தமிழ் மூலம் அறிவு வளர கிளை நூலகங்களின் பங்கு

நம்மில் பலர், இளைஞர்கள் மட்டுமின்றி, என்னைப் போன்ற வயதில் மூத்தவர்களும் தொலைக்காட்சி, வலைத்தளம், கைபேசி என்றே பொழுதைக் கழிப்பதால் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதுவும் தமிழில் புத்தகங்களை படிப்பதோ இன்னும் மோசமான அளவுக்கு குறைந்து விட்டது. இந்தப் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும்.

என்னுடைய கருத்து என்னவென்றால் ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ நூல்களை படிக்கக் கூடாது என்பது அல்ல.ஆங்கிலத்தையும் மற்ற மொழிகளில் அவரவர்க்கு முடிந்ததையும் நன்கு கற்று அந்த மொழிகளிலும் நிறைய நூல்களை படித்து அறிவையும் சிந்தனையையும் நன்கு வளர்த்துக் கொள்வது நன்மையே என்று ஆணித்தரமாக சொல்வேன்;

ஆனால் தமிழை நன்கு படிப்பதும் தமிழ் மூலம் அறிவையும் சிந்தனையையும் வளர்ப்பதும் தாழ்வு என்ற மனப்பான்மை அல்லவா தற்போது நிலவுகிறது! இந்த மனப்பான்மை மிக்கவும் வருந்த வைப்பதும் கண்டிக்கத்தக்கதும் அல்லவா?

ஆனால் எல்லோராலும் எல்லா நூல்களையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியுமா? முடியாதுதான்; ஆனால் அது பிரச்னை இல்லையே! முடிந்த அளவு அதிக நூல்களை அனைவரும் விலைக்கு வாங்காமல் படித்து மகிழ்வதற்காகத் தானே அரசாங்கம் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாக கிளை நூலகங்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது!

இக்கிளை நூலகங்கள் வெள்ளிக் கிழமையும் அரசு விடுமுறை நாட்களும் தவிர எல்லா நாட்களும் இயங்குகின்றன;இவை பெரும்பாலும் காலை மூன்று மணி நேரமும் மாலை மூன்று மணி நேரமும் இயங்குகின்றன. கிராமங்களில் காலை மட்டுமா அன்றி மாலையும் உண்டா எனத் தெரியவில்லை;ஆனால் மாலை மட்டும் என்று வைத்துக் கொண்டால் கூட தினம் மாலை போய் படிக்கலாமே! அல்லது முடிந்த நாட்களிலாவது போய்ப் படிக்கலாமே!

நான் அறுபது வயதில் பணி ஒய்வு பெற்றவன்; ஒய்வு பெற்றதும் நான் இருக்கும் நகரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிளை நூலகத்திற்கு பொழுது போவதற்காக ஒரு நாள் சென்றேன் ;அங்கே ஒரு பேராச்சரியம் எனக்கு காத்திருந்தது.அதாவது வார மாத அல்லது மாதமிரு முறை இதழ்கள் சேர்த்து, மொத்தம் கிட்டத் தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இருந்தன. அத்தனையும் தமிழ் பத்திரிகைகள்! தினமும் இரண்டு வேளையும் வந்தாலும் இவற்றைப் படிக்க நேரம் போதாதே! அதைப் படிப்பதற்குள் அடுத்த மாத பத்திரிகைகள் வந்து விடுமே! அத்தனையும் பல துறைகளிலும் அறிவை வளர்க்கும் பத்திரிகைகள்! சிந்தனையை தூண்டும் பத்திரிகைகள்!

கிளை நூலகங்கள் எனக்கு புதிதல்லதான். நான் பல வருடங்களுக்கு முன் அடிக்கடி போயிருக்கிறேன்தான்; ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு புத்தகங்கள் கிடையாது.ஆனந்த விகடன்,குமுதம், கல்கி கலைமகள் என்று பதினைந்து புத்தகங்கள்தான் பார்த்திருக்கிறேன். அதனால் நூலக உறுப்பினராகி பொழுது போவதற்காக கதை புத்தகங்கள் படிக்கவீட்டுக்கு எடுத்து செல்வேன்; இப்போது அதற்கு தேவையே இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்டபத்திரிகைகள்: ஆகா! என்ன அரிய வாய்ப்பு! நூலகத்துக்கு வந்து வந்து படித்து விட்டு போகலாமே!

இன்னொரு கிளை நூலகம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே போனேன். அங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள்! இந்த கிளை நூலகத்தில் உள்ள சில பத்திரிகைகள் அங்கு இல்லை என்றாலும், இங்கு இல்லாத சில பத்திரிகைகள் அங்கு இருந்தன! ஆக ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகள் இரண்டு கிளை நூலகங்களிலும் இருக்கிறதுதானே! இதற்கு மேல் என்ன வேண்டும்? மாநிலத்தில் உள்ள எல்லா அரசாங்க கிளை நூலகங்களிலும் இந்த மாதிரி நிறைய பத்திரிகைகள் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். பார்ப்பவர்கள் சொல்லவும்.
இந்த எழுத்து தளத்தில் உறுப்பினர்கள் அனைவரும், யாருக்கெல்லாம் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரவர் ஊரிலுள்ள கிளை நூலகங்களுக்கு காலையோ மாலையோ சென்று பலதரப்பட்ட தமிழ் பத்திரிகைகளை படித்து மகிழ்ந்து தமிழ் மூலம் அறிவை வளர்த்து, அந்த அறிவை கல்விக் கூடங்கள் செல்ல முடியாதோர்க்கும் மற்ற மொழி படிக்க இயலாதோர்க்கும், பணிச்சுமை காரணமாக நூலகம் செல்ல நேரம் இல்லாதவர்க்கும் ஊட்டி, அந்த அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் விழி வழி கற்றதை, அவர்கள் உங்கள் மூலமாக செவி வழி கற்று பயனடையட்டும்; அந்த சேவை செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டு கிளை நூலகங்களிலும் என்னென்ன பத்திரிகைகள் பார்த்தேன் என்று உங்களிடம் உதாரணத்துக்கு சில பத்திரிகைகளின் பெயர்களை பகிர்ந்து கொள்கிறேன் பெரும்பாலானவை மாதமொருமுறை பத்திரிகைகள்

கிளைநூலகம் ஒன்று: ஆன்மீகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், சிவ ஒளி போன்றவை.

மகளிர் பத்திரிகைகள்; மல்லிகை மகள்,மங்கையர் மலர் i

சிறுவர் பத்திரிகைக: ஜூனியர் மாஸ்டர், சம்பக், மாணவ கதிர், செல்லமே, கோகுலம் போன்றவை.

ஆரோக்கிய, மருத்துவ பத்திரிகைகள்; ஹெல்த் அண்ட் பியூட்டி, ஹோமியோபதி சுடர், ஆயுர்வேதம் டுடே,மூலிகை குழந்தைகள்

வணிகம் தொழில்,வேளாண்மை : வணிகமணி,கட்டுமான தொழில், தொழில் உலகம், வளர் தொழில், நவீன வேளாண்மை, பசுமை விகடன். ,

தமிழ் மொழி: தமிழ் நானுறு,, கவிதை உறவு, தாமரை இலக்கிய இதழ்

பல்வகை: மஞ்சரி,அம்ருதா.விஜய பாரதம்,அறிவுக்கண்,புதிய தலைமுறை,விளையாட்டு உலகம், கலைக்கதிர், தங்க மங்கை,புது வசந்தம்,அந்தி மழை,
வார பத்திரிகைகள்: ராணி,கல்கி,குமுதம்,கல்கண்டு ஆனந்த விகடன் போன்றவை;

கிளை நூலகம் இரண்டு:

ஆன்மிகம்: ஓம் சக்தி, கோபுர தரிசனம்,
சிறுவர் பத்திரிகை: பொம்மி
வணிகமும் தொழிலும்: தொழில் நேசன், பில்டர்ஸ் லைன் , பசுமை இந்தியா
மருத்துவமும் ஆரோக்கியமும்: ஹெல்த் ரிப்போர்ட்,மருத்துவ அறிவியல், ஹெல்த் டைம், நல் வழி
பல்வகை நூல்கள்: புதிய பார்வை, அறிக அறிவியல், திட்டம்,புதிய வாழ்வியல்,வளரும் தமிழகம், நமது நம்பிக்கை,, தன்னம்பிக்கை, போன்றவை

இத்தனை தமிழ் நூல்கள் அறிவை நமக்காக சுமந்து நிற்க, இந்த நூல்களை கிளை நூலகம் நமக்காக சுமந்து நிற்க, நாம் ஏன் ஆங்கிலத்தில்தான் அறிவை வளர்க்க முடியும் என்ற மாயையில் மூழ்கி கிடக்க வேண்டும்? தமிழில் படிப்பதையும் தமிழ் மூலம் அறிவு வளர்ப்பதையும் ஏன் கௌரவ குறைவாக நினைக்க வேண்டும்?

கிராம கிளை நூலகங்களில் ஒரு வேளை கொஞ்சம் குறைவான பத்திரிகைகள் இருக்கலாம்; எனக்கு தெரியவில்லை:ஆனால் அங்கே கிடைப்பவை அனைத்தையும் படிக்கலாமே!

இப்போது தமிழ் மூலம் அறிவை வளர்ப்பதில் கிளை நூலகங்களின் பங்கு அனைவருக்கும் புரிந்திருக்கும்!

தமிழ் மொழியை நன்கு கற்போம்; தமிழ் மூலம் அறிவை வளர்ப்போம்; வளர்த்த அறிவையும் தோன்றும் புதுமையான சிந்தனைகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.

வாழ்க தமிழ்!

எழுதியவர் : ம கைலாஸ் (11-Mar-17, 10:15 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 268

மேலே