குழந்தையுடன் குழந்தையாய் சிறுகதைகள் நூல் ஆசிரியர் நெருப்பாலைப் பாவலர் இராம இளங்கோவன் நூல் விமர்சனம் கவிஞர் இரவி

குழந்தையுடன் குழந்தையாய் !
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !

முக்கனிப் பதிப்பகம் எண் 26. இரண்டாம் 'டி' குறுக்குத் தெரு ,சர் .எம் .வி .நகர் ,இராமையா தேங்காய்த் தோட்டம் .,பெங்களூரு.5600016. கைப்பேசி 09845526064.

224.பக்கம் விலை 150 ரூபாய்
********
நூல் ஆசிரியர் நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் அவர்கள் பெங்களூரு பாவணர் பாட்டரங்கின் பொறுப்பாளர், பெங்களூரு பெருமைகளில் ஒன்றானவர் .கவிதைகளை நெருப்பென அனல் வரிகளால் வடித்து சமூகத்தைத் தட்டி எழுப்புபவர். இலக்கிய ஆர்வலர். மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என மூன்று பாக்களும் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். சிறுகதையும் நன்றாக எழுத வரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக “குழந்தையுடன் குழந்தையாய்” என்ற இந்த நூலில் 26 சிறுகதைகள் எழுதி உள்ளார். சகலகலா வல்லவர் என்பதை மெய்பித்து உள்ளார். இந்நூலை தனது தந்தை தெய்வத்திரு ஆறு. இராமசாமி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

பெங்களூரு திருவள்ளுவர் மன்றத்தின் மாதர் கூட்டத்திற்கு இலவசமாக இடமளித்து வரும் புரவலர் முனைவர் ஆ. மதுசூதனபாபு அவர்களும், எழுத்தாளர் மொழிபெயர்ப்பு நாவல் ஆசிரியர் ஜெயா வெங்கட்ராமன் அவர்களும், அணிந்துரை அழகுரையாக வழங்கி உள்ளனர். முக்கனி பதிப்பகம் சார்பாக சுலோச்சனா இளங்கோவன் அவர்கள் பதிப்புரை வழங்கி உள்ளார்கள். நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் அவரது சாதனையை வெற்றியை, உழைப்பை பறைசாற்றும் விதமாக உள்ளன.

முதல் சிறுவிதையான “பாறைக்குள் பவளம்” மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாகவும், சாதிமத பேதங்களை சாடும் விதமாகவும் நன்கு எழுதி உள்ளார். ஒன்னா, அம்பி என்று பிராமணர்கள் பேசும் வழக்கச் சொல்லினைப் பயன்படுத்தி இயல்பாக கதை வடித்துள்ளார். திருப்பதி உண்டியலில் பணம் போடுவதை விட, உயிருக்குப் போராடும் மனிதனின் சிகிச்சைக்கு உதவுவது சிறப்பு என்ற கருத்தை நன்கு வலியுறுத்தி, சமுதாயத்தை சீர்படுத்துவதற்கு தேவையான, நல்ல பல கருத்துக்களை நன்கு வலியுறுத்தி உள்ளார்.பிராமணர்களின் பேச்சு வழக்கில் நன்றாக எழுதி உள்ளார் .

அடுத்த பதிப்பில் எழுத்துப் பிழைகள் நீக்கி வெளியிட வேண்டும். ‘மூளைவளர்ச்சி இல்லாத ’ என்பது ‘மூலவளர்ச்சி இல்லாத’ என்று உள்ளது.

சிறுகதைகள் முழுவதும் மனிதநேயம் விதைக்கும் விதமாக, சிந்திக்க வைக்கும் விதமாக நன்கு வடித்துள்ளார். பாராட்டுக்கள். சிறுகதைகளுக்கான தலைப்புகளும் நன்கு தேர்ந்தெடுத்த சொற்களாக வைத்து உள்ளார்.
பாறைக்குள் பவளம், திசை மாறிய தென்றல், தாகம் தீர்க்கும் பாலைவனம், மனக்காலத்தில் கசிந்த கருணை, மனசாட்சி, இப்படி சிறுகதையின் தலைப்புகளே கதையின் கருவை பறைசாற்றும் விதமாக மிகப் பொருத்தமாக சூட்டி உள்ளார்.

நூலாசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள், கவிஞர் என்பதால், கதையில் வரும் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் கவித்துவமாக உள்ளன. சில இயல்பாக உள்ளன.

காலையில் எழுந்து விடுவான் என்பதை இப்படி எழுதி உள்ளார். பாருங்கள்.

தாகம் தீர்க்கும் பாலைவனம் !
உதயசூரியன் தன் உறக்கத்தைக் கலைந்து விட்டு,
கடலில் குளித்து புறப்படும் முன்பே, அன்றாடம்
அதிகாலையே உறக்கத்தை உதறித் தள்ளி
எழுந்து விடும் வழக்கமுடைய முகிலன்.

சின்ன சின்ன சிறுகதைகள் மூலம் சிந்தையில் சிறு மின்னலை உருவாக்கி வெற்றி பெறுகின்றனர் நூல் ஆசிரியர். சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்ற இலக்கணம் கூறும் விதமாக கதைகளை வடித்து உள்ளார். வளரும் எழுத்தாளர்கள் இந்நூலை படித்தால் ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்ற புரிதலை உண்டாக்கும் நூல்.

"வானத்தில் இரவு நேரங்களில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்த போதும் பளிச்சென ஒற்றை வெண்ணிலவைக் காணமுடிவதைப் போல,"

இப்படி ஒவ்வொரு சிறுகதையையும் கவித்துவமான உவமைகளுடன் தொடங்கி படிக்கும் ஆர்வத்தை தொடக்கத்திலேயே உண்டாக்கி விடுகின்றார். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என சிறுகதைகளைச் சிறப்பாக கட்டமைத்து உள்ளார்.

“சிதைக்கப்பட்ட உயிர்” என்ற சிறுகதையில் அனாதை குழந்தையின் மனவலியை நன்கு உணர்த்தி உள்ளார். கதை படிப்பது போல இல்லை, ஒவ்வொரு சிறுகதையும் படிக்கும் போது நமது மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நேரடியாகப் பார்க்கும் நிகழ்வுகள் போல மனதில் பதிந்து விடுகின்றன. இது நூலாசிரியர் வெற்றி.

‘குழந்தை இல்லை’ என்று அனாதை விடுதியில் தத்து எடுக்கின்றனர். சில வருடங்கள் ஆனதும் அவர்களுக்கு குழந்தை பிறக்கின்றது. சொந்தக் குழந்தை வந்தவுடன், தத்து வந்த குழந்தையை வெறுக்கின்றனர். பின் விரட்டுகின்றனர்.
மனிதர்களின் மனம் மிகவும் சுயநலமிக்கது. மனிதாபிமானமற்றவர்கள் நாட்டில் மலிந்து விட்டனர், என்பதை கதைகளில் நன்கு வலியுறுத்தி உள்ளார். எந்த ஒரு தவறுமே செய்யாமல் அனாதை குழந்தை ஆக்கப்பட்டு, அவர்களின் உயிர் உள்ள வரை வாடும் அவலத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எனவே அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்ற அறிவுரையை ஒரு சிறுகதையின் முலம் உணர்த்தி உள்ளார்.

‘குழந்தையுடன் குழந்தையாய்’ நூலில் தலைப்பில் உள்ள சிறுகதை மிக நன்று. இக்கதை படித்த போது இது நூலாசிரியரின் சொந்தக்கதை என்பது எனக்கு விளங்கியது. எனக்கு மட்டுமல்ல படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் விளங்கும்.

உண்மைதான். அரசு வேலையை விட்டு விட்டு, முழு நேர எழுத்தாளராக, கவிஞராக மாறியதை சராசரிப் பெண்கள் யாருமே ஏற்க மாட்டார்கள். இன்று நாட்டு நடப்பு அப்படித்தான். எழுத்தாளர், கவிஞர் இல்லங்களில், வெளி இடங்களில் கிடைப்பது போன்ற மரியாதை அவரவர் இல்லத்தில் கிடைப்பது இல்லை. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல எல்லோருக்குமான அனுபவம் இதுதான். ஆனால் ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ மறைந்தபிறகு அவரை வெளிஉலகம் பாராட்டும் போது குடும்பம் உணரும்.

இது கதை அல்ல உண்மை என்பதால் ‘கடைசிக்கதை’ கதையல்ல சொந்த வாழ்வில் நிகழ்வு என்பதால் படித்துவிட்டு கண்ணில் கண்ணீர் வந்தது. நூலாசிரியர் பலமுறை சந்தித்து உரையாடி உள்ளேன். ஆனால் அவர் ஒருபோதும் சொந்தக்கதை சொல்லியதே இல்லை. இக்கதை படித்துதான் அவரது கதை உணர்ந்தேன். நானும் அரசு வேலையை விட்டு விடலாம் என்ற எண்ணம் இருந்தது. இக்கதை படித்து அந்த எண்ணத்தை விட்டு விட்டேன்.

குழந்தையுடன் குழந்தையாய் பேத்தியை ஏந்திய புகைப்படம் அட்டைப்படத்தை அலங்கரித்து உள்ளது . மனைவி எவ்வளவு திட்டினாலும் அவர் உயிரோடு உடன் வாழ வேண்டும். மனைவி இறந்து கணவன் இருப்பது கொடுமை தான். நல்ல பிள்ளைகள் ஒரு ஆறுதல்.

கடைசி கதையில் எழுதியது போல புகைபிடிக்கும் பழக்கமோ ,மது அருந்தும் பழக்கமோ தங்களுக்கு இல்லை என்பது உண்மை .ஆனால் பொடிப் போடும் பழக்கம் உள்ளது .அதனை நிறுத்தி விட்டால், நீண்ட நாள் வாழ்வீர்கள் தங்கள் தமிழும் நீண்ட நாள் வாழும் .
.

எழுதியவர் : கவிஞர் இரவி (27-Mar-17, 9:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 176

சிறந்த கட்டுரைகள்

மேலே