யாராவது எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்

யாராவது எனக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்.

யாருமே இதுவரை எனக்காக ஒரு கடிதம் எழுதியதில்லை,

"அன்புள்ள" என்றுதான் ஆரம்பிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்பை எழுத்துவடிவில் பார்க்க ஆசையாக இருக்கிறது,

குறுந்தகவல்கள், ஈ-மெய்ல்களெல்லாம் மெய்யான அன்பை காட்டுவதாக தெரியவில்லை,

எனக்கு ஒரு பேனா முனையில் கைப்பட எழுதப்பட்ட கடிதம் தேவைப்படுகிறது,
அது ஒரு ரீஃபில் பேனாவாகவோ, இன்க் பேனாவாகவோ இருக்கலாம்.

அடித்தல் திருத்தல்களோ, எழுத்துப்பிழையோ கூட இருக்கலாம். எனக்கு தேவையானதெல்லாம், ஒருவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம்.

பக்கம் பக்கமாக எழுதவேண்டியதில்லை, ஒரு பத்தியாகவோ, ஒரு சில வார்த்தைகளாகவோ, ஒரே ஒரு வார்த்தையாகவும் கூட இருக்கட்டும்,

நான் அதனை பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன், பின்னொருநாளில் என் சந்ததிகளுக்கு படித்துக்காட்டுவேன்,

அனுப்புனர் இல்லாததொரு கடிதத்தை மட்டும் அனுப்பிவிடாதீர்கள்.
நான் உங்களை மறந்துவிடநேரிடும்.

எனக்கு நினைவிருக்கிறது,
நான் தேர்ச்சியடைந்தேனா இல்லையா என்பதை கடிதத்தில்தான் தெரிவிப்பார்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒரு நோட்டிஃபிகேஷன் சப்தத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட இது மேலானது என்று,

கடிதங்கள் ஏன் அவ்வளவு அரிதாகிவிட்டது என்பதை மட்டும் யூகிக்கமுடியவேயில்லை.

நான் ஒரு கடிதம் எழுதப்போகிறேன்.

அன்புள்ள ****.......

எழுதியவர் : மனோஜ் (21-Mar-17, 2:50 pm)
பார்வை : 72

மேலே