முடிவில்லா காதல் தித்திப்பு

அது ஒரு மாலைப் பொழுது...

காலார நடந்துவிட்டு வருவோமென வெளியே கிளம்பிச் சென்றார் அந்த ராமர்...
வழக்கமாக அவர் அந்த காதலர் பூங்கா அருகில் சென்றதில்லை...
அன்று என்ன தோன்றியதோ தெரியவில்லை...
காதல் பூங்காவிற்கே நடந்து சென்று, தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்தார்...
எங்கு நோக்கிலும் காதல் ஜோடிகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகத் திரிய, ஏதோ எண்ணியவராய் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்தார்...
சிறிது நேரம் அமைதியாக கழிய, ஏதோ சத்தம் காதில் விழ, கண் விழித்தார் தியானம் கலைத்து...

அந்தச் சத்தம் காதலர்கள் இருவர்கள் பேசிக் கொள்ளும் சத்தம்....
காது மடல்களைத் தீட்டியவராய் சத்தம் வந்த திசையை நோக்கினார்....
அங்கு காதலர்கள் அமர்ந்திருந்தார்கள்...
அவர்களுக்கு இடையிலே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள்...

தூரத்தில் இருந்து பார்க்கையில் அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றே தோன்றும்...
ஆனால், அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியே தாண்டவம் ஆடியது...

அவர்களுக்கிடையே வார்த்தைகளின் பரிமாற்றங்கள் குறைந்து, அன்பான பார்வைகள் அதிகரித்தும் காணப்பட்டன...

மற்ற காதலர்களைப் போல் இவர்கள் இல்லை என்பது அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது...
காதலர்களின் சந்திப்பு முடிந்ததும் காதலி செல்ல, தனித்திருந்த காதலனிடம் பேச்சுக் கொடுத்தார் அந்த பெரியவர் இராமர்...

" வணக்கம் தம்பி, நானும் எத்தனையோ காதலர்களைப் பார்த்திருக்கிறேன்.. அவர்களைப் பார்த்தாலே சகிக்காது...
ஆனால், உங்களிருவரையும் போன்ற காதலர்களை நான் பார்த்ததில்லை..
நீங்கள் காதலர்கள் தானே?! ", என்று ராமர் அந்தக் காதலனிடம் கேட்டார்...

மிகவும் கனிவாக, " ஆம் ஐயா. நாங்கள் இருவரும் காதலர்களே...
ஐந்து வருடங்களாகக் காதலிக்கிறோம்... ", என்று பதலளித்தான்...

அதைக் கேட்டு ஆச்சரியம் மேலிட பெரியவர், " ஐந்து வருடங்களாகக் காதலிக்கிறீர்களா??..
ஆச்சரியமாகவே உள்ளது..
தினமொரு காதல் என்று பெருகிவிட்ட இந்நாளில் இப்படி ஒரு காதலா???... ", என்று கேட்டார்...

அதற்கு அந்தக் காதலன், " நாங்கள் காதலைப் பரிமாறிக்கொண்ட போதே ஒரு உறுதியும் எடுத்தோம்..
மற்ற காதலர்களைப் போல எங்கள் காதல் வெறும் பொழுது போக்காகிவிடக் கூடாது..
அதற்காக எங்கள் திருமணம் வரை ஒருவரை ஒருவர் தொடுதல் கூடாது...
ஒருவருக்கொருவர் ஒளிமறைவின்றி பழக வேண்டுமென்று...
அன்றிலிருந்து அதைக் காப்பாற்றி வருகிறோம்...
நான் அவளை பைக்கில் கூட அழைத்து சென்றதில்லை...
தினமும் ஒருமணிநேரம் மட்டும் மனம்விட்டுப் பேசுவோம்.... ", என்றான்....

அதைக் கேட்ட இராமர், " நன்று தம்பி.. ஒருவேளை நீங்கள் பிரியும் நிலை ஏற்பட்டு அவளுக்கு வேறொருவரோடும், உங்கள் வேறொருவரோடும் வாழும் சூழல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்??... ", என்றார் அந்தக் காதலனைச் சோதிப்பதற்காக....

அதைக்கேட்டு சற்றும் தயங்காமல், " அப்படியொரு நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இறந்துவிடுவேன்.. அவளும் இறந்துவிடுவாள்...
மனதால் ஒருவரோடும், உடலால் ஒருவரோடும் வாழ்ந்து நரக வேதனை அனுப்பதைவிட ஒன்றாய் உயிர் துறப்பதே மேல்... ", என்றான்...

அவனது வார்த்தைகளால் அவனது மன உணர்வுகளை உணர்ந்த இராமர், " சரி தம்பி, உங்கள் காதலை உங்களுடைய பெற்றோர்கள் ஏற்பார்களா??... ", என்று கேட்டார்...

" என் வீட்டில் என் விருப்பமே என் பெற்றோர் விருப்பம்.. ஆதலால், ஏற்றுக் கொள்வார்கள்...
ஆனால் அவளுடைய தந்தைக்குக் காதல் என்றாலே வெறுப்பு...
அவர் ஏற்பாரா? என்று தெரியவில்லை... ", என்று காதலன் கூறினான் சற்று சோகமாக...

அதற்கு இராமர், " அவர் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார். கவலைப்படாதே... ", என்று அவனுக்கு ஆறுதல் கூறினார்...

அதைக் கேட்டக் காதலன், " அதை நீங்கள் எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்?!.. ", என்று கேட்டான் வியப்பாக...

அதற்கு இராமர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், " உன் காதலியின் தந்தையே நான் தான்... ", என்று...

காதலனுக்குப் பேச நாக்கே வரவில்லை...

மேலும் தொடர்ந்து ராமர், " உன்னை விடவா நல்ல மாப்பிள்ளையை என் மகளுக்குத் தந்துவிடப் போகிறேன்?...
இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும் என்றும் குறையாத அன்போடு...
அப்புறம் இதை என் மகளிடம் கூறிவிடாதே...
அவளிடம் நானே சொல்கிறேன்.. ", என்று கூறிவிட்டு தியானம் செய்தபோது கிடைக்காத உள்ள அமைதியோடு, நிறைந்த மனதோடு வீடு நோக்கி நடந்தார்....

(தொடரும்....)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Apr-17, 9:26 pm)
பார்வை : 855

மேலே