படைக்கப்பட்டது விதியோ

கடலுக்கு தண்ணி காட்டும்
கரையோர கிராமமது,
அலை எழுந்து வந்து
அள்ளிக்கொண்டு போனாலும்
ஓடி ஒளியாத ஊருசனம்
ஊரை விட்டு போகாது
வாழ்வை எண்ணி

கரையில உறவை விட்டு
கடலுக்கு மீன் பிடிக்கக்
கருக்களில் போனவன்,
மீனுண்ட பையன்போல
மீண்டு வராததைக் கண்டு
மீளாத்துயரில் குடும்பம்
மீனவர்களுக்கோ ஓரிழப்பு

இக்கரையை விட்டதா
அக்கரைக்கு போனதா
எக்கரையாலே
கறைபட்டு போனது?
அக்கறையில்லையா யாருக்கும்,
பிடிபட்ட படகோட்டி விடுபட்டு
படகை சிறை பிடித்தால்
பசிபோக்க வழியேது?

சுட்டு தின்னும் மீனுபோல
சுட்டுக் கொன்றால்
பட்டுபோகாதோ மனிதநேயம்!
படைத்தவனே
செத்துபோக விட்டபின்னே
சபிக்கப்பட்ட வாழ்க்கைபோல
படைக்கப்பட்டது விதியோ!

எழுதியவர் : கோ. கணபதி. (19-Mar-17, 10:28 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 62

மேலே