பேருந்து தேவதை

என் விழிகளை அவள் வரும் பாதையிலே புதைத்துவிட்டு தவமிருந்தேன்...
பார்த்திருந்தேன்...
எதிர்பார்த்திருந்தேன்...

ஒருமுறை...வரவில்லை...
இன்னொரு முறை...இன்னும் வரவில்லை...
இன்னும் ஒருமுறைதான் பாரேன் என்று தந்தியடித்து கெஞ்சிய கண்களுக்காக,
மீண்டும் தலையை உயர்த்தினேன்...

என் காதல் தேரானது என்னவளை சுமந்துக்கொண்ட கர்வத்தில் தோள்களை சாய்த்துக்கொண்டு வந்தது...நின்றது...

நொடிப்பொழுதில் அலசி ஆராய்ந்து புரட்டிப்போட்டேன் பேருந்தை என்னவள் வாசம் செய்கிறாளா??? என்பதை உறுதி செய்ய...

இருந்தாள்...

பேருந்தின் கடைசி இடத்தில்
என்னிதயத்தின் முதல் பக்கத்தில்...

நிலவான வட்ட முகத்தில்,
நட்சத்திர பொட்டிட்டு,
மைவிழி பார்வையில் மையல் கொள்ள வைத்து,
பேரழகுக்கு போட்டியாக ஓவியமெல்லாம் உயிர் பெற்று ஜன்னலருகே அமர்ந்திருக்க, நொடிக்கு நொடி ஜனனமளித்தாள்...

பேருந்தில் வழியும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல்
அவளை நோக்கி நான் வழிந்தேன்...

காற்றில் கதை பேசிய முடியை அடக்க தெரியாமல் அவளிருக்க,
அவளை மட்டுமே மேய்ந்த கண்களை மறைக்க தெரியாமல் நான் தவிக்க,
கூட்டத்தை மெல்ல விலக்கி காதல் வந்து தழுவிக்கொண்டது என்னை!!!

உன் ஓரப்பார்வை ஒத்திடத்திலே பத்திரமாக பத்துமுறை பிறப்பெடுத்த என்னை மீண்டும் விழவைத்தாய் உன் கன்னக்குழி பள்ளத்தில்...

நான் உன்னைதான் பார்க்கின்றேனா ? என்று சலைக்காமல் உன் தோழியிடம் விசாரிக்க உள்ளுக்குள் சிரித்தபடி உன்னை நோக்க,
எதுவும் அறியாததை போல்
பஞ்சு கையை
மெத்தை கன்னத்துக்கு ஏதுவாய் கொடுத்து,
சாலையில் பார்வையை செலுத்தினாலும் உன் உள்மனம் என்னை நினைத்து நாட்டியமாடுவதை நான் அறிவேனடி!!!

ஒவ்வொரு நிறுத்தத்திலும் கிறக்கத்துடன் நெளிந்து உன்னை ரசித்தேனடி!!!

இதோ...இதோ நெருங்கிவிட்டது
நீ இறங்க வேண்டிய நிறுத்தம்...

அநாவசிய இமையசைவை விடுத்து உன்னை மேலும் அள்ளி பருக ஆயத்தமாகி வேகமாக செயல்படுகிறது என் கண்கள்...

ஒன்றும் அறியாத பதுமையாய் கம்பியை பிடித்து நின்றாய் இறங்குவதற்கு தோதாக...

பாவி பெண்ணே!!!

என் கண்களின் படபடப்பை நீ அறியவில்லையா?
என் எண்ண அலைகள் உன்னை நெருங்கவில்லையா?
என் இதய துடிதுடிப்பு தான் உனக்கு கேட்கவில்லையா?

நினைத்து மறுகிய என் உள்ளத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க காதல் வாகனம் நின்றது...

முதல் படியில் இறங்கி
என் பார்வையை பின்னாலே அழைத்தாள்...

இரண்டாவது படியிறங்கி
என் இதயத்தை கடன் கேட்டாள்...

மூன்றாவது படியிறங்கி
என் உயிரை களவாடினாள்...

மொத்தமாய் இறங்கி என்னை மொத்தமாய் பட்டபகலிலே சிறையெடுத்தாள்...

இன்னும் எத்தனை நாட்கள்தான் இந்த நாடக ஒத்திகை...

முடியவில்லை கண்ணே!!!
மூச்சிக்கு மூன்னுருமுறை உன் நினைவு வந்து மூன்றுமுடிச்சி போடச்சொல்லி என் கைகளை பறபறக்க வைக்கிறது!!!

என் இதயத்தில் உன் பெயர் மட்டும்தான் காதலால் செதுக்கபடுகிறது என்பதை அறிந்து என்று வருவாய்
என்னை நெருங்கி வருவாய்...

எதிர்பார்ப்புகளுக்கு வேலிகட்டாமல் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி காத்திருக்கிறேன்...
விடையாக நீ வருவாயா???

எழுதியவர் : ஸ்ரீதேவி (1-Apr-17, 11:51 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : perunthu thevathai
பார்வை : 497

மேலே