முகநூலில் வளர்க்க வேண்டியது --- மரபு --- கவியரங்கம்

தமிழ் வாழ்த்து :-

தாய்தமிழே முதல்வணக்கம்
------ தனிநிகராம் மொழிபற்றில்
வாய்நிறையப் பாடுகின்றேன்
------ வகையுறவே கேட்டிடுவீர் .
காய்போன்ற சொற்களையும்
------ கனிபோன்றே மாற்றிவிடும் .
தாய்மைக்கு இணையில்லை
------- தமிழ்மொழியே நீவாழ்க !!!!


தலைமைக்கு வணக்கம் :-

நடுவருக்கு வணக்கத்தை நற்றமிழில் உரைத்திடவே
விடுகின்றேன் கவிதைவரி விடிவெள்ளி போன்றதொரு
படுகின்ற எழுத்துக்கள் பண்புடனே ஈர்த்துவிடும்
தொடுகின்ற வானுலகம் தொல்லுலகைத் தொட்டுவிடும் .


முகநூலில் வளர்க்க வேண்டியது --- மரபு .


மரபுப்பா அழகுடனே முகநூலில்
------ மலர்ந்திடவும் செய்திடுவோம் நாளும்நாம்
தரமான ஓசையுடன் தனிச்சுவையாய்த்
------ தந்திடுவோம் தரணியிலே பலர்முன்னே !
உரமான இலக்கணத்தைக் கற்பித்தே
------ ஊட்டிடுவோம் உலகினிலே சிறப்பாக .
வரமாக வளர்த்திடுவோம் எந்நாளும்
------ வளமாகும் செந்தமிழும் புகழ்பெறவே !!


முயற்சிதனை செய்தாலே எல்லோரும்
------ முத்தான கவிதைகளை மரபினிலே
தயக்கமின்றிப் படைத்திடலாம் வாருங்கள் .
------- தமிழன்னை தந்திடுவாள் ஆசிகளை .
மயக்கங்கள் வேண்டாமே எழுதிடவும்
------- மங்காத நற்றமிழும் துணையிருக்க .
வியப்பாக நோக்குவரே காசினியில்
------ விந்தையல்ல இஃதுண்மை ஏற்பீரே !!!


வெண்பாவில் செப்பலோசை ஒலித்திடுமே .
------ வேராகும் எதுகையுடன் மோனையுமே !
பண்பான அகவற்பா வனைந்திடுவோம் .
------ பக்குவமாய்க் கேட்டிடலாம் அகவலோசை .
கண்டிடலாம் கலிப்பாவில் துள்ளலோசை .
------- காவியமும் படைத்திடலாம் வாருங்கள் .
வண்ணமிகு வஞ்சிப்பா தூங்கலோசை
------- வகையாக வேண்டுவன வளர்த்திடலாம் !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Mar-17, 4:22 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே