அப்பா

அழகிய அப்பா
அன்பான அப்பா
வழக்கமான பிள்ளை போல நானும்
உன்னை வெறுத்த நாள் உண்டு
பள்ளி செல்ல மறுத்த போது
ஊர் சுற்ற நினைத்த போது
கணிதம் சொல்லி கொடுத்த போது
ஆங்கில இலக்கணம் வராமல் தவித்த போது
ஐந்து ரூபாய் தொலைத்த போது
மட்டை எடுக்க துடித்த போது
தொலைகாட்சி பார்க்க தடுத்த போது
கல்லூரி கால சுதந்திரத்தின் போது
என பல போதுகளில்
நான் உன்னை வெறுத்ததுண்டு
பயந்து நான் துடித்ததுண்டு

காலம் எத்தனை வேடிக்கை கொண்டது
எத்தனை மாற்றங்கள் தந்தது
அன்று எனது வலியை பார்த்தேன் வெறுத்தேன்
இன்று
என்னை அடித்த போது
உனக்கு எவ்வளவு வலித்ததோ? என
நினைக்கிறேன் வருந்துகிறேன்

நான் கேட்டதெல்லாம் தரும்
கற்பக விருட்சமாய்
நீ இல்லை
ஆனால் எனக்கு எது நல்லதோ
அதை மட்டுமே தரும் கற்பகத்தினும் சிறந்த விருட்சமாய் நீ இருக்கிறாய்

நினைவில் இருக்கிறது
எனக்கு உடல்நிலை சரியில்லாத அன்று
நீ உறங்கவே இல்லை
எனது கைகளையும் கால்களையும் பிடித்து
தலைவருடி கொடுத்தபடி
அருகிலேயே அமர்ந்திருந்தாய்

எனது எத்தனை எத்தனையோ தவறுகளில்
பொறுமை காத்திருந்தாய்
மிகப்பெரும் துயரங்களை எல்லாம்
விழிகளுக்குள் பூட்டிக் கொண்டு பெரும்பாலும்
கண்ணீரை கண்ணில் காட்டியதே இல்லை
சில நேரங்களில் அதையும் மீறி வந்த துளிகள் கூட
என்னால் எனது தவறுகளால் என்பதை
நினைத்து வருந்துகிறேன்
அப்பா எதையும் தாங்கும் உன்னால்
எனக்கென நேரும் துயரங்களை தாங்க இயலாது
என்பதை இன்று உணர்கிறேன்

எனக்கு எத்தனையோ அனுபவங்களை
காலம் கொடுத்தது
ஆனால் அந்த அனுபவங்களை எல்லாம்
திருப்பிப் பார்த்தால்
பக்கத்திற்கு பக்கம் பக்கபலமாய்
நீயே இருந்திருக்கிறாய்
நான் மீண்டு வர

இருபத்தி ஒன்பதில் இருக்கிறேன்
இன்றும் என்னை நீயே சுமக்கிறாய்
ஒரு குறையும் சொல்லாமல்
ஒரு குறையும் வைக்காமல்

அப்பா இதற்கெல்லாம்
நான் யாது செய்வேன் என தெரியவில்லை
ஆனால் உனக்கென
யாதும் செய்வேன் என தெரிவிக்கிறேன்

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள்_அப்பா

எழுதியவர் : கி. கவியரசன் (6-Apr-17, 2:24 pm)
Tanglish : appa
பார்வை : 103

மேலே