குறையொன்றும் இல்லை

குறையொன்றும் இல்லை!

மாக்கொளுக்கட்டை ... மஞ்சக்கொளுக்கட்டை ...
மாமியார் பிடிச்சா... பிடிக்கொளுக்கொட்டை ...

ஏன் அழுகிறாய்? என் செல்லமே,
ஏமாற்றி விட்டேன் என்றா கண்ணே!
ஏமாற வேண்டாம் என் தங்கமே,
உன்னைத் தாங்கும் ஏணிகள் தான் நாங்களய்யா!

சோழக்கருதை வளைச்சி அறுப்பதாலே...
எள்ளைத்தட்டி உதிர்ப்பதாலே...
பருத்திச்சொளை உருவரதாலே...
பாட்டிக்கு தாழம்பூ கையானாலும்,
பாசத்திற்கு பஞ்சமில்லையே,
பசுங்கிளியே பயப்பட வேண்டாமையா!

மம்பட்டியால மண்ணைத் தோண்டுவதாலே...
கடப்பாறையால கல்லப்புறட்டுரதாலே...
விதை நெல்லை தூவுறதாலே...
தாத்தாவுக்கு வேலி வேரு கையானாலும்,
தாங்குவதற்கு தயக்கமில்லையே,
தங்க ரதமே தவிக்க வேண்டாமையா!

தீப்பெட்டி கட்டை அடுக்கிறதாலே...
மருந்து குச்சி உறுவுறதாலே...
தீப்பெட்டிக்குள் குச்சியை அடைக்கிறதாலே...
அத்தைக்கு உரிச்ச கோழி கையானாலும்,
உரிமையோடு கொஞ்ச தடையில்லையே,
தாமரை மொட்டே சோகம் வேண்டாமையா!

உழவுக் கலப்பை பிடிக்கிறதாலே...
மாட்டு தீவனம் அறுக்கிரதாலே...
பருத்திவிதை பிண்ணாக்கு ஆட்டுறதாலே...
அப்பாருக்கு பூசாத மண்சுவரு கையானாலும்,
மழலை குரலில் மயங்க மறந்த தில்லையே,
மரகதமே மனதில் கவலை வேண்டாமையா!

நாத்தைப் பிடுங்கி நட்டுறதாலே...
களையை பிடுங்கி போடுறதாலே...
விளைந்த நெற்கதிரை அறுப்பதாலே...
காய்ந்த வைக்கோல் கையானாலும்,
அம்மாளுக்கு அன்பு மழைக்கு பஞ்சமில்லையே,
பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சே பயப்பட வேண்டாமையா!

உழைக்கும் வர்க்கம் நம்ம குடும்பம்,
உள்ளமோ அன்பு நீர் சுரக்கும் ஊற்று,
பாசமழை கொட்டுவதில் குற்றால அருவியடா,
குறையொன்றும் இல்லையடா உன்னுடன் விளையாட,
குழந்தையாக குதித்து ஆடடா!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (18-Mar-17, 12:43 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 271

மேலே