சான்றோர்

சான்றோர் என்னும் சொல் தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்புடைய ஒன்றாகும் இச்சொல்லுக்கு ஏற்ற ஓர் வேற்றுமொழிச் சொல்லைக் கண்டறிய இயலாதவாறு பொருளும வரையறையும் இலக்கணமும் தந்து இச்சொல்லைப் போற்றியுள்ள தமிழர்களின் பேரறிவுத் திறன் வியக்கத்தக்கது. சான்றோர் என்னும் சொல் சால் என்னும் அடிச்சொல்லிலிருந்து தோன்றியது. சாலுதல் என்றால் நிறைதல் என்ற பொருள். எனவே சான்றோர் என்றால் நிறைந்தவர்கள்.



சால்பு என்னும் சொல்லும் சால் என்பதிலிருந்து தோன்றிய ஒன்றே இதற்கு நிறைவுடைமை: முழுமை என்ற பொருள் . சால்புடையவர்களே சான்றோர்.



இது ஆன்றோர் எனத் திரிந்து வருதலும் உண்டு . இங்கு சான்றோர் என்னும் சொல் முதலில் உள்ள ‘ச்’ என்னும் எழுத்து கெட்டுவிடுகிறது.



இவ்வழக்கு மூலத் திராவிட மொழியிலிருந்து தமிழ் கிளைத்தெழுந்த போது இருந்த ஒரு வழக்கு என மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.



எனவே சான்றோர் என்னும் சொல் தமிழின் மூல மொழியாக மூலத் திராவிட மொழிக்கே உரிய ஒன்று எனலாம். இதன் வழி இச்சொல்லின் பழமையை உணரலாம்.



தமிழில் இன்ற கிடைத்துள்ள பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் சான்றோர் என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.



சங்க இலக்கியங்களிலும் இச்சொல் இடம் பெற்றுள்ளது. பதிற்றுப் பத்து என்னும் சங்க இலக்கிய நூலில் ‘‘சான்றோர் மெய்ம்மறை’’ என்னும் தொடர் வருகின்றது.



புறநானூற்றில் ‘‘ஈன்று புறத்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே , நன்னடை(பரிசு) நல்குதல் வேந்தற்குக் கடனே, களிறு (யானை) எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’’ என்னும் பொன்முடியார் பாட்டில் சான்றோர் என்னும் சொல் இடம் பெறுகின்றது



இங்குச் சான்றோர் என்பதற்கு வீரர் என்னும பொருள் உள்ளது என விளக்கம் தருவார் டாக்டர் வ.சுப. மாணிக்கனார்.



எனவே சான்றோர் என்னும் சொல் தொடக்கத்தில் வீரம் நிறைந்தவர்களையே குறித்தது எனலாம். வீரம் என்பது மன உறுதியால் விளைவது: உடலுரத்தால் ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு. உள்ளத்தில் உறுதியும் உடலுரமும் மிக்கவர்களே சான்றோர்கள் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டனர்.



சான்றோர் என்பதற்கு நற்பண்புகள் நிறைந்தவர்கள் என்னும் பொருளும் இருப்பதைச் சங்க நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.







சான்றோர் பழியொடு வரும் இன்பம் கொள்ளார் என்று அகநானூறும், ‘‘பகைவரிடத்தும் பிறர் குற்றம் காணாத சான்றோர்’’ பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல் எண்ணும் பெருந்தகையார் சான்றோர் எனக் கலித் தொகையும்,’’சான்றோர் பழிக்கு நாணும் பண்புடையார்’’ என்று குறுந்தொகையும் கூறுகின்றன.



சான்றோர் என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பிசிராந்தையார் என்னும் புலவரையும் கோப்பெருஞ்சோழன் என்னும் அரசனையும் குறிப்பிடுகின்றது ஒரு புறநானூற்றுப்பாடல் .



பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பழகாமலேயே கேள்விப்பட்ட நிலையிலேயே உணர்ச்சியொத்த நண்பர்களாய் இருந்தனர்.



கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி இருந்து உயிர் நீத்தபோது தம்மைக் காணப் பிசிராந்தையார் வருவார் எனக் கூறி அவருக்கு ஓர் இடம் ஒதுக்குமாறு வேண்டி இறந்தான்.



அவன் கூறியபடியே பிசிராந்தையார் அங்கு வந்தார் தம் நண்பனைக் காணாது அவன் நடுகல் கண்டு அவரும் உயிர் நீத்தார்.



இதனைக் கண்ட கண்ணகனார் என்னும் புலவர் ‘‘பொன்னும் மணியும் முத்தும் பவளம்; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைஇடங்களில் தோன்றினாலும் அவற்றை ஒன்றாகக் கோத்து மாலையாகக் கட்டும் போது அவை ஓரிடத்துத் தோன்றியவை போலக் காட்சியளிப்பது போன்று கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் இருவரும் வெவ்;வேறு இடங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒத்த உள்ளத்தினை உடைய சான்றோர்கள்.



ஆதலின் சான்றோர்கள் சான்றோர்களையே நட்புக் கொள்வார்கள்.



சால்பு அற்றவர்கள் சால்பு அற்றவர்களையே விரும்புவர்’’ எனப் பாடுகிறார். பிசிராந்தையார் பாண்டி நாட்டுப் புலவர் பாண்டியன் அறிவுடை நம்பிக்கே அறிவுரை கூறியவர். மக்களுக்கு அவன் அதிக வரி விதித்தபோது அவனிடம் சென்று அறிவுரை கூறும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் வயதால் மூத்தவராக இருந்தாலும் நரை முடி தோன்றாதவராக விளங்கினார்.



இதனைக் கண்ட புலவர்கள் அவரிடம் சென்று அவருக்கு நரை தோன்றாமைக்குக் காரணம் கேட்டனர்.



அப்போது அவர் நல்ல மனைவி, மக்கள், குறிப்பறிந்து நடக்கும் பணியாட்கள், நீதி தவறா அரசன், சான்றோர் பலர் வாழும் ஊர் ஆகிய இவை தமக்கு வாய்த்திருப்பதாலேயே நரை தோன்றவில்லை என்று காரணம் கூறி விளக்குகிறார்.



எனவே நரை திரை மூப்பு தோன்றாத வாழ்வுக்கு கவலையற்ற அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் வல்லமை சான்றோர்களுக்கு உண்டு என இதன் வழி அறிய முடிகிறது.







இத்தகைய சான்றோர் பலர் இருந்தால் ஒரு நாடு, ஒரு நகரம் சிறப்புறும் இன்பமும் பெறும் என எண்ணலாம்.



இங்கு எத்தகைய சான்றோர் என்பதையும் பிசிராந்தையார் குறிப்பிடுகிறார். ‘‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்னும் அவரது தொடர் மனம், வாய் கண் மூக்கு , செவி, என்னும் ஐம்பொறிகளையும் அவற்றின் விருப்பத்திற்குச் செல்லவிடாமல் அடக்கி நல்வழியில் செலுத்தும் கொள்கை உறுதியுடையவர்களே சான்றோர் என்பதைக் காட்டுகிறது.



இவர்கள் ஊரில் அல்லது நாட்டில் வாழும் அனைவர்க்கும் முன் மாதிரியாக இருக்கத் தக்க பண்புடையவர்கள்.



இவர்களுடன் இருப்பதுதான் ஊரினர்க்கோ நாட்டினர்கோ ஏற்றம் தரும்.



எனவேதான் ஆத்திசூடியில் ஒளவையார் ‘‘சான்றோர் இனத்திரு’’ என்று இளங்குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகின்றார் போலும்.



சான்றோர் என்பவர்க்கு உரிய கருத்து ஒன்றினையும் நற்றிணை சுட்டுகின்றது. அவர்கள் செல்வம் என்று எதைக் கருதுவார்கள் என ஒரு பாட்டு கூறுகின்றது. செல்வாக்கு, சிறந்த (கார் போன்ற) ஊர்திகள் யாவற்றையும் செல்வம் என்று சான்றோர்கள் கருதமாட்டார்கள்.அவர்கள் தம்மைச் சார்ந்தோர் துன்பம் துடைத்தலே சிறந்த செல்வம் எனக் கருதுவார்களாம் எனவே உள்ளத்தால் இரக்கம்கொண்டு பிறர்க்கு உதவும் பெருந்தகையாளர்களே சான்றோர் ஆவர்.



திருக்குறளில் வள்ளுவர் சான்றாண்மை என்று ஓர் அதிகாரமே(99) பொருட்பாலில் வகுத்துச் சான்றார் பண்புகளைத் தொகுத்துக்கூறுகிறார் அன்பு , பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்கும் நாணம், உலகநடை அறிந்து ஒழுகும் ஒப்புரவு, இரக்கம் எனப்படும் கண்ணோட்டம் , உண்மை ஆகிய ஐந்து பண்புகளே சான்றாண்மை என்னும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் எனச் சுட்டிக்காட்டி நல்ல பண்புகளை எல்லாம் குணமாகக் கொண்டு ஒழுகுபவரே சான்றோர் என்கிறார் வள்ளுவர்.



மேலும் பிறர் தீமை சொல்லாத பெருந்தன்மையும் பணிவுடைமையும், பகைவர்க்கு அருளும் பண்பும், என்றும் மாறாக் கொள்கை உறுதியும் , துன்பம் செய்தவர்ககும் இன்பம் செய்யும்இயல்பும் உடையவர்களே சான்றோர் என்பது வள்ளுவர் தரும் விளக்கம். இவர்கள் பண்பு குன்றினால் நிலவுலகம் தாங்காது என்றும் சுட்டுகிறார் அவர்.



சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் நீதி நேர்மையுடன் இருப்பதே சான்றோர்க்கு அழகு என்பது வள்ளுவர் கருத்து.



தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் பாராட்டுவதைக் கேட்கும் தாய் அவனைப்பெற்ற பொழுதைக் காட்டிலும் பேரின்பம் அடைவாள் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.



இத்தகைய சான்றோர்களுடன் கூடிப் பழகி இருப்பது படிக்கப் படிக்கப் பல சுவைதரும் இலக்கியம் போன்றது என்பதும் வள்ளுவர் கருத்து.



நாலடியார், பழமொழி நானூறு முதலிய ஏனைய நீதி நூல்களும் சான்றோர் பற்றி விளக்கம் தருகின்றன



இசையும் எனினும் இசையாது எனினும் வசைதீர எண்ணுபவரே சான்றோர் என்றும் வறுமையுடன் வாழ்ந்தாலும் பழிச்செயல் செய்யாதவர் சான்றோர் என்றும்: கள், திருட்டு முதலிய தீய பழக்கங்களைக் கடிந்து ஒதுக்குபவர் சான்றோர் என்றும்: தினையளவு சிறு உதவி செய்தாலும் பனையளவு பெரிதாகக் கருதிப் பாராட்டும் இயல்பினர் சான்றோர் என்றும்: பிறர் பிழை பொறுக்கும் பெற்றியர் சான்றோர் என்றும் நாலடியார் கூறுகின்றது.



சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் சான்றவர் கையுண்டு கூறுவர் மெய் என்னும் பழமொழிகள் வழங்கியதைப் பழபொழி நானூறு என்னும் நூல் எடுத்துக் காட்டுகின்றது.



தான் பெற்ற பிள்ளையைப் பண்புமிக்க சான்றோனாக வளர்ப்பது தான் பெற்றவள் கடமை என்பபதைக் கொன்றை வேந்தனில் ‘‘சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு’’ என ஒளவையார் குறிப்பிடுகின்றார்.



இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டுக் கொதித்தெழுந்த கண்ணகி மதுரை நகரில் ‘‘சான்றோரும் உண்டு கொல், ‘‘ அதாவது ஈன்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் சான்றோர்கள் இருக்கிறார்களா எனக் கேள்வி கேட்டு இகழும் நிலையைக் காண்கிறோம்.



சான்றோர்கள் இருப்பின் ஒரு நாட்டின் நீதி அழியாது என்னும் தமிழ்ச் சமுதாயத்தின் நம்பிக்கையை இங்கு உணரமுடிகிறது.



இடைக்காலததில் சான்றோர் என்னும் சொல்லைத் தமிழறிவு மிக்க சங்ககாலப் புலவர்களைக் குறிக்க உரையாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் பாடலை எடுத்துக்காட்டுக் காட்டும்போது ‘‘சான்றோர் செய்யுளிற் காண்க’’ எனச் சுட்டிக்காட்டுகின்ற போக்கை உரையாசிரியர்களிடம் காண்கின்றோம்.



கவிச்சக்கரவர்ததி கம்பர்தன் இராமாயணத்தில் , காட்டிற்குச் சென்ற இராம இலக்குவர் கோதாவரி ஆற்றினைக் கண்டபோது, ‘‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’ எனக் கூறுகின்றார்.



சான்றோர் கவிதை அணி அழகும், பொருள், ஆழமும், அகம் புறமாகிய பிரிவுகளும் (துறைகளும்) குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளில் (ஐந்துநிலங்களில்) செல்லும் ஆற்றலும் கருத்துத் தெளிவும் தண் என்னும் ஒழுக்கம் உணர்த்தும் பண்பும் கொண்டது.இத்தகைய இயல்புகள் கோதாவரி ஆற்றுக்கும் உண்டு எனக் குறிப்பிடுகிறார்.



சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு யானையுடைத்து, இது போலத் தொண்டை நாடு சான்றோர் உடைத்து என நாட்டின் சிறப்பு கூறாகச் சான்றோரைக் கூறுவதும் தமிழ்மரபாகும்.



எனவே தமிழில் சான்றோர் என்பது வீரம் (உடலுரம்) உறுதி, உயர்ந்த பண்புகள், அறிவு, படைப்பாற்றல் , வழி நடத்தும் ஆற்றல், இறையுணர்வு முதலியவற்றைப் பெற்ற பெரியோர்களையே குறிக்கின்றது.



தமிழ்ச் சான்றோர் என்னும தொடரில் உள்ள தமிழ் என்பது மொழியை மட்டும் குறிக்காது இலக்கியம் , பண்பாடு படைப்பாற்றல், அறிவுரை கூறும் பாங்கு செயல்திறன் ஆகியவற்றையும் சுட்டும்.



தமிழ்ச் சான்றோர் எனப்படுபவர் தமிழ்மொழி அறிவும் தமிழில் இலக்கியம் பற்றிய தெளிவும், படைப்பாற்றலும், தமிழ்ப்பண்பாடு அறிந்து ஒழுகும் தன்மையும், தமிழ் தொடர்பான அறிவுரை கூறி வழிநடத்தும் ஆற்றலும் உடையவரையே குறிக்கும் எனலாம்.







Thinnappan, SP. Ivar Caanroor (Concept of Elite person in Tamil Literature. Tamil Murasu Singapore (1997) p6&p6) (2 Pages) (Tamil

எழுதியவர் : (23-Mar-17, 4:13 am)
Tanglish : sandror
பார்வை : 4080

சிறந்த கட்டுரைகள்

மேலே