வாழ வைக்கும் நம்பிக்கை

ஓர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது.

அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது.

அதில் பல வகையான மீன்களை விட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். மீன்கள் வளர வளர அவற்றைப் பிடித்து விற்பனை செய்வது அவரது வழக்கம். அதில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் அந்தக் குளத்தில் இருந்த மீன்கள் அவ்வப்போது திருட்டுப் போக ஆரம்பித்தன.

யார் திருடுவது?

அதைக் கண்டுபிடிக்க ரகசியமாக சில காவலர்களை நியமித்தார்.

வழக்கமாகத் திருடுகிறவன், ஒரு நாள் இரவு நேரத்தில் வலை வைத்து மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

காவலர்கள் கையில் விளக்குடன் வருவது கண்ணில் பட்டது.
அவ்வளவுதான்! அவன் பிடித்த மீன்கள் அனைத்தையும் குளத்திலேயே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த மரங்களுக்கு இடையே ஓடினான்.

காவலர்கள் நெருங்குவது தெரிந்தது.

பளிச்சென்று அவனுக்குள் ஒரு யோசனை. உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டான். ஒரு மரத்தடியில் சாமியார் மாதிரி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

காவலர்கள் ஓடி வந்தார்கள்.

‘‘சுவாமி... இந்தப் பக்கம் யாராவது ஓடி வந்தார்களா?’’

சாம்பல் பூசியவன் வாயே திறக்கவில்லை.

‘‘மௌன சாமியார் போல் இருக்கிறது!’’ என்றான் ஒருவன். அனைவரும் பொத்தென்று அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்.

‘‘சாமி! நாங்க தேடுகிற ஆள் எங்களுக்குக் கிடைக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணணும்!’’

சுவாமி கைகளை உயர்த்தினார்.

காவலர்கள் திருப்தியோடு எழுந்து போனார்கள்.

‘‘இந்தப் பக்கமாகத்தான் ஓடினான்’’ என்றான் ஒருத்தன்.

எல்லோரும் அந்தப் பக்கம் ஓடினார்கள்.

மரத்தடியில் சாமியார் இருக்கிற செய்தி பரவியது.

மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். காணிக்கை செலுத்தினார்கள்.

கணக்குப் பார்த்தார் சாமியார். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே பணம் சேர்ந்திருந்தது.
அவர் மனசுக்குள் ஒரு கணக்குப் போட்டார்.

உழைத்துச் சாப்பிடுவதைவிட, உட்கார்ந்து சாப்பிடுவது சுலபமாக இருக்கிறது.

உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.

எது மெய், எது பொய் என்பது புரிவதில்லை.

ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.

நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.

- தென்கச்சி சுவாமிநாதன்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Apr-17, 9:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 864

மேலே