச – குலசேகரம் ரோட்டுல ஆக்சிடென்டாம்”
“அப்படியா! இரு வாறன்”
“டேய் எங்க போற”
“ரெண்டு ஸ்டில் எடுத்திட்டு வாறன் இரு”
“அந்த சைடு போவ முடியாது போல தக்கல வழியா போவம் வண்டியக் கிளப்பு”
“ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணியாச்சா?”
“பண்ணியாச்சு, பண்ணியாச்சு”
தக்கலை அருகே, அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
“மக்கா பைக்க நிறுத்து, ரெண்டு ஸ்டில் எடுக்கட்டு”
“அதையும் போட்டாச்சா?”
“பின்ன லைக்குக்க பெகளம் தான்”
ரோட்டருகில் நடமாடிய மக்களை எல்லாம் கதிகலங்கச் செய்யும் வேகத்தில் பறந்து மாத்தூர் தொட்டிப் பாலத்தை அடைந்தார்கள்.
“மக்கா இவ்வளவு தொட்டிய கட்டிச் சும்மா போட்டிருக்கு, தொட்டில தண்ணியே இல்ல”
“சும்மா நடக்கேதுக்கே கஷ்டமாயிருக்கே, இந்த கைப்பிடில ஒரு ஆள் தலைல சும்மாடு வச்சிட்டு நடந்துருக்காராம்”
“யம்மா! சும்மாளே நமக்கு வயத்த பிரட்டுதே, ஆமா! அதெல்லாம் ஃபேஸ்புக்ல வரல்லியே?”
“அதெல்லாம் பண்டு நடந்தது”
அங்கிருந்து திற்பரப்பு சென்று நன்றாகக் குடித்துக் குளித்துவிட்டு கிளம்பினார்கள் நம் நவயுவன்கள். வரும் வழியெல்லாம் ஒரே ரேஸ் தான். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி முந்திக் கொண்டிருந்தார்கள். சர் சர் என வாயு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது பைக். வேர்கிளம்பி அருகே ஒரு மணல் பரப்பில், யாரும் எதிர்பாராவண்ணம் பெர்னார்டின் பைக்கை சரேலென ஒரு பக்கமாக ஐம்பது மீட்டர் தூரத்திற்கு இழுத்துப் போனது. பின்னால் வந்த மூன்று பேரும் “மக்கா” என ஒரே நேரத்தில் கத்த பெர்னார்டு இரத்தம் தெளித்து ரோடு சுத்தமாகியிருந்தது.
“யாராவது வாங்க, யாராவது வாங்க சா ஆ ஆ ஆர்”
யாரு வருவாங்க!!, அவ்வளவுதான். அப்போது ரெண்டு மூன்று பைக்குகள் சற்று தொலைவில் வந்தன.
“மக்கா ஸ்டில் எடுத்தாச்சா? சூம் போட்டு எடு மக்கா”
“ எடுத்தாச்சு ஃபேஸ்புக்ல போட்டாச்சு, போலாம் ரைட்”
மூன்று நாட்கள் கழிந்தது, நாட்டி நாகராஜின் ஃபேஸ்புக் புகைப்பட ஸ்டேட்டஸ்,
“போஸ்டராகிப் போன என் நண்பன்”
“மூன்றாம் நாள் நினைவு அஞ்சலி, ஃபீலிங் சேட்”

எழுதியவர் : நிக்கல்சன் (8-Mar-17, 9:20 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 215

மேலே