மடமையின் உறுத்தல்

கழுத்தில் வாங்கிய மஞ்சள் கயிறு
அடுத்த திங்கள் அறுந்து விழுந்திட
தலையில் சூடிய பூவென தாரகை
தரையில் நூலாய் சுருண்டு கிடந்தாள்......

சுதந்தர காற்றை சுவாசித்து வந்தாலும்
வீட்டின் அறைகள் சிறைகளாய் மாறின
இனிமை என்பதை மறந்து விட்டு
தனிமையின் வெள்ளத்தில் கரைந்து நின்றாள்......

ஊர்மொழிகள் முள்ளாய் நெஞ்சைத் தைத்திட
சொந்த மொழிகள் வேலாய்ப் பாய்ந்திட
மண் புதைந்த மலராய் கருகி
கண் விழும் தீயாய் உருகினாள்......

மணம் கமழும் மலரினைத் தேடியே
பறந்து வரும் தேனீக்கள் போலிங்கு
பணம் புரளும் கூடுகள் நாடியே
கறந்து செல்ல உறவுகள் வருகின்றது......

ஒளிரும் விளக்காய் இருக்கும் பெண்மை
கௌரவத்தின் திரையில் மறைக்கப் படுகின்றாள்
உறங்கும் இரவுகளான இவளின் வாழ்க்கையில்
பிறக்க வேண்டும் புதிய விடியல்......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Mar-17, 9:33 pm)
பார்வை : 322

மேலே