தெளிவு

வாழ்ந்து முடித்த கோழியும்..
வாழப்போகும் முட்டையும்..
செத்துக் கிடக்கின்றன...
ஒரே தட்டில் பிரியாணியாய்!

மரணத்தின் சமதர்மம் சாப்பாட்டுத் தட்டில்
பந்தியாக பரிமாறப்படுகிறது
செத்ததை உண்டுவிட்டு செரிமானம்
சரியில்லாமல் மாத்திரைகளை வாங்கிக் குடித்து
மரணத்தை தள்ளிப்போட்டு வைக்கிறோம்

வானத்திற்கு கீழே நின்றுகொண்டு
மழைக்குப் பயம்கொண்ட மூடர்கள்
குடையைக் கண்டுபிடித்ததுபோல்
மரணத்திற்கு எதிரே நின்றுகொண்டு
வாழ்நாளை குடையாக ஏந்துகின்றோம்

ஓட்டை முதுகில் சுமக்கின்ற நத்தையைபோல்
வாழ்தலின் முதுகில் மரணத்தைத் தூக்கிக்கொண்டு
நடக்கின்ற தைரியசாலிகளாக இருந்தும்
அது வந்துவிடுமோ என்னும் பயத்தோடு
ஒட்டுகின்றோம் வாழ்நாளை.

வாழ்தலின் கடிகாரத்தில் கடத்தப்படுகின்ற காலம்
மரணத்தின் வெற்றியை துரிதகதியில்
நிகழ்த்தி விடுவதனை தடுத்து நிறுத்தும்
முயற்சிகளின் முன்னேற்பாடாக
உடற் பயிற்சிகள் செய்வோரைக் கூட
முறையோடு அழைத்துக்கொண்டு எப்போதும்
தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்கிறது மரணம்.

வாழ்க்கையைப் படிப்பதான சமூகத்தில்
மரணத்தின் வருகையைப் பற்றிய பதாகைகளை
முன்னிறுத்தி வைத்து வாழத்தொடங்கும்
வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத
மானுட இதயங்களின் உதயம்
ஒரு புதிய கிழக்கை உற்பத்தி செய்யக்கூடும்.

காலனின் பந்தியில் கோழியாகவோ
முட்டையாகவோ நம்மை பரிமாறும்
மறுமையைப் பற்றிய தெளிவில்
இம்மையை செம்மையாக்கலாமே.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Mar-17, 1:50 am)
Tanglish : thelivu
பார்வை : 98

மேலே