எனது மலைகள் எனது மரங்கள்

மலை, மரம் இவையிரண்டும் என்னைப் போன்ற மேற்குத் தொடர்ச்சிமலை கிராமத்து மனிதர்களுக்கு வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கங்களாகும். பத்து வயதை எட்டும் பெரும்பாலான சிறுவர்கள் விறகு பொறுக்கவும், கால்நடைகளை மேய்க்கவும், கார்காலத்தில் பழுக்கும் பழங்களைப் பறிக்கவும் கட்டாயம் மலையேற வேண்டும். ஊரைச்சுற்றிலும் மலைகள்… உயர்ந்த மலைகள்…… கிழக்கில் திருவூற்றுமலை…… மேற்கில் மூங்கில் மலை…… தெற்கில் சங்கிலித்தொடர்…… வடக்கில் உள்கோம்பைஎன மலைகளுக்குள்ளேதான் எனது வாழ்வில் இளமை முழுதும் கழிந்தது. (காடு.. மலை… குன்று என்ற எங்களூரின் பெயர் கடமலைக்குண்டு எனத் திரிந்ததாகச் சொல்லுவார்கள்.)

“வருசநாட்டுக்குப்போனா வச்ச எடத்த சொல்லிட்டுப்போ…” என்று ஒரு பழமொழி உண்டுவருசநாட்டு மலைப்பகுதிகளின் அடர்த்தியை இந்தப் பழமொழி உணர்த்துகிறது. காமராசர் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு முறை எங்கள் ஊருக்கு வந்தாராம். அப்போது அகில் மரங்களையும் மூங்கில் மரங்களையும் வெட்டி ஒரு மைல் நீளத்திற்குப் பந்தல் போட்டிருந்தார்களாம். இதைப் பார்த்த காமராசர் வனத்துறை அதிகாரிகளுக்கு ”பாராட்டு”(?) பத்திரம் வாசித்த செய்தியை வயதான காங்கிரஸ்காரர்கள் இன்றும் சொல்லுவதுண்டு.

ஏறக்குறைய பத்து தலைமுறைக்கு முன் எங்கள் முன்னோர்கள் பஞ்சம் பிழைக்க வந்த இடம்தான் வருசநாட்டு மலைப் பகுதி. உள்காடு என அழைக்கப்படும் எங்கள் பகுதியில் கடந்த முன்னூறு ஆண்டுகளில் காடழித்து குடியேறியவர்கள் எங்கள் முன்னோர்கள்.

நான் முதன் முதலில் மலையேறியது எங்கள் ஊரின் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள மந்தைக் கரட்டில்தான். பள்ளி விடுமுறை நாட்களில் அதில் ஏறி எங்கள் ஊரின் அழகைப் பார்த்தது ஆனந்தமானது. அங்கிருந்த கிளுவை மரத்தில் ஏறி கிளை முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு இன்னும் உள்ளது. மரம்தான் இல்லை.

அதற்கடுத்த மலையேற்றம் மூங்கில் மலையில் நிகழ்ந்தது. மூங்கில் மலையிலிருக்கும் தேன்கல் பாறையில் ஏறி பூமியைப்பார்ப்பது சுகமானது. பச்சை அட்டையில் சிகப்புப் பேனாவால் கோணல் மாணலாக வரையப்பட்ட கோடுபோல வைகைநதி ஓடி வரும் அழகே தனிதான். தேன்கல் பாறைகளின் இடுக்கில் இருக்கும் தேனடைகளைப் பார்க்கும் போதெல்லாம் ”தேனருவி திரையெழும்பி வானின் வழி ஒழுகும்”… என்ற குற்றாலக் குறவஞ்சியின் பாடல் வரிகள் நினைவில் வந்து போகும். மூங்கில் மலையின் உயர்ந்த மரங்களிலிருந்து கூவும் பெயர் தெரியாத பறவைகளின் கூக்குரலில் நான் பரவசமடைந்ததுண்டு.

மேகமலை எங்கள் ஊரின் அருகில் உள்ளது. இங்கிருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது.. தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்த மலைகள் என்று சொல்லப்படும் பச்சைக்கூமாச்சி மற்றும் வெள்ளிமலைகள் மீது ஏறியிறங்கிய அனுபவங்கள் ஏராளம். ”பச்சை மரகதப் பட்டு உடுத்தி படுத்துக் கிடக்குது இயற்கை”… என்ற வையம்பட்டி முத்துச்சாமியின் பாடல் வரிகளின் உயிர்ப்பை அங்குதான் கண்டேன். பச்சைமலைகளின் மீதான பயணங்களில் நாங்கள் அனைவரும் மனசெல்லாம் பசுமை பூசிக்கொண்டது போலொரு உணர்வில் வாழ்ந்த காலமது. பெயர் தெரியாத மரங்களின் பூக்கள்…… காய்கள்….. கனிகள்………. சில்லென்ற அருவிகளின் குளிர்தென்றல்…… என அணி நிழல்காடுகள் கொண்டது எனது பூமி…….

எங்கள் ஊருக்கு மேற்கில் தொடங்கும் வெள்ளிமலைச் சாலை 45 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் பத்தாவது கிலோமீட்டரில் தொடங்கும் வனப்பகுதி போகப்போக அடர்ந்துகொண்டே போகும். உயர்ந்த மலைகளும், விண்முட்டும் மரங்களுமே எங்கள் பூமிக்கான அணிகலன்கள். தேக்கு, மருது, தோதகத்தி, அகில் சந்தனம், காட்டுமா, கூட்டப்பரா, புங்கை, புளி, ஆல், அரசு, கடம்பம், வாகை, மலைநெல்லி, போன்ற அபூர்வ வகை மரங்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்தன. மரங்களில் இருந்த தேனடைகளைப் பார்த்த போது

“தாமரைக் தண்தா தூதி மீமிசைக்

சாந்தின் கொடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர்கேண்மை“ எனும் சங்கப்பாடலே நினைவுக்கு வந்தது.

இருபதாண்டுகளுக்கு முன் நாங்கள் முதன் முதலாய்ச் சென்றபோது ஒரு மரத்தின் அடிப் பகுதியை பத்து நபர்கள் கைகோர்த்து அளந்தோம். மரத்தின் அடியிலிருந்து அன்னாந்து பார்த்தால் நுனி தெரியவேயில்லை. வானம்தான் தெரிந்தது. மிகவும் விலை உயர்ந்த அபூர்வ வகையான அகில் மர காடுகள், இங்கு 12 கி.மீ., நீளம் 15 கி.மீ., அகலத்தில் உள்ளன.

கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உருவாகும் மேகமலை அருவியில் நீராடுவதற்காக மலை மீதேறி நடந்து செல்வது இனிமையானது. உடங்கல் அருகிலிருந்தும், வெள்ளிமலையின் அடிவாரத்திலிருந்தும் உருவாகிவரும் பல கிளையாறுகள் ஓன்றுகூடுமிடம்தான் ஓயாமாரி.(ஓயாமல் மழை பெய்வதால் ஓயாமாரி என்ற பெயர் வழங்கலாயிற்று)

ஓயாமாரிக்கு பல சிறப்புகள் உண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் வருசநாட்டு மலைப்பகுதிக்கு உட்பட்ட கண்டமணூர் ஜமீனை ஆட்சி செய்ய ஜமீன்தார் தனது நண்பனான பளியன் சித்தனோடு வாழ்ந்த இடம்……. 1980 களில் ஈழப்போராட்டம் உச்சத்திலிருந்து போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தங்கியிருந்து பயிற்சி எடுத்த இடம்…….. தற்போது அந்த இடம் பிரபாகரன் மொட்டை என்று அழைக்கப்படுகிறது. (மொட்டை என்பது உயரம் என்ற வட்டார வழக்குச் சொல் )…. வைகையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மூல வைகைத் திட்டம் உருவாக இருந்த இடம். (இப்போது எம்.ஜி.ஆரைப்போலவே இத்திட்டமும் சமாதியிலிருக்கிறது).

வருசநாட்டு மலைப்பகுதியின் மேற்குமலைகளை எல்லாம் மொட்டையடித்த பெருமை(?) எம்.ஜி. ஆர் காலத்தில் இருந்த வனத்துறை அமைச்சர்களையே சாரும். வட்டப்பாறை முகமது என்ற மலையாளிதான் அதிக மரங்களை வெட்டிய புண்ணியவான். இந்த மலையாளிக்கு மரம் வெட்ட ஆள் பிடித்துத் தரும் பணியை அன்றையதினம் இரு கழகங்களின் முன்னணி செயல்வீரர்களும் மிகச் சிறப்பாகச் செய்தார்கள். அப்போது வனத்தறை அதிகாரிகளாகப் பணியாற்றிய புண்ணியவான்கள் சுல்லி பொறுக்கியவனையும், ஆடு மேய்ப்பவனையும் பிடித்துக் கொண்டு போய் மரம் வெட்டியவர்கள் பட்டியலில் சேர்த்த கதையும் உண்டு. வருசநாட்டு மலைகள் வறண்டு காய்ந்த பிறகு, வைகை வறண்ட பிறகுதான் நமது ஆட்சியாளர்கள் கண்விழித்து தொன்னூறுகளின் தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தனர். தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பசுமைகள் துளிர்த்துக் கொண்டிருக்கின்றன.(என்ன பண்ணி என்ன செய்ய… வெட்டுன மரத்த நட்டுவைக்கவா முடியும்?)

வருசநாட்டு மலைப் பகுதிக்குற்பட்ட மேகமலை வனப்பகுதியில் 26 ஆயிரத்து 910 எக்டேர் வனநிலம், வனவிலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு வகை வனப்பகுதியிலும், ஏதாவது ஒரு வகை அபூர்வ வகை விலங்குகள் காணப்படும். ஆனால் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் எல்லா வகை அபூர்வ விலங்குகளும் உள்ளன. சிங்கவால் குரங்கு, புலி, யானை, சிறுத்தை, செந்நாய், காட்டு எருது, புள்ளிமான், கடமான், கேழையாடு, சருகுமான். கரடி, கருமந்தி, மரநாய், கரடி, செந்நாய், வரையாடு போன்ற விலங்குகளும், பறக்கும் அணில், சாம்பல் அணில், மலபார் அணில், பழந்தின்னி வவ்வால்கள், பறக்கும் பல்லி, தேவாங்கு, ஆந்தை, போன்ற 180 வகையான பறவைகளும், 65 வகையான பாம்புகளும் உள்ளதாக வனத்துறையினர் கணக்குச் சொல்கிறார்கள்..

தென் இந்தியாவில் உள்ள விலங்குகளில் கழுதைப்புலி, காண்டாமிருகம், சிங்கம், பிணந்திண்ணி கழுகு தவிர மற்ற அனைத்தும் உள்ளன. இங்கு சிங்கவால் குரங்குகள் மட்டும் 300க்கும் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாம்.. ஒரு காலத்தில் கழுதைப்புலிகளும் இருந்ததாக எங்கள் அய்யா சொல்லக் கேட்டிருக்கிறேன்

இன்னமும் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வு செய்தால், மேலும் பல அபூர்வ வகையான நீர், நில வாழ் விலங்குகள் உள்ளதைக் கண்டறிய முடியும்.. தற்போது இங்குள்ள மேலும் 24 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியை அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது. இந்த வனப்பகுதி இன்னும் கூடுதல் வளங்களை கொண்டது. இதில் 15 ஆயிரம் எக்டேர் வனம் மேகமலை வனவிலங்குகள் சரணாலயத்துடன் சேர்த்து கொள்ளக்கூடிய தகுதியான வளங்களுடன் உள்ளது. வனவிலங்குகளின் சரணாலயம் விரிவு படுத்தப்பட்டால், மேகமலை வனவிலங்கு சரணாலயம், பெரியாறு புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம், களக்காடு முண்டந்துறை சரணாலயம் ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் அடுத்தடுத்து அமைந்து விடும். இதனால் வனவிலங்குகள், வனங்களின் வளம் பெருகும். வனங்களின் வளம் பெருகினால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் வைகை நதி எப்போதும் வற்றாத ஜீவநதியாகி விடும். ஐந்து மாதமாக மழை இல்லாத நிலையிலும் கூட வைகையின் பிறப்பிடத்தில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வனத்தை பாதுகாத்தால் மட்டும் போதும், வனவளம் தானாக பெருகி, வைகையை மீண்டும் ஜீவநதியாக்கி விடும்

வருசநாட்டுப் பள்ளத்தாக்கில் கிழக்குப் பக்கமாக உள்ள மலைகள் சதுரகிரி மலைகள் 480 சதுர கி. மீ., பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் உள்ளது. இது மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கிறது. இதில் சாப்டூர்- வத்ராயிருப்பு இடையே 230 ச.கி.மீ.,பரப்பில் மதுரை மாவட்ட மலை பகுதியில் 60 கிராமங்கள் உள்ளன.

எங்கள் பயணங்களில் ஆண்டுதோறும் இடம்பிடிக்கும் இடம் சதுரகிரி மலையேற்றம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாங்கள் கிளம்புவோம். முதல்நாள் மாலையில் தொடங்கி இரவெல்லாம் அடர்ந்த வனத்தில் நடந்து அதிகாலையில் சதுரகிரி கோயிலில் போய்சேரும் நீண்ட பயணத்தில் ஆண்களும் பெண்களுமாய் செல்வோம். சூரிய உதயத்தில் மலை உச்சியிலிருந்து கிரக்குப் பக்கம் பார்த்தால் கடல் வரையிலான நீண்ட சமவெளி தெரியும். என்னைப் போன்ற மலை கிராமத்தார்களுக்கு இது அதிசயமாகத் தோன்றும். மனிதர்கள் எறும்புகளாக மாறி ஊர்ந்து செல்வதைப்போல ஒரு இனிப்பான பயணம். பயணச் சோர்வை கொஞ்சம் தணித்துக் கொள்ள எருமைப்பாறையில் இளைப்பாறுதல் இருக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்கும். சதுரகிரி மலை மூலிகைகளுக்குப் பெயர்போன மலை. இன்றும் பல மூலிகைகள் இருக்கின்றன. மூலிகைகளின் வகை தெரியாமல் அவற்றை வேரோடு தோண்டி எடுத்துச் செல்லும் மனிதர்களால் வனம் தன்னியல்பைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

இன்றும் சதுரகிரி மலையில் சட்டவிரோதமாக தினமும் அங்குலம், அங்குலமாக மரங்கள் வெட்டப்படுவதையும், விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் காணும்போது என்னைப் போன்றோர்களுக்கு மனம் பதறுகிறது. இங்கு யானைகள் அதிகம். ஒரு யானைக்கு தினமும் 300 கிலோ உணவு, 100 முதல் 200 லிட்டர் தண்ணீர் தேவை. அவை புல் வகைகள், ஈஞ்சி போன்ற தாவரங்களை அதிகம் சாப்பிடும். ஈஞ்சம் புதர்களை வெட்டி எடுத்த வீடு பெருக்கும் துடப்பம் தயாரித்து விற்க, மக்கள் ஈஞ்சிகளை அதிகம் அறுவடை செய்கின்றனர். மலையில் கிடைமாடுகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். ஏப்ரல் வரை புல் பசுமையாக இருக்கும் புற்களில் மாடுகளை மேயவிட்டு,வறண்ட புற்களின் மீது தீ வைக்கின்றனர். இதனால், ஒவ்வொரு முறையும் 200 ஏக்கரில் உள்ள மரங்கள், விலங்குகள் அழிகின்றன. இதுபோல் திட்டமிட்டு மனிதர்கள் அரங்கேற்றும் அழிவால் மலையில் விலங்குகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. உணவு, தண்ணீர் தேவைக்காக யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து கரும்பு, நெல் பயிர்கள், மா மரங்களுக்கு சேதம் விளைவிக்கின்றன. சதுரகிரி மலையில் சாம்பல் நிற அணில்கள் அதிகமாக வாழ்வதால் அதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை 20 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. வாகன போக்குவரத்தால் அணில்கள் அழிந்துவிடக்கூடாது எனக் கருதி மல்லப்புரம் -மயிலாடும்பாறை ரோடு திறக்கப்படவில்லை. ஆனால், பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இத்தனை அட்டூழியங்களும் நடக்கின்றன.

நதிகளின் நீர் வளம் குன்றாமல் வர மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது அவசியம். இந்த பணியில் தான் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தை பாதுகாத்து வரும் பெரியாறு பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள மரங்களை வெட்டாமல், வன விலங்குகள் அழியாமல் இருந்தால் நமக்கு தேவையான மழை கிடைக்கும். காடு வாழ்ந்தால்தான்,.அபூர்வ வகை வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வாழும், இருபதாண்டுகளுக்கு முன் நாங்கள் சென்ற பயணத்தின் புகைப்படங்களை என் பிள்ளைகளுக்குக் காட்டினேன்.“ இந்த இடங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வீர்களா…?” எனக் கேட்கிறான் என் மகன். எப்படி முடியும்? உருக்குலைந்துபோன எனது மலைகளையும் காணாமல்போன மரங்களையும் எப்படிக் காட்டமுடியும்? கையாலாகாத தகப்பன்களாய்தானே நாமிருக்கிறோம்.

(பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல்

எழுதியவர் : (16-Mar-17, 8:12 pm)
பார்வை : 516

சிறந்த கட்டுரைகள்

மேலே