ஊருக்கெல்லாம் சோறிட்ட இனத்தை காத்திடுவோம்

காடும் மேடும் வயலாகிட
கல்லும் உருகி நீராகிட
வியர்வை சிந்திட உருவானது நெற்களம்
விவசாயி வாழ்க்கை முழுதும் போர்க்களம்!

தினம் தினம் சவாலை சந்தித்து
திடமானது இவன் தோள்கள்!
சர்க்காரை நம்பியே திவாலாகி
இருளாய் போனது இவன் நாள்கள்!

இவன் விழித்த பிறகே
விடியலும் விடிகிறது நாளும்!
மாட்டைப் போன்று உழைப்பதாலே
மதிப்பிழந்து போனான் போலும்!

விண்ணையும் மண்ணையும் நம்பி
தன்னை இழந்த போதும்!
மண்ணுக்கெல்லாம் சோறு போட
மனதளவும் பார்த்ததில்லை பேதம்!

பருவமழை பொய்த்து பொய்த்து
பாழ்படுத்துகிறது மேலும் மேலும்!
இறைவனும் இரக்கமற்றோ
இவனைப் படைத்தான் போலும்!

ஊருக்கெல்லம் சோறு போட
உடலை வருத்தி உழைத்தவன்!
ஒருவேளை உணவை கூட
ஓய்விருந்து உண்டதில்லை!

உழைத்த உழைப்புக்கெல்லாம்
ஊரான் இட்டதே விலை!
விளைச்சலெல்லாம் வீணாய் போக
யாரைச் சொல்வது பிழை!

அண்டை வீட்டிற்கும் சேர்த்து சமைத்தவன்
அண்டை மாநிலத்தில் கையேந்துகிறான் தண்ணீருக்கு!
அரசாங்கமும் செவிடாய் போனதோ
ஆதரவற்ற இவன் கண்ணீருக்கு!

விளைவித்ததை வீதிதோறும் விற்றவனுக்கு
விளைநிலத்தை விற்கும் அவலம் ஏனோ!
வானம் பார்த்து வாழ்ந்தவனை
வருணனும் கைவிட்டான் தானோ!

வியர்வை சிந்தி உழைத்ததெல்லாம்
வீடுவரும் வேளையிலே!
இத்தனை நாள் வாரா மழையும்
இன்று ஏனோ நாசவேலையிலே!

சட்டங்கள் அனைத்தும் ஏட்டினிலே
சடலமாய் போகிறான் வீட்டினிலே!
திட்டங்கள் போட்டார் கோட்டையிலே
தினம் எத்தனையோ பேர் பாடையிலே!

வீதிக்கு வந்து போராடுவது
விதியாகி போன படியால்!
நாளுக்கு நாள் இவன் மனம்
தற்கொலையால் இணையுது சங்கமம்!

உணர்வு உள்ள மனிதராய்
மீண்டும் நாமும் எழுந்திடுவோம்!
ஊருக்கெல்லாம் சோறிட்ட இனம்
மாண்டு போவதை தடுத்திடுவோம்!......


தங்கமணிகண்டன்.........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (28-Mar-17, 10:49 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 1427

மேலே