என்ன செய்ய ஏது செய்ய - என்ன நானே கொலை செய்ய

வறண்ட பூமியிங்க
வாய்க்கா தண்ணி இல்லையிங்க.

திரண்ட மேகமெல்லாம்
தீண்டாம போச்சுதுங்க.

காஞ்சி போன மண்ணு எல்லாம்
பொண்ணு விளைஞ்ச பூமியிங்க.
ஆனா இப்போ
புல்லுக்கும் வழியில்லை
சொல்லி அழ யாருமில்ல.

விக்காத எல்லாத்தையும்
வித்து சேத்த காசுல

ஆழமா போட்டேனுங்க
ஆழ்துளை கிணறு ஒன்னு.

பத்தரமா எடுத்தேன் தண்ணி
பம்பு செட்டு உண்டு பண்ணி.

மணி போல சேகரிச்சு
அணி அணியா நடவு வச்சு
விடிய விடிய காவ வெச்சு
கொண்டுவந்தேன் பச்சை வெளி.

பக்கத்து வயக்காரனெல்லாம்
பார்த்து வயிறெரிய
நாத்து வளந்து வயலாச்சு
மனசு முழுக்க
சந்தோச புயலாச்சு

வீட்டுல இருப்பு கொள்ளாம
வயலுலயே வாழப்போனேன்.
காட்டுல இனி நான் தான் சிங்கமுன்னு
கனவுலயே ஆளப்போனேன்.

நெல்லு இப்போ கதிரு விட்டு
நெஞ்ச நிமித்தி நின்னுச்சு
ரொம்ப பெருசா வளந்துட்டான்னு
ஊரு முழுக்க என்னுச்சு

அறுவடைக்கு இன்னும் அஞ்சு நாளு.
ஆசையா வாங்க நினச்சேன்
ஆடு மாடு நாலு நாலு.

எங்கிருந்தோ வந்தானுங்க
கலர் காலரா சட்டப்போட்ட
கவர்மெண்டு அதிகாரிங்க -

காத்தெடுக்க போறோமுன்னு
காட்ட விட்டுப் போகச்சொல்லி.

உழவு நிலத்துல காத்தெடுத்தா - நாடு
இழவாகிப் போகுமுன்னு
எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் - ஏறல
எவனுக்கும்.

கழுத்துல கத்தி வெச்சு
கையெழுத்து தான் வாங்கி
கதறி அழும் கண்முன்னே
கதிரறுத்துப்போட்டானுங்க.

என் உயிரறுத்து போட்டிருந்தா
ஒத்த உசுரோடப் போச்சு.
பயிரறுத்து போட்டானுங்க
மொத்த உசுரும் செத்துப் போச்சு.

வறண்ட பூமியை வயலாக்க தெரிஞ்ச
என்னால -
உயிர் மண்ணுக்குள்ளே காத்தெடுக்கும்
விஞ்ஞானம் புரியல
தன்னால.

உயிரெடுத்த உடம்பு பிணமாகும்.
காத்தெடுத்த மண்ணும் தினம் சாகும்.

எடுத்து சொன்னேன் புரியல.
வேற வழி தெரியல.

உயிரை காத்த மண்ணு சாகும் முன்னே
உயிரை விட்டு சாவது தான் உத்தமமுன்னு
கயிறோட வந்திருக்கேன் -
கழனியக் கட்டிட்டு படுத்திருக்கேன்.

போய் வாறன் என் மண்ணே.
உலகத்தீர் கண் முன்னே.

சோறுபோட்ட விவசாயி
சாகப்போறேன். - என் மண்ண
கூறுபோட்டு கொல்லும்முன்னே
போகப்போறேன்.

காலம் சில கடந்து
காத்தெடுத்து தருவானுங்க.
வெறும் காத்த மட்டும் சாப்பிட்டுட்டு
காலங்காலமா வாழ்ந்திருங்க.

கழுத்துல கயித்தோட நிக்குறேங்க - கழனி பார்த்து
கதறி அழ வார்த்தை இன்றி திக்குறேங்க.

இப்போ நான் -

என்ன செய்ய ஏது செய்ய -
என்ன நானே கொலை செய்ய.

எழுதியவர் : இரா. தாமரைச்செல்வன் (10-Mar-17, 2:39 pm)
பார்வை : 540

மேலே