வெண்சுருட்டே வேண்டாம் விடு

இருவிரலி டுக்கில் எழும்பிப் புகைந்தே
உருக்குலைத்(து) ஆளை ஒழிக்கும் - வருந்துயர்
எண்ணித் தவிர்த்திடுவாய் என்றும் நலங்கெடுக்கும்
வெண்சுருட்டே வேண்டாம் விடு.

உடலை யுருக்கி யுயிரைப் பறித்துச்
சுடலைக் கனுப்பும் சுருட்டு! - விடத்தை
விடாதுள் ளிழுத்தால் விரட்டி வருவான்
கடாவில் மறலி கடிது.

தானே தனக்கென வைத்திடும் கொள்ளியாய்
ஊனே அழிக்கும் உணராயோ - வானேறு
வாழ்வில் விழுந்திட, வீணாகும் இல்லறமே
பாழ்சுருட்டை விட்டிடப் பார்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Apr-17, 12:16 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 72

மேலே