காதல் பழக வா-14

காதல் பழக வா-14

உன்னை வெறுத்திடவே
யுத்தம் செய்து
அதில் தோற்று போய் நிற்கிறேன்.....
இனியொருமுறை நான்
உன்னை விரும்பவில்லை என்று
கூறினாலும் அது
நான் என்று நம்பிவிடாதே....
காதலை மனதுக்குள்
மறைத்து கொண்டு விலகிச்செல்ல
துடிக்கும் பேதையாய் இருக்கக்கூடும்....


தன் நிலையை நினைக்க நினைக்க ராதிக்கு அழுகையும் கோபமுமாய் வந்தது.....
நேற்றுவரை எதை தன் வாழ்வின் லட்சியம் என நினைத்தாளோ அதை ஒரே நிமிடத்தில் பொசுக்கிவிட்டு சிறைக்கைதி போல இந்த வீட்டில் அடைத்து வைத்திருக்கும் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று நினைக்கும்போதே கோபத்தில் அவளின் கண்கள் சிவந்து போனது.....எப்படி அவனை பழி வாங்குவது, ஆனால் அவனை பழிவாங்குவதால் தனக்கென்ன லாபம் வரப்போகிறது.... அஸ்தமித்த வாழ்க்கை திரும்ப பிரகாசிக்கவா போகிறது, ஆனால் அவன் செய்த காரியத்திற்கு பதிலுக்கு பதில் திருப்பி குடுக்க தான் வேண்டும்......

பழி வாங்கும் எண்ணம் வாழ்க்கையை சரியான வழியில் நடத்தி செல்லாது என ராதி சில புத்தகங்களில் படித்திருக்கிறாள், ஆனால் அதை பற்றி எல்லாம் இன்று அவளுக்கு கவலையில்லை, தனக்கு கண்ணன் அநியாயம் அல்லவா செய்துவிட்டு ஆண்திமிர் காட்டிக்கொண்டு திரிகிறான், அவனுக்கு பெண்ணின் பலத்தை காட்டுவதை விட்டுவிட்டு பழிக்கு பழி தவறென்று பாடமா படித்து கொண்டிருக்க முடியும்.....ராதி அந்த வீட்டின் ஒட்டு மொத்த அமைதியையும் ஆட்டம் காண செய்ய முடிவு செய்துவிட்டாள்.....
இப்படியே ராதையின் யோசனை அங்கும் இங்குமாக அலைபாய்ந்து அவள் மனநிம்மதியை கெடுத்து கொண்டிருக்க அவளின் மனம் விரக்தி நிலையை அடைந்து ஒரு மோசமான முடிவை எடுக்க ஆரம்பித்து விட்டது...... அதன்படி செயல்படவும் தொடங்கிவிட்டாள்.....
"ஹலோ, கவி நான் சொல்றத மட்டும் கேளு, குறுக்க பேசாத....நான் சொல்றபடி செய்றது உன்னோட பொறுப்பு"

தன் நிலைமையையும், திட்டத்தையும் தெளிவாக விளக்கி கூறிவிட்டு மொபைலை வைத்த பின் தான் ராதிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.......

ராதி தன் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய உருப்படியான விஷயம் என்றால் அது உண்மையான நண்பர்களை அவள் வாழ்க்கைக்குள் இணைத்துக்கொண்டது தான்....அதுவும் உயிர் நண்பர்களாக, இவளுக்காக எத்தனை பெரிய பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் நண்பர்களாக உருவாக்கி கொண்டது தான் அவளின் இந்த நிலைமையிலும் அவளுக்கு கைகொடுத்து உதவ போகிறது....இப்படிப்பட்ட நண்பர்களை பெற ராதியும் நிறைய விலைகொடுத்திருக்கிறாள், இவர்களுக்காக பல பிரச்சனைகளில் மாட்டி அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றியது முதல் எத்தனையோ செய்திருக்கிறாள்.....அப்படி ஒன்று தான் ராதியின் தோழி ராதிகாக்காக சாட்சி கையெழுத்து போடும் உதவியை செய்ய போய் இவள் தலையெழுத்தே மாறிப்போனது....

அப்படிப்பட்ட நண்பர்களை அவள் கண்ணனுக்கு எதிராக போராடும் இந்த களத்தில் இறக்கி மிகப்பெரிய தவறையும் விபரீதத்தையும் அதிகப்படுத்திக்கொள்ள போவது தெரியாமல் நிம்மதி அடைந்து கொள்வது தான் அவள் செய்யும் பெரும் தவறு....

"ராதி, சாப்பிட வாம்மா....என்ன யோசனை பண்ணிட்டு இருக்க, கல்யாண கனவுகளா?"

"அண்ணி, அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் அப்புறமா சாப்டுக்கறேனே, எனக்கு இப்போ பசிக்கல"

"அப்போ கண்டிப்பா கல்யாண கனவு தான், கண்ணனோட டூயட் பாடறமாதிரி கனவு கண்டுட்டு இருக்கியா, அதான் பசிக்கக்கூட மாட்டேங்குது"

"அண்ணி கிண்டல் பண்றது போதும், நான் சாப்பிட வரேன், இப்போ எனக்கு நல்லாவே பசிக்குது, சாப்பிட போகலாமா"

"அப்படி வழிக்கு வா, எப்படி உனக்கு பசிக்க வச்சேன் பாத்தியா, நீ சாப்பிட வரணுமேன்னு தான் கொஞ்சம் கிண்டல் பண்ணேன், தப்பா நினைச்சிக்காத"

"கொஞ்சம் இல்ல, நிறையவே கிண்டல் பண்ணிட்டீங்க, இருந்தாலும் நீங்க தானே கிண்டல் பண்றிங்க, சோ நோ பிராப்லெம்"

வெளியில் சிரித்தபடி பிரச்சனையில்லை என்று சொல்லிவிட்டாலும் கண்ணனோடு தன்னை இணைத்து யாரவது பேசிவிட்டால் ராதிக்கு கோவத்தில் அவளை கட்டுப்படுத்திக்கொள்வது கடுமையான காரியம் ஆகிவிடுகிறது.....

"அண்ணா, அண்ணி வந்துட்டாங்க, அங்க பாருங்க"

அழகிய தேவதையை போல் தன்னை கண்களாலே எரித்து சாம்பலாக்கும் கோபத்துடன் வந்த ராதியை தன் மனதுக்குள் நிறைத்துக்கொள்ள ராதியையே பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை கண்டு இளசுகள் மறைமுகமாக கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்...

"ஏய் சசி, நீ கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பாத்துட்டியா"

"இல்லடி, அப்போ எக்ஸாம்ஸ் நடந்ததால் என்னால பாக்க முடியலையா, ஆனா அந்த படம் ஒன்னும் அவ்ளோ பிரமாதமா இல்லனு அம்மா சொன்னதால அதுக்கப்புறம் நான் அந்த படத்தை பாக்கறதுல இன்டெரெஸ்ட் எடுத்துக்கல"

"அப்படினா இப்போ பாருடி, கண்ணா லட்டு தின்ன ஆசையாவோட மெயின் பிக்ச்சரே இப்போ தான் போய்கிட்டு இருக்கு, இப்போ மிஸ் பண்ணின அப்புறம் வருத்தப்படுவ , நம் வீட்டு தொலைக்காட்சியின் முதல் முறையாக நடக்கற ரொமான்டிக் சீன் நல்லா பாத்துக்கோ”

அதை புரிந்து கொண்ட இளசுகள் வாய்விட்டு சிரிக்க, சசி புரிந்தவளாய் " செமயா படம் காட்றாங்கடி" என்று பலமாக சிரித்ததில் கண்ணனின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது....

"என்ன சிரிக்கறீங்க, சாப்பிடற இடத்துல என்ன பேச்சு, அமைதியா சாப்பிடுங்க" என்று கடினமாகவும் இல்லாமல் சிரித்தபடியும் இல்லாமல் எதோ ஒரு பாணியில் கூற கண்ணின் வார்த்தையில் அமைதியாக்கப்பட்டார்கள் அந்த வீட்டின் வாண்டுகள்......

ராதிக்கோ இவர்கள் பண்ணும் கலாட்டாவால் கோபம் தான் எகிறி கொண்டே போனது......சாப்பாடும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் என்று ரூமுக்கே போய்விடலாம் என்றால் அப்படி செய்தால் தன் திட்டம் பாழாகிவிட இது ஒரு வாய்ப்பாகி விடும் என்ற எண்ணத்தில் போனால் போகிறது என்று சமாளிக்க முடிவெடுத்தாள்....

"ராதி நீ கண்ணன் பக்கத்துல இருக்க சேர்ல உட்காருமா, ராதிக்கு முதல பரிமாறுங்க, காலைல கூட ஒழுங்கா சாப்பிடல" என்ற அவளின் அத்தையின் கரிசனம் ராதியின் கோவத்தை அப்போதைக்கு கொஞ்சம் குறைத்தது.....

அவன் அருகில் இப்படி நெருக்கமாய் உட்கார்ந்ததில் ராதியின் பெண்மை கொஞ்சம் சங்கடப்பட்டு தான் போனது, பார்த்தமாத்திரத்தில் கண்ணனின் ஆண்மையில் பிரமித்து போனவள் ஆயிற்றே, அவளின் கோபம் மட்டும் தலைதூக்காமல் இருந்திருந்தால் கண்ணின் கண்ணுக்குள் கட்டுண்டு கிடந்திருப்பாள்.....
ராதி தனக்கு கொடுக்கப்பட்ட உணவை எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலைகுனிந்து உண்டுகொண்டிருக்க அவள் அருகாமையில் கண்ணனின் ஆண்மையோ அடங்கமாட்டாமல் தவித்தது.....

கண்ணனின் மனம் அடங்கினாலும் அவனின் கால்கள் அடங்காமல் ராதியின் காலை உரச டேபிளின் கீழே ஒரு இளமை யுத்தம் ஆரம்பித்துவிட அதுவே ஆரம்பப்புள்ளி ஆனது......

ராதி எவ்வளவோ முயன்று பார்த்தாலும் கண்ணனின் கால்கள் அடங்குவதாய் இல்லை, அவனின் உரசலால் ராதிக்குள் சற்று முன்னர் தனிந்த கோபத்தீ மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருந்தது......அதற்க்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்ணின் கால்களை பலம்கொண்டு மிதிக்க இதை எதிர்பார்க்காதவனாய் கண்ணன் வலியால் கத்திவிட அத்தனை பேரின் கவனமும் கண்ணனின் பக்கம் திரும்பியது......

"என்னாச்சுப்பா, எதுக்கு இப்படி கத்தின?"கண்ணனின் அத்தை கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்ணன் முழிக்க ஆரம்பித்துவிட்டான்......

கண்ணின் இந்த தடுமாற்றம் ராதிக்கு பரிதாபம் உண்டாக்க தன்னையும் அறியாமல் ராதி கண்ணனுக்கு உதவ ஆரம்பித்துவிட்டாள்....

"நான் சேர் நகர்த்தும்போது அவரோட கால்ல இடிச்சிருச்சு, அதான் எதிர்பார்க்காத வலியால கத்திட்டாரு"

ராதியின் பதிலில் சமாதானம் அடைந்தவர்களாக அனைவரும் உண்பதில் கவனம் செலுத்த ராதியின் மனமோ குழப்பமடைந்து, எதுக்கு இப்படி அவனுக்காக பேசினோம், அவன் பதில் சொல்லாம தடுமாறி போகறத ரசிக்காம எதுக்கு அவனுக்கு போய் உதவி செஞ்சோம்...

ராதியின் மனம் குழம்ப ஆரம்பித்துவிட்டது....

எழுதியவர் : இந்திராணி (29-Mar-17, 5:24 pm)
பார்வை : 696

மேலே