காகித அடிமைகள் -கங்கைமணி

கருவக்காடு நீரைக்குடிச்சு
வறண்ட பூமியா மாத்திப்புடிச்சு.

விளைஞ்ச வயலு வீணாப்போச்சு
வெளக்காரன் உரத்துல மாஞ்சு.

குளமும் குட்டையும் எங்கடா போச்சு
குடியிருப்பு கட்டி வித்துப்புட்டாச்சு.

மரங்களையெல்லாம் வெட்டி வித்தாச்சு,
செயற்கை மரங்களை நட்டுவச்சாச்சு.

மலைத்தொடரெல்லாம் அறுத்தெடுத்தாச்சு
சலவை கல்லாக்கி ஏத்திமுடிச்சாச்சு.

காடுகள் அழிஞ்சு சமவெளியாச்சு
காட்டு விலங்குக்கு அடைக்கலம் போச்சு.

கடலையும் மேவ கருவிவந்தாச்சு
கடலலை சுனாமியாய் உருமாறிப்போச்சு.

பருவத்தில் பொழியா மழையும்மாச்சு
பட்டத்தில் விளையும் விதையும் போச்சு!.

காற்றில் பிராணன் இல்லாமல்ப்போச்சு
இரைப்பு நோய்க்கு உயிர் இரையாச்சு.

கனவில் நிலையா பெண்மையும் ஆச்சு
தினவை அடக்கும் ஆண்மையும் போச்சு.

அடிப்படை அறியா ஆன்மீகமாச்சு
ஆத்திகப்பேச்சு அறிவற்றுப்போச்சு.

விதைகளை இழந்த பழங்களுமாச்சு
விஞ்ஞான வளர்ச்சி வேரறுத்துருச்சு!.

இயற்கையை அழிச்சு எல்லாமும் ஆச்சு
ஈன்றவர் மடியில் இடிவிழுந்துருச்சு.

கொடும்பெரும் துயரினில் கொதிக்குது இயற்க்கை
கொஞ்சம் அசைந்தால் அடங்கிடும் செயற்கை !

பண்டை மனிதர் உழைப்பினை மதித்தர்
பண்டம் மாற்று முறையினை வளர்த்தர்.
பணத்தை படைத்த கலியுக மனிதா
பிணத்திற்க்கேதடா மதிப்பென உணரா...,

குணத்தை கெடுத்து குடும்பம் விடுத்து
கோடி கோடியாய்..காகிதம் குவிக்க...,

ஆசையை அள்ளி பேராசையில் தள்ளி
அண்டம் கெடுத்து ஆகாயம் உடைத்து
கொண்ட இயற்கையை கொத்தோடழித்து.,
கருநாக தோட்டுக்குள் கரையானின் நிலைகளாய்
கார்ப்பரேட் கைகளில் கறைபட்ட குறைகளாய்
காசுக்கலையும் கடைநிலைப் பிறப்பே !

விளைநிலம் அழித்து வாழ்விடம் அமைத்து
வீடும் காரும் விருப்பமாய்..நிறைத்து
கூட்டு வாழ்வைக் குழிதோண்டி புதைத்து
குடித்துக் களித்து கொண்டாடும் மானிடா!...,

கொடியேறும் மரமோ வெடிவைத்து இருக்கு
குடிபோதை கொடுக்கும் கொண்டாட்டம் எதற்கு!
கோபுர கலசம் குப்பையில் கிடக்கு
குருடனின் கையில் குத்தீட்டி எதற்கு!

கல்கி அவதாரம் காண்கிறேன் நம்மில்
கலியுகம் அழிவதாய் அழுகிறேன் விம்மி....,

பின்வரும் உலகம் நீருக்கழுகும்
பிறக்கும் குழந்தை போருக்கழைக்கும்!!

அன்று....,

உயிரை எடுத்து ஓடு மனிதா..,
காகித அடிமையாய் சாவு மனிதா!!!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (10-Mar-17, 10:09 am)
பார்வை : 149

மேலே