மனிதம் இன்னும் சாகவில்லை நெஞ்சை தோட்ட சம்பவம் கவிதை நடையில்

மனிதம் இன்னும் சாகவில்லை



அந்தி மாலை நேரம்
ஏதோ சாலையோரம்
நடந்து போகும்போது
ஒரு துண்டு கடிதம் கண்டேன்

அது துண்டு கடிதமல்ல
என்னை தூண்டும் கடிதமாய்
வயதான மூதாட்டி
சொல்லும் செய்தி அதில் ஓட
என்னவென்று மனம் தேட

என் வயதோ எண்பது
காணவில்லை என் ருபாய் ஐம்பது
உழைத்துண்ணும் வயதல்ல
உற்றார் எனக்கு யாருமில்ல
சாலை வழியே செல்லும் மற்றோரே
நீர் கண்டால் என்னிடம் சேர்ப்பீர்
சில நாள் வாழ என்னுயிர் காப்பீர்
இன்னும் சில வரியும்
அதன் ஓரமாய் முகவரியும்

தேடி நான் கண்டேன்
அது ஓரமாய் ஒரு குடிசை
அதற்கும் ஆயிற்று பல அகவை
ஓரமாய் அமர்ந்திருந்தாள்
கடிதத்தின் எஜமானி ......

என் பணத்தை நான் கொடுத்தேன்
கண்டெடுத்ததாய் பொய் உரைத்தேன்
அப்போதும் வாங்காமல்
அவளும் எனக்கு பதில் உரைத்தாள்

தொலைந்தது என் பணமல்ல
யாரோ எழுதி வைக்க
இன்று காலை முதல் மாலை வரை
கண்டெடுத்த காசு என
என்னிடம் தந்தவர் ஏராளம்
எனக்கொரு உதவி செய்
எல்லோரிடமும் சொல்லி விட்டேன்
உன்னிடமும் சொல்லுகின்றேன்

எனக்காக செய்வாயா
கெஞ்சி என்னை கேட்டுக்கொண்டாள்
அந்த கடிதத்தை கிழித்துவிட்டு போ

யாருக்கும் மனமில்லை
எனக்கும் வரவில்லை
கடித்தது கிழித்தெறிய
ஒன்றுமட்டும் நான் உணர்ந்தேன்

மனிதம் இன்னும் சாகவில்லை

எழுதியவர் : ருத்ரன் (13-Mar-17, 6:56 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 121

மேலே