ஆன்மிகம் அறிந்து செயல்படுவீர்

. கட்டுரை

ஆன்மீக ஒழுக்கம் அறிந்து செயல்படுவீர் !

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதற்கேற்றவாறு சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை கோவில்களை முன்னோர்கள் கட்டி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் கோவில்களைக் கட்டி வைத்து தெய்வ வழிபாடும் செய்து வந்துள்ளனர். அதில் அவர்கள் ஆத்ம திருப்தியும், மன அமைதியும் கண்டுள்ளனர். எனவே நாமும் தினமும் அவசியம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும். தினமும் செல்வதற்கு முடியாதவர்கள் வாரம் ஒருமுறையாவது, மாதம் ஒருமுறையாவது கோவிலுக்குச் சென்று இறை வழிபாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் நமக்கு மன அமைதி கிடைக்கும். மன அழுத்தமும் குறையும்.

தற்போதுள்ள கோவில்கள் மட்டும் இல்லையென்றால் மக்களில் எழுபது சதவீதப் பேர் பைத்தியமாக அலைந்து கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் தங்கள் மனப்பாரத்தை மன அழுத்தத்தைக் கோவிலுக்குச் சென்று இறக்கி வைக்கிறார்கள். அதில் நாத்திகவாதிகளும் விதி விலக்கல்ல. கோவிலுக்குச் சென்று வருபவர்கள் கோவிலில் உள்ள இறைவனிடம், தாங்களும் தங்கள் குடும்பமும் நலமுடன் வாழ வேண்டும், தங்கள் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்றுதான் பெரும்பாலும் வேண்டிக் கொள்கின்றனர். தற்போது பொதுநலம் வேண்டியும் பக்தியுடனும் கோவிலுக்குச் செல்பவர்கள் மிகவும் குறைவு.

அமைதி காக்கப்படவேண்டும்:
கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இறை சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும். தற்போது கோவிலுக்கு செல்பவர்களில் தனியாக சென்று வருபவர்கள், ஓரளவு இறை சிந்தனையுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வருகிறார்கள். ஆனால் கோவிலுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து சென்று விட்டால் , அவர்கள் அமைதியாகவும் , இறை சிந்தனையுடனும் கோவிலில் வலம் வருவார்கள் என கூற முடியாது. அவர்கள் கோவிலுக்குள் சென்றவுடன் , ஒப்புக்கு கருவறையில் உள்ள இறைவனை வணங்கி விட்டு , பிரகாரத்தை சுற்றிகொண்டோ, பிரகாரத்தின் ஓரத்தில் அமர்ந்துகொண்டோ தங்கள் குடும்ப விஷயங்களையோ, மற்றவர்களைப் பற்றியோ பேசிக் கொண்டும், சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கோவில் என்பது ஒரு புனிதமான இடம் என்றோ, மற்றவர்கள் அமைதியாக வழிபாடு செய்வதற்கு தங்கள் பேச்சும் சிரிப்பும் இடையூறு ஏற்படும் என்றுகூட அவர்கள் நினைப்பது இல்லை.

அப்படிபட்டவர்கள் பற்றியும் ஒட்டுமொத்தமாக குற்றம் கூற முடியாது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம்தான் குறிப்பாக மாமியார், மருமகள் கதாபாத்திரங்கள் மற்றவர்களுடன் கோவில் பிரகாரங்களில் வைத்துதான் தங்கள் சதித் திட்டங்களை தீட்டுவது , காதலர்கள் சந்தித்து பேசி மகிழ்வது போன்ற காட்சிகள் அமைப்பை எடுக்கிறார்கள். இது போன்ற தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பவர்கள் எப்படி கோவில்களில் அமைதி காப்பார்கள் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
மேலும் குடும்பத்துடன் கோவிலுக்கு வருபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் கோவில் பிரகாரங்களிலே ஓடிப்பிடித்து விளையாடுவதும், கைபேசியில் தங்கள் இஷ்டம்போல் படம் எடுப்பதுவும் , அதைப் பார்த்து சத்தமாக விமர்சனம் செய்வது. மொத்தத்தில் அவர்கள் கோவிலை புனிதமாகக் கருதாமல் , அதனைப் பூங்கா போன்றோ , பொழுதுபோக்கு இடமாகக் கருதி , கருதும்படி அவர்களது நடவடிக்கைகள் இருக்கும். இவையெல்லாம் மிகவும் வருத்தப்பட வேண்டியவைகள் ஆகும்.

சுத்தம் கடைபிடிக்க வேண்டும்:

கோவில் பிரகாரங்களில் , ‘கோவிலை பக்தர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள ஒத்துழையுங்கள்’ என பல இடங்களில் அறிவிப்புகள் காணப்படும். ஆனால் கோவிலுக்குச் சென்று வருபவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூடம் ஏற்றாதீர்கள் என அறிவிப்பு இருந்தாலும், சில பேர்கள் அவர்களுக்குத் தோன்றும் இடங்களில் சூடமேற்றி கரி பிடிக்க வைத்து விடுகிறார்கள் . நெய் தீபம், எண்ணெய் தீபம் ஏற்றுபவர்கள் சிலர் தீபம் ஏற்றுவதற்குரிய இடத்தில் வைக்காமல், அங்கு கூட்டம் அதிகமாக இருந்தால், பொறுமையில்லாமல் அவர்கள் அவசரமாக் அவர்களுக்கு தோன்றும் இடங்களிலெல்லாம் தீபங்களை ஏற்றி வைத்து விடுகிறார்கள் .அதனால் அந்த இடம் எண்ணெய் பிசுக்காகி விடுகிறது. இதையெல்லாம் பக்தர்கள் கவனத்தில் கொண்டு இதுபோன்ற தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கோவிலில் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களை பக்தர்கள் நெற்றியில் பூசிவிட்டு மீதமுள்ளவற்றை ஒரு காகிதத்தில் மடித்து செல்லலாம்.
சிலர் அவற்றை கோவில் சுவர்களில் அல்லது கண்ட இடங்களில் போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். கோவிலில் பக்தர்களுக்கு தரும் பொங்கல் போன்ற பிரசாதங்களை இலை மற்றும் தொன்னைகளில் வரிசையாக நின்று வாங்குவார்கள். அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சில பக்தர்கள் அங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். இன்னும் சில பேர்கள் பிரசாதங்களை வாங்குவார்கள், அதனை உண்ணாமல் கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் நடமாடும் இடங்களில் அப்படியே வைத்து விட்டு சென்று விடுகிறார்கள் அப்படிப்பட்ட பக்தர்கள் பிரசாதம் தேவையில்லையெனில் வாங்காமல் இருந்திருக்கலாம் அல்லது பிரசாதம் வாங்கி விட்டால் அதனை மற்றவர்களுக்காவது கொடுத்து விடலாம். இதை பலரும் கடைபிடிப்பதில்லை.

சுய கட்டுபாடுகள் :

கோவிலில் தீபாராதனை காட்டி முடித்தவுடன் அர்ச்சகர் தீபாராதனை தட்டுடன் வெளியே வந்தவுடன் , கூட்டம் அதிகம் இருந்தால் பக்தர்கள் சுய கட்டுப்பாட்டுடன் வரிசையாக சென்று தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு அமைதியாக வெளியே வரவேண்டும். ஆனால் அது வரைக்கும் பொறுமையுடன் இருந்தவர்கள், கற்பககிரகத்தில் உள்ள இறைவனே தலை குனியுமாறு, சில பக்தர்கள் தங்களுக்குள் இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் சென்று தீபத்தை கண்களில் ஒற்றிக் கொள்ள அவசரப்படுவார்கள். இவையெல்லாம் பக்தர்கள் சிந்தித்து சுய கட்டுபாடுடன் ஆன்மீக ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
கோவில் நிர்வாகிகளின் கடமைகள் :

கோவிலை பராமரிக்கவும் , கோவில் சம்பந்தப்பட்டவைகளை கவனிப்பதற்கும் நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த கோவில் நிர்வாகிகள் இருக்கிறார்களே என்னமோ அந்தக் கோவிலில் இருக்கும் கடவுளுக்கு அடுத்தது தாங்கள்தான் என்ற பந்தாவில், கோவிலுக்கு முன்பு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டும் ,சிரித்துக் கொண்டும் கோவிலின் அமைதியையும் சில கோவில்களில் உள்ள நிர்வாகிகள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். . கோவில் பிரகாரங்களில் “ அமைதி காக்கவும் “ என்ற அறிவிப்பு கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு மட்டும்தான் என்ற மனநிலையில் நிர்வாகிகள் கைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டு இருப்பதும் வெட்கப்படவேண்டியவை ஆகும்.

கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பு சமம் எனக் கருத வேண்டும். ஆனால் இந்த நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் வந்துவிட்டால், நாற்காலியைப் போட்டு அமரச்செய்து சொந்தக் கதை, சோகக்கதை என பேசுவது, சப்தமிட்டு சிரிப்பது ,அவர்களை சிறப்பாக கவனிப்பது. இதையெல்லாம் கருவறையில் இருக்கும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் நடந்து கொள்கிறார்கள்.

முதலில் அவர்கள் கோவிலுக்குள்ளே நாற்காலிகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும். கோவில் நிர்வாகிகள் எனத் தனியாக தெரிய வேண்டுமானால் கோவில் பிரகாரத்தில், பக்தர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு ஓரத்தில் சமுக்காளத்தை விரித்து உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையெனில் கோவிலுக்கு அருகே ஒரு அலுவலகம் அறையை கட்டி நிர்வாகிகள் நாற்காலிகளை போட்டு தங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். கோவிலில் அமைதி காக்கவும் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை கோவில் நிர்வாகிகள் உணரவேண்டும்

ஆன்மீக ஒழுக்கம்:

கோவில் ஒரு புனிதமான் இடம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் புனிதத்தை பாதுகாக்க சுய கட்டுபாடுடனும், ஆன்மீக ஒழுக்கங்களையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் கோவிலில் அமைதியையும், கோவிலை சுத்தமாக இருப்பதற்கும் கோவில் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, தவறாமல் ஆன்மீக ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோவில் நிர்வாகிகளும் கோவிலின் புனிதத்தை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து ஆன்மீக ஒழுக்கத்தை கடைபிடித்து , கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக தங்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என மனதில் கொண்டு ,அதன்படி செயல்பட வேண்டும். . பக்தர்கள் அனைவரும் ஆன்மீக ஒழுக்கங்களை கடைப்பிடித்து இறைவன் அருளைப் பெறுவீர்களாக !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (13-Mar-17, 1:06 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 171

சிறந்த கட்டுரைகள்

மேலே