ஒரு காலைப்பொழுது -கங்கைமணி

அரும்பு மலர்வதுபோல் -ஒரு
காலைப்பொழுது.
கிழக்கு திசை.
வெளிச்ச ஊற்று.
என் எண்ணம் வளர்வதுபோல் -மெல்ல
வண்ணம் வளர்கிறது.

காலை வரைபடம்
காணக்கிடக்கிறது
காணுமிடமெல்லாம்
கவிதை வழிகிறது.

பசுமை போர்வையில்
பனிமணிகள்
சிதறிக்கிடக்கிறது.
தோரணமாய்
பனித்துளிகள்
எங்கும் தெரிகிறது.

நெளிந்த நிலவுகள்
வாசலில் வருகிறது.
வரைந்த கோலங்கள்
நேசமாய் அழைக்கிறது.

பறவைகளின் பாக்கள் -கேட்டு
பருகி முடிக்காத..,
பனித்துளிகளோடு,
மயங்கிவிழும் பூக்கள்.

திறந்துகிடக்கும் தெருக்கள், தன்னில்
ஒற்றைக்கால் முளைத்து
ஓடும் பல பூக்கள்.

சோலைச் சேலைகள்
சூரியக் கரம்பட்டு
மெல்ல அவிழ..,

ஓடும் ஓடை
அவிழ்ந்த ஆடையை
அள்ளிச்செல்ல.

மறைந்து தென்றல்
மகிழ்ந்து பார்த்து
வியந்து மெல்ல
நடந்து., சோலை
தேகம் தீண்ட.

சிலிர்த்த மலர்கள்
சிவந்து மலர்ந்து..
உதிரும் அழகினில்,
உணர்வுகள் உறைய-என்
உள்ளம் பறந்து
இவ்வுலகைக் கடக்குதே!.
இயற்கையின் கைகளில்
எனையளிக் கொடுக்குதே!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (24-Mar-17, 1:02 am)
பார்வை : 199

மேலே