கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் அணிந்துரை கவிஞர் இரா இரவி

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை !

நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் !

அணிந்துரை கவிஞர் இரா .இரவி !


திருக்குறளால் தமிழுக்கு உலகளாவிய பெருமையை ஈட்டித்தந்த திருவள்ளுவருக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .திருக்குறள் போன்ற நல்ல கருத்துகளை உள்ளடக்கிய நூல் என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளது .

நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து இன்று நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர்களின் இலண்டன் மாநகரில் கல்லூரியின் துணை முதல்வர் என்ற பொறுப்பான கல்விப்பணி செய்து இலண்டன் பெருமைகளில் ஒன்றானவர். .

பல ஆசிரியர்கள் தான் உண்டு கல்வி உண்டு என்று சுருங்கி விடுவது உண்டு. ஆனால் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் பரபரப்பான கல்விப்பணிக்கு இடையே இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி கவிதை கட்டுரை எழுதி வருகிறார் .புதுயுகன்
கவிதைகள் நிறைய படித்து இருக்கிறேன் .அவரது கவிதை நூல்களுக்கு இணையத்திலும் மதிப்புரைகள் பதிவு செய்து இருக்கிறேன் .கட்டுரை இப்போதுதான் படிக்கிறேன் .வியந்து போனேன் .புதுயுகன் சகலகலா வல்லவராக இருக்கின்றார் .


கனவு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள் .திறமை என்ற பகுதியில் பத்து கட்டுரைகள் .பண்பு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள். ஆக மொத்தம் முப்பது கட்டுரைகள்.முத்தாய்ப்பான கட்டுரைகள் .இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள்கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு முந்தைய நூலிற்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள் .," நாம் புரட்டுவது புத்தகமல்ல படிக்கும் நம்மைப் புரட்ட வேண்டும் "என்பார்கள் .அந்த வகை நூல் என்பது உறுதி .

என்னுடைய நூலிற்கு கவிஞர் புதுயுகம் அணிந்துரை வழங்கி உள்ளார் .அவரது இந்த சிறப்பான நூலிற்கு என்னிடம் அணிந்துரை வாங்கியதை, பெருமையாகக் கருதுகின்றேன் .

வெற்றி = கனவு +திறமை +பண்பு உண்மைதான் இதனைப் படித்தவுடன் எனக்கு கவிஞர் மீரா எழுதிய" கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் " என்ற நூலின் நினைவு வந்தது. அந்த நூல் முழுக்க முழுக்க காதல் கவிதைகள். இந்த நூல் முழுக்க முழுக்க தன்னம்பிக்கை விதைகள் .


கனவு ,திறமை ,பண்பு இந்த மூன்றிக்கான விளக்கமே பிரமிப்பில் ஆழ்த்தியது .

" கனவு என்பது - வாழ்க்கை ,லட்சியம் ,தாகம் ,மனப்பான்மை ,தனித்தன்மை ,குறிக்கோள் ,விடாமுயற்சி ,திட்டமிடுதல் போன்றன.

திறமை என்பது - கனவை அடைய உதவும் கருவிகள் ,பல்வேறு திறன்கள் ,உழைப்பு ,ஆளுமை போன்றன.

பண்பு என்பது -கனவை அணையாமல் காக்கும் கருவிகள் ,மனித மாண்புகள் நம்மை சமன்படுத்தும் சக்தி ,கருணை ,நேர்மை ,அன்பு போன்றன."

நூலில் இருந்து பதக் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .

கனவு என்ற சொல்லப் படித்ததும் கனவு நாயகன் மாமனிதர் அப்துல் கலாம் என் நினைவிற்கு வந்தார் .அவரும் நம்மை கனவு காணச் சொன்னார் ."தூங்கும்போது காண்பதல்ல கனவு தூங்கவிடாமல் செய்வதே கனவு "என்றார் .அவரது கருத்துக்களை நினைவூட்டும் விதமாக நல்ல பல கட்டுரைகள் வடித்துள்ளார் .

கனவு கண்டு செயல் பட்டு வாழ்வில் வெற்றிக் கண்ட நூல் ஆசிரியரின் அனுபவ மொழிகள் . அற்புத வரிகள் .வைர வரிகள் .இந்நூலில் தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்பதே உண்மை .எழுத வேண்டிய கருத்துக்களை ரத்தினச் சுருக்கமாக ,செறிவாக எழுதி உள்ளார் . தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை .படிப்பதற்கு ஆர்வமாகவும் சுவையாகவும் ,பயனுள்ள தகவலாகவும் நூல் உள்ளது. உள்ளே சென்று படித்துப் பாருங்கள் .நான் எழுதியது உண்மை என்பதை நீங்கள் உணருவீர்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் பெருமையாகி விட்ட உலகத் தமிழ்ச் சங்கம் இந்த நூலை வெளியிடுவது நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகனுக்குப் பெருமையாகும் .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Mar-17, 9:59 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 281

சிறந்த கட்டுரைகள்

மேலே