கறைபடியா காதல் -கங்கைமணி

நண்பர் முகமது சர்பான் அவர்களின் கதை நிகழ்வுக்காக எழுதப்பட்ட கவிதை இது. இக்கவிதை அந்த காதலனின் உணர்வாக விரிகிறது. நன்றி


நொடியில் உலகம்
உடைந்து நொறுங்க...,

அனிச்சை செயலும்
அடங்கித்துடிக்க...,

கண்ணெதிரே கண்டேன்
கதிகலங்கி நின்றேன் !
என்னவளை சிதைத்தாய்
இரக்கமற்று சிரித்தாய் !

இதயமற்ற இறைவா
எனைக்கொன்றால் என்ன -அவள்
மலர்மேனி துடிக்க
மனமெல்லாம் வலிக்க
மகிழ்ந்தாயே பார்த்து -அவளை
நெருப்பாற்றில் எரிந்து.

மனையாளாய் மாறி
மகிழ்விக்க நினைத்தாள்
மான்விழியில் மயக்கி
மடிசாய்க்க துடித்தாள்.

கனவெல்லாம் கலைத்தாய்
காட்சியற்று மறைத்தாய் -அந்த
ஓவியத்தை ஒடித்து-இது
உனக்கென்று கொடுத்தாய்!

சிறகொடித்து. பறக்க
தடைவிதித்த இறைவா!
உயிர் விடுத்து காதல்
பயிர் வளர்த்தாய்.நன்றி !

உலகென்னும் கூட்டில்
உணர்வள்ளி நாங்கள்
உயிர் வாழும் வாழ்வை
உளமார போற்று !

மார்மீது சாய்ந்து-என்
மகளாகும் அவளின்
மனம் ஆற தேற்று.,
காதல் கவிபாட வாழ்த்து !

உலகெல்லாம் தருவேன் -அவள்
உயிர்வாழ மகிழ்வேன்.
கறைபடியா காதல்-இதை
கருத்தோடு காப்பேன்.

குழந்தையாய் அவளை
கொண்டாடி மகிழ்வேன்
உடைமாற்றி விடுவேன்
தலைசீவி முடிப்பேன்

அவள் ஸ்பரிசமே,எனக்கு
பாஷைகள் ஆகும்.
அவள் கண்விழி-
அசைவில் ,என்
காலங்கள் ஓடும்.

ஆணென்ற நானும்
பெண்ணென்ற அவளும்
இல்லாது அழிவோம்
பொல்லாத காமம்
கலக்காத காதல்
வேறாகி வாழ்வோம்!

என் மகளான அவளை
என் தாயாக்கி மகிழ்வேன் -தினம்
கரம் பற்றி கனிவாய்
கதைபேசி துயில்வேன்.

என்றாவதோர் நாள்
எனக்காக அவளின்
கண்ணோரம் வழியும்
கண்ணீரே போதும்.

காண்கின்ற இறைவா
எல்லாமே எடுத்து-எனை
இல்லாமையாக்கு-என்னை
உயிரோடு விட்டு -அவள்
உணர்வோடு கட்டு !.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (29-Mar-17, 7:48 pm)
பார்வை : 179

மேலே