ஒரு காதலனின் கடைசி கடிதம் -கங்கைமணி

நாணத்து நடையழகி
நளினமிகு இடையழகி.
நீ நலமா…,
உன் நினைவில்
நான் நலமே!

வானத்து ஓவியங்கள்
வாசலுக்கு வருவதுபோல்.
வண்ண மயில் சிறகசைத்து
வரமளிக்க வருவதெப்போ?

தூரத்தில் தெரிவதெப்போ?.
தெருமுனையில் பார்ப்பதெப்போ?.
தாரமாக நீ அமைந்து -என்
உறவுகளில் கலப்பதெப்போ?

தாய் உன்னை அனைத்திருப்பார்
தந்தை தலை கோதிருப்பார்.
தாய்மடியாய் நானிருந்தால்
தலைவைத்து படுத்திருப்பாய்.,

தெரியாமல் ஆணானேன்
தறியிலோடும் நூலானேன்
மான் துரத்தும் புலியானேன்
மலர் மயக்கும் கதியானேன்.

ஆணுக்கு அணிகலனாய்
அணியப் பிறப்பெடுத்தவளே.
அறுசுவையில் அருஞ்சுவையாய்
அடிநாக்கில் ருசிப்பவளே

ஒத்தையடிப் பாதையில-நான்
ஒனக்காக காத்திருக்கேன்
வெட்டுப்பட்ட மரத்தப்போல
துளிராமத் தானிருக்கேன்.

தங்கவள தவழ தவழ
தண்ணிக்குடம் ததும்ப ததும்ப,
எட்டுவச்சு நடக்கும் அழகே
என்னருகே வாடிநிலவே!

ஆத்திரத்தில் நான்பேசி-உன்ன
அதிரவச்சு பார்த்தவந்தேன் -இன்று
ஆலகால விஷமருந்த -உன்
அனுமதிய கேக்குறேண்டி!

கோவத்துல போன ஒன்ன
கெஞ்சிக் கேட்டு கூடலாம்னு
கட்டிவச்ச கனவுக்கோட்ட
கண்ணெதிரே நொறுங்கிருச்சே!.

காத்துவாக்கில் சேதி ஒன்னு-நம்ம
காதலையும் அழிச்சிருச்சே! -உன்
கல்யாண பத்திரிக்கை -என்ன
கதமுடிக்க சொல்லிருச்சே!.

உன் கண்மையா நான் அழிய
உன் கண்ணீர கேட்குறேண்டி.
களிமண்ணும் கரையணும்னா
கனத்தமழை பொழியனூண்டி

நெத்திவழி வியர்வையில-உன்
நெஞ்சுக்குழி பார்க்கலையே.
பக்குவமா பாலெடுத்து -நான்
பருக நீயும் கொடுக்கலயே!

நிம்மதியா நான் ரசிக்க
நெனச்சவாழ்க்க அமையலயே!
நீ மறந்து நான் இறக்க
இறப்புக்கூட ருசிக்கலையே!

கறைபடிஞ்ச ஓவியனா
காத்திருக்கேன் வாடியம்மா.
வாய்க்கரிசி போட்டுப்புட்டு
வந்த வழி போடியம்மா!!...

இப்படிக்கு...,

உணர்வறுத்த ஒருத்திக்காய்.,
உயிர் கொடுக்கும் காதலன்.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (27-Mar-17, 2:57 pm)
பார்வை : 576

மேலே