காதல் பழக வா -13

காதல் பழக வா-13
உறவென்று உன்னை
நினைத்து உன்னோடு
உறவாட நான் வரவில்லை....
உன்னை பந்தாட தான்
உன் பாசவலையில்
பதம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்....
கண்ணா நீ இனி
தோற்க வேண்டும்....
தேற்றிக்கொள் உன் மனதை.......

கண்ணனை எப்படியெல்லாம் திட்டியிருப்பார்கள், அவன் அவமானத்தில் எப்படியெல்லாம் கூனிக்குறுகி முகம் சிவந்து தலைகுனிந்து நின்றிருப்பான், இதை தெரிந்து கொள்ள ராதியின் மனம் துடித்துக்கொண்டிருந்தது....
விடிந்ததும் விடியாததுமாய் தலைக்கு குளித்து புத்தம் புது மலராய் ஆர்வக்கோளாறில் அத்தனையும் மறந்து இரவு கண்ணனுக்கு நிகழ்ந்த அவமானத்தை இம்மி பிசகாமல் காதுகுளிர கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென துள்ளிக்குதித்து கொண்டு ஹாலுக்கு வந்தவளுக்கு அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது, தனக்கு எத்தனை பெரிய கொடுமை நடந்திருக்கிறது, கேவலம் ஒரு நொடி அவன் தலைகுனிந்ததுக்கு போய் ஏதோ பெரிய சாதனை படைத்தவளை போல் அல்லவா நடந்துகொள்கிறோம்.....ராதி உன் நிலையை நீ மறந்துவிடாதே, நீ இப்போது வில்லியாக அதுவும் பேசாமலே காரியம் சாதிக்கும் வில்லியாக மதிநுட்பத்தோடு அல்லவா நடந்துகொள்ள வேண்டும், குழந்தை தனமாய் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆனந்தப்பட்டு கொண்டாடிக்கொண்டிருந்தால் நினைத்ததை சாதிப்பது கடினமாகிவிடும், இனி கவனமாக இரு என்று தனக்கு தானே படிப்பினை கூறிக்கொண்டு முகத்தில் சோகத்தை பூசிக்கொண்டு மெதுமெதுவாய் அவள் காரியத்திற்கு கைகொடுக்க யாரவது இருக்கிறார்களா என தேட ஆரம்பித்தாள்.....

"அண்ணி, இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, பெரியம்மா இப்போ தான் உங்களை ரூம்ல காணோம்னு என்ன பாத்துட்டு வர சொன்னாங்க, நீங்க இங்க நிக்கறத பாக்காமல் நானும் வீடு முழுசும் தேடிட்டேன், நல்லவேளை இப்போ கண்டுபிடிச்சிட்டேன், சரி வாங்க அண்ணி, ரூம்க்கு போகலாம்....."

அண்ணியாம் அண்ணி, யாருக்கு யார் அண்ணி, உங்க அண்ணன் என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான், அவனோட இருக்க உறவை யே தொலைக்கறது எப்படினு நான் திட்டம் போட்டுட்டு இருக்கேன், இப்போ தான் புதுப்புது உறவ சொல்லிட்டு என்னோட ஓட்ட பாக்கறாங்க, ராதி இனி தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும்...

"அண்ணி என்ன பகல்லயே கனவு காண ஆரம்பிச்சிட்டீங்க, அண்ணனோட ரொமான்ஸ் பண்றிங்களா,அப்போ நான் போய்ட்டு அப்புறமா வரட்டுமா" கேலி செய்து கொண்டு அவள் சிரிக்க ராதிக்கு ஒருபடி நெருப்பை அள்ளி தலையில் கொட்டியது போல் இருந்தது.....இருந்தாலும் முகத்தில் செயற்கையாய் வெட்கத்தை பூசிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்....

"அதெல்லாம் இல்ல, பாவம் நேத்தே கண்ணன் அத்தான் எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிட்டாரு, அதுக்கே நான் எப்படி அவரை சமாளிக்க போறேன்னு தெரியல, ஆமா எல்லாரும் அவரை ரொம்ப திட்டிட்டாங்களா" உள்ளுக்குள் நடந்ததை தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் முகத்தில் தன்னால் தான் அவருக்கு கஷ்டம் என்ற சோகம் அப்பிய முகபாவமும் காட்டிக்கொண்டு ராதி கேட்க....

"அண்ணனை எதுக்கு எல்லாரும் திட்டனும், நீங்க கேட்கறதே புரியலையே அண்ணி" என்ற ஒரே வார்த்தையில் ராதியின் கொஞ்சநஞ்ச நிம்மதியும் எங்கோ ரயில் ஏறிக்கொண்டு ஓடியே போய்விட்டது..

"நேத்து என்னையும் அவரையும் ஒண்ணா பாத்தாங்கள்ல, அதுக்கு அவரை திட்டிருப்பாங்களே அத பத்தி தான் கேட்கறேன்"

"அட போங்கண்ணி, நீங்க ரொம்ப பாவம் தான், அண்ணனை பத்தி உங்களுக்கு இன்னும் முழுசா தெரியல, அண்ணனை யாராவது திட்டிட முடியுமா, அண்ணா நாலுவார்த்தை சேந்து பேசினாலே இந்த வீட்ல இருக்கறவங்க மயங்கிடுவாங்க, அந்த அளவுக்கு அண்ணா மேல மரியாதையும், பாசம் தான் எல்லாருக்கும் இருக்கு, திட்ற அளவுக்கு யாருக்கும் துணிச்சலும் இல்ல, அதுக்கான தேவையும் இல்ல"

இந்த பதிலில் ராதியின் ஆர்வம் பொசுங்கி போய் ஏமாற்றம் அவள் மனதை அடைத்தது.....

"அப்போ நேத்து அவரை யாரும் திட்டலையா"என்று ஏமாற்றத்தோடு கேட்க

" நீங்க திட்டணும்னு எதிர்பார்த்தீங்களா அண்ணி"
இந்த கேள்வியில் ராதி சுதாரித்துக்கொண்டு தன் சாதுர்யத்தை மீண்டும் பட்டைதீட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்......

"இல்லையில்லை, நான் போய் அப்படி நினைப்பேனா, எங்க அவரை திட்டிருப்பங்களோனு நேத்தெல்லாம் எனக்கு ஒரே கவலையா இருந்தது, அவர்கிட்ட பேசலாம்னா அதுவும் முடியலை, அவர் என் மேல கோவப்படுவாரோன்னு வேற மனசுல கொஞ்சம் பயம்.....அதான் உன்கிட்ட விசாரிச்சேன்...."

"அண்ணி உங்க முகத்துலயே உங்க மனசுல இருக்க கவலை தெரியுது, நீங்க வருத்தப்படற அளவுக்கு ஒன்னும் நடக்கல, ஆனா ஒரு சந்தோஷமான விஷயம் தான் நடந்தது......"

ராதி புரியாமல் விழிக்க அவளே விட்ட செய்தியை மீண்டும் தொடர்ந்தாள்......

"பத்து நாள் தள்ளி இருந்த உங்க ரிஷப்ஷன் அடுத்த வாரத்துலயே நடக்க போகுது, அதாவது இன்னும் ஆறே நாள்ல......இத கேட்டதும் உங்க கவலையெல்லாம் மறந்து போயிருக்குமே"

"ஆமா, எவ்ளோ சந்தோஷமான நியூஸ், இப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு, சரி அத்தை கூப்பிட்டாங்கனு சொன்னியே நாம ரூம்க்கு போகலாமா" மனபாரம் தாங்காமல் கண்ணில் நீர் வெளிவர முயன்றுகொண்டிருக்க அங்கிருந்து நகர்ந்தாள் போதுமென்று இருந்தது ராதிக்கு.....

"அண்ணி பெரியம்மாகிட்ட நான் சமாளிச்சிக்கிறேன், நீங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சே ரூம்க்கு வாங்க போதும்" என்று பீடிகை போட்டு பேசிவிட்டு ஓடியவளை புதிராக பார்த்துக்கொண்டிருந்த ராதிக்கு பின் யாரோ நிற்பதை போல் உணர்வு தோன்ற திருப்பி பார்த்தவள் மனம் ஒருநிமிடம் திடுக்கிட்டு போனது...... அங்கு வசீகரமான புன்னகையோடு கண்ணன் நிற்க வெட்கத்தில் சிவக்க வேண்டிய ராதியின் கன்னங்கள் கோபத்தில் சிவந்தது.....

"ராதி தான உன்பேரு, நைஸ் நேம், ஆனா ராதிகா மாதிரி நல்லாவே நடிக்கற........."

"இத்தனை நாளா நான் ராதியா தான் இருந்தேன், இப்போ தான் ராதிகாவா நடிக்க ஆரம்பிச்சிருக்கேன், அதுவும் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்"

"பரவாலேயே நடிக்க தான் வரும்னு நினச்சேன், நல்லா பேச கூட வருதே"

"பேசாமயே பலபேரு அடுத்தவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு இருக்கும்போது பேசியாவது சொந்த வாழ்க்கையை காப்பாத்திக்கறதுல தப்பில்லன்னு நினைக்கிறேன்"

"இப்போ தான ஆரம்பிச்சிருக்க, பாக்கலாம் உன் விளையாட்டையும்"

"ஆமா, முதல்ல விளையாட்டை ஆரம்பிச்சது நீங்க தான, பரவால்ல உங்களை போல வசதி படைச்சவங்க எல்லாரும் வாழ்க்கையை விளையாட்டா நினைக்கறது, அப்போ தான நியாயம் ஜெயிக்கும்போது உங்க தோல்வியை கூட விளையாட்டா எடுத்துக்க முடியும்"

"நியாயம் ஜெயிக்குமான்னு தெரியாது, ஆனா இந்த கண்ணன் எப்பவுமே தோத்தது இல்லனு எல்லாருக்குமே தெரியும்"

"நல்லா காமெடி பண்றிங்க, ஆனா இந்த கேவலமான நம்பிக்கை ஓர்நாள் பொய்யாகும்போது உங்களை எல்லாரும் காமெடியா பாப்பாங்க, அத மறந்துடாதீங்க"

"எத மறக்கணும், மறக்கக்கூடாதுனு எனக்கும் தெரியும்...இப்போ நான் மறக்கமுடியாத ஒன்னு நீ என் மனைவி....ஒரு வாரத்துல ஊரே பாக்கறமாதிரி நமக்கு ரிஷப்ஷன்.....இதை நீயும் மறந்திடாத"

அதற்கு மேல் ராதியால் அங்கு நிற்க முடியவில்லை, நான் இவனுக்கு மனைவியாம், இதை இவன் மறக்க மாட்டானாம், என்ன கேவலமான மனிதன்......கடத்திக்கொண்டு வந்து இவன் வீட்டில் சிறைபிடித்துவைத்துவிட்டு மனைவியென்று அந்தஸ்து குடுத்தால் அடங்கி இவன் மடியில் விழ வேண்டுமா, இதில் ரிஷப்ஷன் ஒன்று தான் குறை......எப்படியெல்லாம் பேசி அவன் வீரத்தை காட்டுகிறான், இப்படியெல்லாம் பேசினால் பயந்துபோவேன் என்று கனா காண்கிறான் போல, பைத்தியம்…. இனி தான் அவனை நான் ஒருகை பார்க்கப்போகிறேன், அவனுக்கு இனி தான் இருக்கிறது...கொந்தளித்துக்கொண்டே நடந்தவளுக்கு அவள் ரூமை அடைந்ததுகூட தெரியாத அளவு கோபம் அவள் கண்ணையும், கருத்தையும் மறைத்திருந்தது.........

எழுதியவர் : இந்திராணி (11-Mar-17, 12:39 pm)
பார்வை : 670

மேலே