பட்டே பரிவாய்ப் பழகு

எங்கேநீ சென்றாயோ என்றுளம் வாடுதே
தங்கயிட மின்றித் தவித்தாயோ ?- சிங்காரச்
சிட்டேவுன் கீச்சென்ற செல்லச் சிணுங்கலில்
மெட்டியொலி யும்தோற்கு மே !

சிறகடிக்கும் சின்னஞ் சிறுசிட்டே நீயும்
பறந்துசென்ற தெங்கே பகர்வாய் ! - மறவாமல்
வந்து மனமகிழ வைப்பாய்! குருவியே !
சிந்தை குளிர்ந்திடச் செய் .

மரக்கிளையில் கூடுகட்டி மக்களுடன் வாழ்ந்தாய்
இரக்கமிலா நெஞ்சமுடன் யாரோ - விரட்டியது
சொல்குருவி! என்றுமெங்கள் சொந்தம்நீ யல்லவா
செல்லாதே வாழுவோம் சேர்ந்து .

கதிர்வீச்சால் நீயுமே காணாமற் போனாய்
கதியின்றிச் சென்றாய் கடந்து!- அதிரூப
சிட்டே! சிறகசைத்துச் சீக்கிர மாய்வந்து
பட்டே பரிவாய்ப் பழகு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Mar-17, 2:15 pm)
பார்வை : 125

மேலே