பகலில் ஓர் வெண்ணிலா

============================
==========================
கனவுகள் பலபல கண்களில் வளர்த்து
=காதலின் விசும்பினில் கவினுற வந்தாள்
மனதினில் வாலிப மயக்கமும் அணிந்து
=மணங்கொளும் ஆசையின் மலர்களை விரித்தாள்

தினந்தின மவனது திருக்கர முடிச்சிடும்
=திருமண தினம்வர தவங்களு மிருந்தவள்
இனசன இசைவுட னிருவரு மிணைந்தன்
=இதந்தரும் நிகழ்வதன் இனிமையில் திளைத்தாள்

தனக்கென பிறந்தவன் தழுவிட வருகையில்
=தலைகுனிந் தொருபடம் தரைதனில் வரைந்தாள்
உனக்கென எனதுயிர் உடலென அனைத்தையும்
=உடையவன் கரங்களில் உரிமையாய்க் கொடுத்தாள்

மணிவிரல் மீட்டிடும் மரகத வீணையின்
=மெல்லிய நரம்பென இசைந்துமே கொடுத்தாள்
அணிகலன் உதிர்ந்திட அடைக்கல மானதில்
=அவனுடன் வாழ்ந்ததன் அர்த்தமு முணர்ந்தாள்

சகலமு நிகழ்ந்தது சரித்திர மெனவுடல்
=சரிந்துமே படுத்தவள் சட்டென விழித்தாள்
பகலினில் வெண்ணிலா பரப்பிய வெளிச்சமாய்
=பசுங்கொடி நினைவுகள் பதுங்கிடத் தவித்தாள்!
*மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Apr-17, 10:22 am)
பார்வை : 425

மேலே