அன்பிற்காய் ஏங்கும் இதயவாசல்கள்

நமது கைகள் பினணந்தபடி இருக்கின்றன
நமக்குள் ஊடல் தொடர்கிறது
நான் வார்த்தைகளில்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
இறுகி இறுகி
இலகுகின்றன
நம் விரல்கள்
ஊடல் முற்றுகிறது
கைகளை நாம் உதறிக்கொள்கிறோம்

ஒரு கரிய இருளின் மொளனம்
நம்மை கவ்விக்கொள்கிறது
ஒற்றைக் கழுகின் கால்நகங்களில்
இருவேறு இரைகளாய் சிக்கிக்கொள்கிறோம்
இனி
அதன் அலகுகளால் நாம்
கொத்தப்படலாம்

நீயும் நானும் விரோதிகளல்ல
என்பதை ஆபத்திலும்
அந்த அகந்தை கழுகு உணர்த்துகிறது
இனியும் தொடரவேண்டும்
யுத்தம் நம்மில் அல்ல
ஒருபொது விரோதியோடு
போராடியாகவேண்டும்
நாம்

இப்போதும் தாமதமில்லை
இணைவோம் வா பெண்ணே
உறவு என்பது சுமையல்ல
அது நம்மை
உயிர்ப்பிக்கும் சுவாசம்
இணைந்தே இருவரும்
இந்ந அகந்தை கழுகின்
கால் நகங்களை பிளந்து
விடுதலையாவோம்

அன்பிற்காய் ஏங்கும்
இதயவாசல்கள்
என்றும் அடைக்கப்படுவதில்லை


ஒரு புதுவிடியல்
மலரப்போகிறது
வாழ்க்கையெனும் வசந்தம்
நமக்காக காத்திருக்கிறது.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (10-Mar-17, 9:27 pm)
பார்வை : 1408

மேலே