காதோடு பேசும் கைபேசி

காதோடு பேசும் கைபேசி

எட்டுத்திக்கும் என்பெயரை
இட்டுக்கட்டி உச்சரிக்கும்
இங்கேஎன் நிலைசொன்னால்
இன்றெல்லாம் மூச்சிரைக்கும்

உருவத்தில் சிறியவன்நான்
உலகாலும் வித்தகன்நான்
கருவிலுள்ள மழலையையும்
கவர்ந்திழுக்கும் மந்திரம்நான்

நெஞ்சுரசும் பைக்குள்ளே
நின்றிருப்பேன் ஆண்களிடம்
கைப்பிள்ளைப் போலிருப்பேன்
கருவடையாப் பெண்களிடம்

சோறில்லாக் குடும்பத்திலும்
சோனிஎரிக்சன் உண்டு
நோய்கொண்ட பேரிடத்தும்
நோக்கியா கைபேசியுண்டு

தூரமென்ற பேச்செல்லாம்
தொலைந்து போனதென்னாலே
அமெரிக்கா ஆப்பிரிக்கா
அருகில்வரும் முன்னாலே

விளையாட்டு விளையாட
விரிந்தஇடம் வேண்டும்அன்று
விதவிதமாய் விளையாட
விரல்நுனியே போதும்இன்று

கட்டிளங் காளையரும்
கண்பேசும் கன்னியரும்
கையில்நான் இல்லையெனில்
கலங்குகிறார் அனாதையென

ஏர்பிடித்து வாழ்ந்தவர்கள்
எங்கேயோ தொலைந்தார்கள்
ஏர்செல்கடை வைத்தவர்கள்
ஏற்றம்பல கண்டார்கள்

சாதிமதம் எனக்கில்லை
சமத்துவ சன்யாசியாய்
பெரியோர்க்கும் சிறியோர்க்கும்
பேரின்பம் தருபவன்நான்

அவனின்றி ஓரணுவும்
அசையாதென்றார் அந்நாளில்
நானின்றி ஓர்செயலும்
நடந்திடுமா இந்நாளில்

வாகனத்தில் போகையிலே
வருகின்ற அழைப்புகளை
எமனென்று எண்ணாமல்
செமபேச்சு பேசுகின்றார்

செல்பேசி தொலைந்தாலே
சிந்தைதடு மாறுகின்றார்
உயிரற்ற பிணம்போல
உச்சுக்கொட்டி புலம்புகின்றார்

பலான படத்தையெல்லாம்
பக்குவமாய் ஏற்றிவைத்து
பகலிரவாய் அதைப்பார்த்து
பேதளித்துத் திரிகின்றார்

தொடுதிரையின் முகப்பினிலே
தியாகிப்படம் இருப்பதில்லை
தேகம்வெளித் தெரிகின்ற
திரையழகி படமிருக்கும்

காதலிக்க கதைமுடிக்க
காளையர்கள் இந்நாளில்
கைபேசி எனைத்தானே
கையாண்டு முடிக்கின்றார்

இன்றைய மனிதரெல்லாம்
இதயத்தை தொலைத்துவிட்டார்
இணையத்தோடு எனைஇணைத்து
இரவுதூக்கம் இழந்துவிட்டார்

நன்மைசெய்ய பிறந்தஎன்னை
நாசத்துக்கும் பயன்படுத்தி
மாணவப் பருவத்தினர்
மாண்பிழந்து கிடக்கின்றார்

இப்படியே எத்தனையோ
இதமாகச் சொன்னாலும்
இதயம்தான் மகிழ்ச்சியுறும்
என்னமாற்றம் வந்துவிடும்.

பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (26-Mar-17, 2:27 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 64

மேலே