யோசித்துப் பார்

யோசித்துப் பார் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்

உனக்கு
ஆடும் மயிலோடு
கோபம் என்றால்
ஆந்தையிடம் போய்
அழகைப் பற்றி
பேச நினையாதே !

உன்னை
துன்பங்கள்
துரத்தி வந்தால்
துவண்டு போய்
சாவிடம் சென்று
சரணடைந்து விடாதே !

நீ
கடல் அலைகளிடம்
தோற்றுவிட்டால்
சாக்கடை நீரோட
சேர்ந்து கொண்டு
குதித்து
கும்மாளமிடாதே!


உன்னால்
நறுமணம்
நுகரமுடியவில்லை
என்பதற்காக
நீ மணமிக்க
மலர்கள் மீது
சகதியை வீசாதே !

உன்னை
சூரியன் சுடுகிறான்
என்று வெறுத்து
இரவின் கன்னத்திலா
முத்தமிட்டுக் கொண்டிருப்பாய் ?

நீ
எதையும்
அவசரமாக யோசித்து
தாமதத்திடம் சென்று
தஞ்சம் அடையாதே !

நீ
வாசிப்பதை மறந்தாலும்
இவையெல்லாம் பற்றி
யோசிப்பதை
மறந்து விடாதே !

எழுதியவர் : பூ,சுப்ரமணியன் (27-Mar-17, 11:04 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : yosithup paar
பார்வை : 350

மேலே