பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

தன் அழகிய வண்ணங்களால் , மெல்லிய இறக்கைகளால் , அதற்கேயான உடலமைப்பால் அது எல்லோரையும் கவர்ந்து விடுகிறது . பெரும்பாலும் பட்டாம்பூச்சியை பற்றிய எல்லா படைப்புகளும் அழகாகத் தான் இருக்கின்றன . அதில் மனிதம் வடிய வடிய வைரமுத்து சார் எழுதிய முதல் தகவல் அறிக்கை தான் எனக்கு மிகவும் பிடித்த கவிதை .எனக்கும் பட்டாம்பூச்சியை பற்றி ஒரு நாள் , ஒரு படைப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . ஆனால் இந்த பட்டாம்பூச்சியை பற்றி என ஒரு நாளும் நினைத்தது கிடையாது .

இந்த பட்டாம்பூச்சியை நீங்கள் வாசித்திருக்கலாம் . நான் இப்போது தான் வாசித்து முடித்தேன் . பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஹென்றி ஷாரியரின் சுய சரிதை papillon . தமிழில் ரா . கி . ரங்கராஜன் அவர்களால் பட்டாம்பூச்சி என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது . சுஜாதா அவர்களால் இவரைப்பற்றி தரப்பட்ட அணிந்த்துரையே என்னை அசத்திவிட்டது . அதற்கு
பிறகு , புத்தகம் தொடங்கி முடியும் வரை நான் கண்டது எல்லாம்
பட்டாம்பூச்சியை தான் . எங்குமே ரங்கராஜன் சாரை காணவில்லை .

செய்யாத கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் . அவன் முழு மூச்சும் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் , தப்பியோடுவதில் தான் இருந்தது . கதை பாதியில் தப்பியோடும் முயற்சிகளில் ஈடுபடுவான் போலும் என நினைத்தேன் . சிறைவாசம் தொடங்கி 43 நாட்களில் அவன் தப்பியோடும் முயற்சிகள் தொடங்குகின்றன .

அப்பப்பா. எத்தனை தோல்விகள் . அத்தனை தோல்விகளிலும் இருந்து எப்படி இவனால் இவ்வளவு சீக்கிரம் மீள முயல்கிறது . உடனடியாக எத்தனை திட்டங்கள் . எத்தனை முயற்சிகள் . இவன் தன்னம்பிக்கை எப்படி எப்போதும் சிகரத்தில் இருக்கிறது . எவ்வளவு தெளிவான சிந்தனை . என்னென்ன யுக்திகள் . சின்ன , சின்ன சந்தோசங்களில் மயங்கிவிடாத உறுதி ,இந்த புத்தகம் முழுதும் நான் ஆச்சரியம் கலந்த பதற்றத்தோடு தான் வாசித்தேன் .

இது ஒரு கைதியின் வாழ்க்கை குறிப்புதான் . ஆனாலும் , மனிதம் நிறைந்திருந்தது . நட்பு , காதல், காமம், பாவம், பரிதாபம் , கண்ணீர் , சிரிப்பு எல்லாமும் இருந்தது . அவன் ஒவ்வொரு நொடியிலும் சுதந்திர காற்றை தேடிக்கொண்டிருந்தான் .

பட்டாம்பூச்சியின் ஒவ்வொரு தப்பியோடும் முயற்சிகளிலும் , படபடத்துக்கொண்டிருந்தது என் இதயமும் தான் . அவன் தனிமை சிறைகளில் , அவன் தண்டணைகளில் வலி என்னையும் வதைத்தது . அவனின் அடுத்தடுத்த தப்பியோடும் முயற்சிகளில் , 'டேய், இப்பவாது ஜெயிச்சுடுடா ' என என் மனம் கூவிக்கொண்டது . சில மரணங்களின் தாக்கங்கள் , குறிப்பாக அந்த இறுதி சடங்கு என்னை இன்னும் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன .

சில சமயம் , வாசிக்க முடியாத அளவுக்கு பதற்றம் ஏற்படுத்திவிடும் . புத்தகத்தை மூடி வைத்து விட்டு பயத்திலேயே தூங்கிவிடுவேன் . கல்லூரி முடிவதற்குள் இந்த புத்தகத்தை வாசித்து முடித்து விட வேண்டும் என்பது தான் என் லட்சியமாக இருந்தது .

சுமார் 500 பக்கங்கள் வாசித்திருப்பேன் . பின் நேற்று இரவு 11 . 15 க்கு வாசிக்க தொடங்கினேன் . கொஞ்சம் வாசித்த பிறகு , உடம்பு சரியில்லை போல் தெரிகிறது தூங்கலாம் என நினைத்தால் , தூக்கம் வர வில்லை . மனம் முழுதும் பட்டாம்பூச்சிக்கு என்னானது என்ற தவிப்பு தான் இருந்தது . பிறகு , பட்டாம்பூச்சியை முழுதும் வாசித்து முடிக்கும் போது . மணி 2 .15 ஆகி இருந்தது . மனம் முழுதும் உற்சாகமும் , ஒரு வித மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது . கடவுளை உணர முடிந்தது .13 வருட அவன் சிறை வாசம் , அவன் வயது நகர்ந்துகொண்டிருப்பதை எனக்கு தெரிவிக்கவே இல்லை . உள்ளே சென்ற அதே 26 வயது வாலிபன் தான் வெளியே வந்தது போல் தான் தெரிந்தது . அந்த உற்சாகத்தை என்னால் இப்போது வரை உணர்ந்து கொண்டிருக்க முடிகிறது . எவ்வளவு உற்சாகம் என்றால் , ஞாயிற்றுக் கிழமை காலை யாருமே எழுப்பாமல் 6 .45 க்கு எழுந்துவிட்டேன் .


இந்த சுய சரிதை ஒரு ஆங்கில படமாக வெளி வந்தது . தமிழ் படங்களே அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லாத எனக்கு அதை பற்றி எதுவும் தெரியவில்லை .

இது சத்தியமாக , நூல் விமர்சனம் கிடையாது . இந்த மாபெரும் மானிட சாசனத்தை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு வயதும் , அனுபவமும் , தகுதியும் கிடையாது . இது ஒரு நல்ல புத்தகம் எனக்கு தந்த உணர்வுகள் தான். பட்டாம்பூச்சியை பகிர வேண்டும் என தோன்றியது . அவ்வளவு தான் .

பட்டாம்பூச்சி , தன் சுதந்திர வாழ்க்கையை இன்னொரு நூலாக எழுதியிருக்கிறான் . அதன் தமிழாக்கம் வெளிவந்திருக்கிறதா ? வெளிவந்திருந்தால் , அதன் பெயர் என்ன என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்

எழுதியவர் : அனுசுயா (26-Mar-17, 1:57 pm)
சேர்த்தது : அனுசுயா
Tanglish : pattaampoochi
பார்வை : 919

மேலே