ஆவி புகுந்த வீடு - நகைச்சுவை நாடகம் - மீள்பதிவு

................................................................................................................................................................................................
--------------------------------------------------------------------ஆவி புகுந்த வீடு-----------------------------------------------------


பாத்திரங்கள்:

குடுகுடுப்பாண்டி, சசிதரன், சுசீலா, சசிதரனின் நண்பன் ஜோ.

பகுதி 1

புது மணத் தம்பதிகளான சசிதரனும் சுசீலாவும் புது வீட்டில் குடியேறுகின்றனர்.

இரவு இரண்டு மணி. சுசீலா உறக்கத்திலிருக்க, தூக்கம் பிடிக்காத சசிதரன் வெளி முற்றத்துக்கு வருகிறான்.

சசி : சே ! எவ்வளவு கொசு ! படையெடுத்து வருது. சம்பளப் பணத்துல பாதி கொசு வர்த்திக்கே செலவாகும் போலிருக்கே...

(குடுகுடுப்பாண்டி வருகிறான். அவன் கையில் சின்ன மண்டையோடு...)

குடுகுடுப்பாண்டி: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்.......

(மண்டையோட்டின் கண்கள் குபீரென்று ஒளிர்கின்றன. வீட்டை விட்டுத் தள்ளிப் போகிறான். ஒளிர்வது நிற்கிறது)

குடுகுடுப்பாண்டி: ஏ ஷாமி, ஏ ஷாமி..... இப்படி வா..!

சசி : என்னய்யா, நல்ல காலம் குறை பிரசவமாப் போயிடுச்சு ??? என்னை வேற கூப்பிடுற?

குடுகுடுப்பாண்டி: ஏ ஷாமி, இது சாதாரண மண்டையோடில்ல...! ஆவி டிடெக்டர்... உங்க வீட்டுல ஆவி இருக்கு, ஷாமியோவ்..!

சசி : இங்க பார், உனக்குப் பழைய துணி, காசு பணம் வேணும்னா நேரிடையாக் கேளு.. அத விட்டு ஆவி பாவின்னு கதையளந்தே, கழுத்தைத் திருகிடுவேன்.. ! நானே கில்லாடிக்கு கில்லாடிடா.. இல்லாட்டி எஸ்ஸெஸ்ஸெல்சி மட்டும் படிச்சிட்டு எம்,காம்னு சொல்ல முடியுமா? மானேஜருக்கு பிஏவா வேலை பார்த்துட்டு மானேஜரா இருக்கேன்னு நம்ப வைக்க முடியுமா?

குடுகுடுப்பாண்டி: அட ஷாமி, நான் நாலு டஜன் வூட்டுக்கு குறி சொல்லிட்டுத்தான் இங்க வந்திருக்கேன். அங்கெல்லாம் இந்த சுப்பாணி தேமேன்னுதான் இருந்தான்.. இங்கதான் கண்ணத் திறக்கறான்.. சுப்பாணி கரெக்டா கண்டு பிடிக்கிறவன் ஷாமி..!

சசி : நீயும் உன் சுப்பாணியும்..! மண்டையோட்டுக்கு பேரைப் பாரு ! புது வீட்டுல எப்படிடா பேய் வரும்?

குடுகுடுப்பாண்டி: புது வீடா? ஐயையே? இந்த வூடு கட்டச் சொல்ல எங்கம்மாதான் செங்கல் எடுத்துக் கொடுத்தா.. ஒங்க வூட்டு ஈசான மூலையில ஊஞ்சல் இருக்குமே? அங்கதான் நா விளையாடிட்டுக் கிடப்பேன்...! புது வூடாமில்ல? வூடு கட்டி சரியா எழுவத்தி மூணு வருசம் ஏழு மாசம் மூணு நாளாகுது..!

சசி : என்னய்யா சொல்ற? அப்ப பழைய வீட்டை கில்மா வேலை பண்ணி என் மாமனார் என் தலைல கட்டிட்டாரா?

குடுகுடுப்பாண்டி: ஷாமி, நீ கழுத்துல போட்டிருக்கியே சங்கிலி, அதே போல நானும் போட்டிருக்கேன், பாரு..! அல்லாம் கில்ட்டு..! நீ கில்லாடின்னு பார்த்த மாத்திரத்துலேயே தெரியுது ஷாமி !

சசி : ஒரு அப்பாவிய ஏமாத்தி இருக்காங்க..! அநியாயம்..! அராஜகம்..! காந்தி தேசமே, நீதி இல்லையா? அந்தாளை என்ன செய்றேன், பாரு...!

குடுகுடுப்பாண்டி: ஷாமி, ஷாமி, இங்க பார். ஒன் வூட்டுக்கு வரச் சொல்ல சுப்பாணி கண்ணு தொறக்குறான் பார்...!

சசி : என்ன இது? இந்தியா ஒளிர்கிறது விளம்பரம் மாதிரி மண்டையோடு ஒளிர்கிறது !

குடுகுடுப்பாண்டி: நிறைவேறாத ஆசையோட அல்பாயுசுல செத்தவங்க ஆவியா அலைவாங்க. அது சரி, அங்க வர்றது யாரு?

சசி : எம் பெண்டாட்டி...

குடுகுடுப்பாண்டி: அவுங்க பெண்டாட்டிதானா?

சசி : பின்ன என்ன புருசனா?

குடுகுடுப்பாண்டி: இல்ல ஷாமி , அவுங்க ஒரு வேளை ஆவியா இருந்தா?

சசி : யோவ்..!

குடுகுடுப்பாண்டி: சுப்பாணி பொய் சொல்லாது ஷாமி, நீ போய் டெஸ்ட் பண்ணு..!

சசி : எப்படி? ஏதாவது கிராபிக்ஸ் காட்டச் சொல்லவா?

குடுகுடுப்பாண்டி: பேச்சு குடு ஷாமி, சட்டுன்னு சுயரூபம் காட்டிடும்..!

(சசி போகிறான்)

பகுதி 2

சசி : சுசீ..! தூங்கலையா?

சுசீ : இந்நேரம் எழுந்து வாக்கிங் போறது எனக்குப் பழக்கம்...

சசி : (தனக்குள்) சுத்தப் பேய் பழக்கமா இல்ல இருக்கு? சரி சுசீ, நீ எப்பப் பொறந்தே?

சுசீ : இருபத்தேழு ஜூன் ஆயிரத்தி தொளாயிரத்தி தொண்ணூத்தி ரெண்டாம் வருசம்..

சசி : நல்லது நல்லது... எப்ப செத்துப் போனே?

சுசீ : என்னது ???

சசி : இல்ல, பிறந்தவங்க எல்லாம் ஒரு நாள் போய்த் தானே ஆகணும்.. அதான் கேட்டேன்.. நீ ஏன் முறைக்கிற ?????

சுசீ : ஐயையோ ! ! ? ?? எங்கப்பா என்னை ஒரு பைத்தியத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரே ? யப்பா... யப்பா...

(அலைபேசியை எடுக்கிறாள்..) தெரு முனையில நில்லுங்கப்பா.. நான் உடனே வரேன்.. (கிளம்பிப் போகிறாள்)

சசி : (தனக்குள்) ஐயையோ! இவ ஆவியில்ல போலிருக்கே.. அப்பா வீடு அடுத்த தெருவுல இருக்கிறது பெரிய இம்சை...! போயிட்டாளே ????

(வெளியே வருகிறான்)

குடுகுடுப்பாண்டி: வுடு ஷாமி, இப்ப கரெக்டா கண்டு பிடிக்கலாம்... சுப்பாணி முழிச்சு பார்க்கிறான்... வர்றது ஆரு ஷாமி ???

சசி : அது என் பால்ய நண்பன் ஜோ.. கொஞ்ச வருசமா தொடர்பு விட்டுப் போச்சு.. வெளிநாடு போயிட்டான்.. ஆங்.. வெளிநாட்டுல உடம்பு சரியில்லாம கூட கொஞ்ச நாள் இருந்தான்...

குடுகுடுப்பாண்டி: அதாஞ்ஷாமி, அதாஞ்ஷாமி, இங்க பக்கத்துல புள்ளையார் கோயில் இருக்கு.. கோயிலுக்கு கூப்பிடு.. வந்தா மனுஷன்.. இல்லாட்டி ஆவி..

சசி : இதெல்லாம் யாருய்யா சொல்லித் தந்தது?

குடுகுடுப்பாண்டி: எங்க தாத்தாருக்கு அவரோட தாத்தா..

(ஜோவை வரவேற்கப் போகிறான்)

சசி : என்னடா எப்ப கிளம்பினே? இந்நேரத்துக்கு வர்றே?

ஜோ : (அலுப்புடன்) ட்ரெய்ன் ரெண்டு நாள் லேட்டுடா.. உன் கல்யாணத்துக்கு வர்ற மாதிரிதான் கிளம்பினேன். இப்பத்தான் வர முடிஞ்சது..

சசி : சரி, வா ! நாம அப்படியே பிள்ளையார் கோயில் பக்கம் போய் பேசுவோம்... உள்ள வாடா.. சாமி கும்பிடு..

ஜோ : (கோபத்துடன்) நான் வர முடியாது...

சசி : (தனக்குள்) குடுகுடுப்பாண்டி சந்தேகப்பட்டது சரிதான்.

ஏண்டா?

ஜோ : என் மத உணர்வை புண் படுத்துறடா...! உன்னைப் போய் பார்க்க வந்தேனே?

(கோபமாகப் போகிறான்)

சசி : (தனக்குள்) அடக் கடவுளே! இவன் வேறு மதமாச்சே? இதை கவனிக்க மறந்துட்டேனே?

(போகிறான்)

சசி : யோவ், உன் பேச்சைக் கேட்டு என் பொண்டாட்டி போயிட்டா.. இப்ப என் நண்பனும் கோவிச்சிட்டுப் போறான்.. என்னவோ பொல்லாத மெட்டல் டிடெக்டராம்... இப்ப நானாவது உயிரோட இருக்கேனா, இல்ல செத்து மிதக்கிறேனா எனக்கே தெரிய மாட்டேங்குது..! ஆவியாம்.. பாவி ! பாவி..!

குடுகுடுப்பாண்டி: ஷாமி ஷாமி நிதானம்... ! இந்தா என் சுப்பாணியப் புடி... நீயே அந்தத் தெருவை சுத்திகிட்டு ஒன் வூட்டுக்குப் போ..!

சசி அதே போல் சுற்றி வீட்டுக்கு வருகிறான். சரியாக அவன் வீடு வந்ததும் சுப்பாணி ஒளிர்கிறது.

சசி : என்னா ஷாமி இது கெரகசாரம் ??? தூ, இன்னும் கொஞ்ச நாள்ல நானும் குடுகுடுப்பாண்டி ஆயிடுவேன் போலிருக்கே..

குடுகுடுப்பாண்டி: ஷாமி, தள்ளு.. உள்ள போவோம்..! சுப்பாணி கண்டு பிடிச்சத நாம கண்டுபிடிப்போம்....
என்னா ஷாமி இவ்ளோ கொசு ??

(கை தட்டி விலக்குகிறான். சட்டென்று முகம் மலர்கிறது.)

ஷாமி கண்டுபிடிச்சிட்டேன்..

சசி : என்னா கண்டு பிடிச்சே ஷாமி ???

குடுகுடுப்பாண்டி: இந்த கொசுங்களை பாரு ஷாமி; எல்லாம் செத்துப் போனதுக. ரத்தம் குடிக்க ஆசை ஆசையா வந்து ஆயுசு முடியறதுக்குள்ள மனுஷன் கிட்ட அடி வாங்கி உயிரை விட்டதுங்க..! இதுங்கதான் இங்க ஆவியா சுத்துதுங்க...!

சசி : அப்பாடா...! ஹா ஹா ஹா.... ஹீ ஹீ ஹீ....ஹூ ஹூ ஹூ... ஊம்...ஊம்...

(மயங்கி விழுகிறான்)

குடுகுடுப்பாண்டி தண்ணீர் எடுத்து வர ஓடுகிறார்)


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Apr-17, 6:20 pm)
பார்வை : 1562

மேலே