சர்க்காரின் வாள்

காய்ந்த கோடை ஒன்றின் நண்பகளில் தவளைக்குளக்கரையிலும் அம்முச்சிமரத்தடியிலும் மக்கள் திரளாக வந்து குவிந்தவண்ணம் இருந்தார்கள். பால் விற்பனை, பஞ்சாயத்து, ஊர்க்காவல்தெய்வம் என்று எல்லாமே தவளைக்குளக்கரைதான். அம்முச்சிமரம் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூன்தாத்தாவுக்கே தெரியாது. அவ்வளவு பழைய கதை. கோடைக்கால விடுமுறை என்பதால் வண்டு சிண்டுகளும் கூட்டம் கூட்டமாக குளத்தில் கல்லெரிந்துகொண்டும், விழுதில் தொங்கிக்கொண்டுமிருந்தார்கள்.

ஹேராவுக்கு அம்முச்சிமரம் பிடிக்கும், அம்முச்சி மரத்தடியில் நிகழும் நிகழ்வுகளைப்பற்றி தன் தோழி ஒருத்தி சொல்லிய கதையைக்கேட்டே இங்கு வந்திருக்கிறாள். நொண்டிக்கிழவியுடன் தங்கியிருக்கிறாள். ஹேராவும் நொண்டிக்கிழவியும் ஒரே ஜாதி. வந்த நாளிலிருந்து "இருந்த இடத்திற்கே போய்விடு", "இருந்த இடத்திற்கே போய்விடு" என்று தலையைக் குட்டிக்கொண்டேயிருப்பாள். நொண்டிக்கிழவி துறத்திக்கொண்டே இருப்பதும், பயந்துகொண்டே பேசுவதும் ஹேராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் கூடிய நண்பகல் அடிக்கடி குளக்கரையில் தலையை நனைத்துவிட்டு வருவதும், தண்ணீர் குடித்துவிட்டு வருவதுமாக இருந்தாள் நொண்டிக்கிழவி.
ஏன் இவ்வளவு பதட்டத்துடன் தள்ளாத வயதில் அங்கும் இங்கும் பறந்துகொண்டே இருக்கிறீர்கள் என்றதற்கு. கண்ணீர் விட்டு அழுதே விட்டாள் நொண்டிக்கிழவி.

'ஹேரா, இங்கே இருப்பவர்களை கவனித்தாயா ?' என்றாள் கிழவி.

'ஆம் கவனித்தேனே', மனிதர்கள்தானே ? என்றாள் ஹேரா.

கொஞ்சம் சினுங்கிவிட்டு சிரித்தாள். பைத்தியக்காரி என்று திட்டிவிட்டு தான் இதுவரை பார்த்த அம்முச்சி மர சடங்குகளைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தாள்.

.........................

"40 வருடத்திற்கு முன்பு அம்முச்சிமரம் பற்றி கேள்விப்பட்டு இங்குவந்தேன். ரம்யமான காற்றும், குளத்தின் ஈரமும் வருடம் முழுக்க பறந்துகொண்டே இருந்தாலும் சோர்வடையவே செய்யாது. பல இரவுகளை இங்கு நிம்மதியாக கழித்திருக்கிறேன். இதே மாதிரி ஒரு நாள் மக்கள் அனைவரும் கூடியபோது விசித்திரமான உடையணிந்த மனிதன் ஒருவன் கையில் எதையோ வைத்துக்கொண்டு அனைவரையும் வரிசையில் நிற்கும்படி செய்தான். வரிசையில் நின்ற அனைவரும் உற்ச்சாகமாக இருந்தார்கள். தங்கள் குடும்பங்களுடன் இந்த குளக்கரை பக்கம் மக்களை இதுவரை ஒருமுறைகூட பார்த்திறாத எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர் ஒவ்வருவராக அந்த விசித்திர ஆடை அணிந்தவனிடம் கையை நீட்டி, ஒரு நீண்ட ஊசியில் இரத்தம் சொட்டும்படி குத்து வாங்கிக்கொண்டார்கள். இரத்தம் சொட்டிய மறுகணம் மடியை ஏந்தி ஒரு கல்லை வாங்கிக்கொண்டார்கள். ஒட்டுமொத்த கிராமமும், ஒருவர் பின் ஒருவராக தன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஊசி குத்து வாங்கிக்கொண்டு கல்லை பெற்றுக்கொண்டார்கள். பின்னர் ஏதோ பேசிக்கொண்டு உற்சாகமாக கத்திக்கொண்டு குளத்தில் ஒவ்வொருவராக கல்லை எரிந்துகொண்டு பேரானந்தத்துடன் வீடு திரும்பினார்கள். அன்றிலிருந்து மக்கள் இந்த குளத்திற்கு அடிக்கடி வந்துபோனார்கள்.
இந்த அதிசய கிராமத்தைப் பார்த்து என் சொந்தபந்தங்களை எல்லாம் கூட்டிவந்து 10 ஆண்டுகாலம் இந்த அம்முச்சிமரமே கதி என்று வாழ்ந்தும் ஒருமுறைகூட அந்த சடங்கு மறுபடி நிகழவே இல்லை.

ஒரு அடர்ந்த இருள் நாளில் குளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது யாரோ என் கழுத்தை நெருக்கி தூக்கிக்கொண்டுபோய் விழுதொன்றோடு கட்டிவிட்டார்கள். எவ்வளவு கத்தியும் பயணில்லை, யாரைக்கூப்படுவதென்று கத்திக் கத்தி நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து சொந்தங்களும், தோழிகளும் ஆளுக்கொரு திசையாக கிளம்பிவிட்டார்கள்.

உயிர் பயத்தில் இருந்தபோது மீண்டும் மக்கள் கூட ஆரம்பித்தார்கள். இந்தமுறை ஏன் இருட்டில் கூடுகிறார்கள் என்பது விளங்கவேயில்லை. அதே விசித்திர ஆடை அணிந்த ஒருவனிடம் இப்பொழுது கண்களைக் கருப்பு துணி ஒன்றால் கட்டிக்கொண்டு வந்தவண்ணம் இருந்தார்கள். இந்தமுறை அவனிடம் இருந்தது ஊசி இல்லை, கோடாலி. மனிதர்கள் அப்போதெல்லாம் அதை வைத்துதான் மரம் வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவராக கால்களை மரப்பலகை ஒன்றில் அழுத்திபடி நின்றுகொண்டார்கள். விசித்திர ஆடை அணிந்த மனிதன் ஓங்கி கால் சுட்டுவிரலை வெட்டிவிட்டு, கண் கட்டை அவிழ்த்து "விடுதலை" "விடுதலை" என்று கத்தினான். ரத்தம் வழிய வழிய மக்களும் "விடுதலை" "விடுதலை" என்று கத்தினார்கள். எப்படி இவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள் என்பது இன்றுவரை எனக்கு விளங்கவே இல்லை. ஊரில் இருந்த அத்தனைப்பேரும் விரலை வெட்டிக்கொண்ட பின்பு. இந்த கிளிக்கும் விடுதலை தாருங்கள் என்று விசித்திர மனிதனிடம் யாரோ கூறவே, என் விரலையும் வெட்டுகிறேன் என்று வெட்டிவிட்டான். குருடனுக்கு சுண்டு விரல் எது என்பது தெரியாததால் மொத்த விரல்களையும் வெட்டிவிட்டான் கிராதகன். எப்படியோ நொண்டி நொண்டி குளக்கரையிலேயே பல நாட்கள் கிடந்து இந்த பொந்துக்குள் தஞ்சம் புகுந்தேன்" என்றாள் நொண்டிக்கிழவி.

ஹேராவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. தன்னிடம் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாக தன் தோழி கூறவேயில்லையே என்று எண்ணியபடி மக்களை நோட்டம் விட்டாள். யாருடைய கால்களிலும் சுட்டுவிரல் இல்லை. கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. திகிலுடன் மரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, விசித்திர உடை அணிந்த மனிதன் ஒருவன் இவ்வாரு பேசிக்கொண்டிருந்தான்.

"கடந்த 30 ஆண்டுகளாக இந்த சர்க்கார் உங்களுக்கு விடுதலை அளித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் நன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே இந்த சர்க்கார் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பஞ்சம் காரணமாக நாட்டு மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவதில் சர்க்காருக்கு மிகப்பெரிய நெருக்கடி வந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு உணவுப்பொருட்களையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்யமுடியாமல் அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்க கஜானாவை செம்மைப்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கம் வகையிலும் சர்க்கார் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தன் நாக்கைவெட்டிக்கொள்ளத் தயராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் சர்க்கார் சார்பில் வேலை வாய்ப்பும், ஒரு வேளை அரிசி உணவும், இரண்டு வேளை புண்ணாக்கும் வழங்கப்படும். இந்த சலுகையை உடனடியாக அமல்படுத்தவேண்டி சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளது "
பின்னர் மக்கள் ஆர்ப்பரித்து ஆராவாரத்துடன் "சர்கார் வாழ்க, சர்கார் வாழ்க" என்று கோஷம் போட்டபடி, விசித்திர ஆடை அணிந்த மனிதனிடம் தன் நாக்கை நீட்டிக்கொண்டு வரிசையில் நின்றனர். இந்தமுறை சர்க்காரிடன் இருந்தது ஒரு நீண்ட வாள். பல பலவென மின்னிக்கொண்டிருந்தது. ரத்தம் படிந்த நாக்குச் சதையும், மக்களின் மகிழ்ச்சியும் ஒழுகியபடி நாக்குகளை ஒவ்வொன்றாக, குறல்களை ஒவ்வொன்றாக சீவிக்கொண்டிருந்தது.

நொண்டிக்கிழவி கண்ணீர்விட்டபடி மரப்பொந்து நோக்கி நொண்ட ஆரம்பித்தாள்.

ஹேராவுக்கு பேச்சுவரவில்லை என்று நாக்கில் மிளகாய் தடவியபோதுதான் கூண்டில் இருந்து தப்பித்துவந்தாள். தன்னை வளர்த்த மனிதர்கள் யார் ? அவர்களுடைய நாக்கை வெட்ட ஏன் சர்க்கார் ஆட்களை அனுப்பவில்லை ? இந்த கிராமத்தில் ஏன் யாருக்கும் வலியே இல்லை ? நொண்டிக்கிழவி ஏன் இன்னமும் இந்தபொந்துக்குள்ளேயே இருக்கிறாள் ? சிறகுகள் இருந்தும் பறக்காமல் இந்த மக்கள் மீது அப்படி என்ன விசுவாசம் அவளுக்கு ? விசித்திர ஆடைக்குள் இருப்பது சர்க்கார்தானா ? என்று சிந்தித்தபடியே அம்முச்சிமரத்தை விட்டு பறந்துவிட்டாள் ஹேரா.

எழுதியவர் : மனோஜ் (21-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : மனோஜ்
பார்வை : 216

மேலே