நிறமிழந்த பூக்கள்

ஆயிரம் ஆசைக் கனவுகளை
=அள்ளி முடிந்து வாழ்வினிலே
பாயிரம் எழுதும் ஒருவனுக்கு
=பந்தி யாகியே பசிதீர்த்து
தாயென ஆனவள் மகிழ்வுடனே
=தன்னிறம் அனைத்தும் மிளிர்ந்திருக்க
நோயென கொண்டவன் போய்சேர
=நுடங்குவாள் நிறமிலா பூவெனவே.

பசியெனும் கொடிய நோய்தீர
=பருவ அழகை விலைபேச
நிசியினில் வாழ்வின் நிறமிழந்து
=நித்தமும் கண்ணீர் பொழிந்துருகும்
வசிப்பிடம் இல்லா வனிதையரை
=வாட்டும் ஏழ்மைத் துயரத்தை
ருசித்திடத் தொற்றும் நோயாலே
=நுடங்குவர் நிறமிலா பூவெனவே

இயற்கை அழகு சருமத்தின்
=எடுப்பைக் கூட்டும் முயற்சியிலே
செயற்கை ஒப்பனை செய்வோர்கள்
=சேர்க்கும் வாசனைத் திரவியங்கள்
மயக்கும் மேனகை எனவிளிக்க
=மந்திரம் போடும் மேனியிலே
தயங்கா சரும நோய்பூண
=சட்டென நிறமிழக் கும்பூக்கள்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Mar-17, 2:29 am)
பார்வை : 107

மேலே