தமிழால் முடியுமா – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி

தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை. பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

பேராசிரியர் இ.அண்ணாமலை,:- இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற் றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.

இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

எழுதியவர் : (16-Mar-17, 7:24 pm)
பார்வை : 173

மேலே