ஒவ்வொரு நாளும் திருநாளே.

ஒவ்வொரு நாளும் திருநாளே
உறவுகள் சேர்ந்தால் பெருநாளே
செல்வமும் வளமும் செழிப்பாகும்
சேமித்தல் உழைப்பின் சிறப்பாகும்
வன்முறை களைந்து வாழப்பார்
வரைமுறை அறிந்து ஆளப்பார்
உன்முறை இதுவென நினைவாலே
ஒருமுறை இருந்து பார் புவிமேலே

வெள்ளம் போலே உடைப்பெடுத்து
வீணே போகா உனை நிறுத்து
வள்ளம் போன்று நீ நிலைத்து
வாவிகள் கடக்க வழி அமைத்து
கள்ளம் இல்லா கருணையுடன்
கனிவாய் உலகில் பெருமையுடன்
உள்ளத் தூய்மை நிறைந்தாலே
உயர்வாய் வாழ்வில் நிறைவாலே

பள்ளம்,மேடு உயர்வு தாழ்வு
பார்த்து நடந்தால் உயரும் வாழ்வு
உண்மை இதுதான் உயிர்களை நேசி
உன்னை திருத்தி உயர்வை யோசி
மண்ணில் வாழ்வு மகிழ்வென கருது
மடமை கண்டால் மோதிப் பொருது
ஊணை உனது உழைப்பில் அருந்து
உலகுக்கு நீயே உப்புள்ள விருந்து.


-ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை

எழுதியவர் : (27-Mar-17, 2:03 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 71

மேலே