வாயாடி

“ஏன்டி இவ்வளவு லேட்டா வரே” அப்படின்னு“ ஆதங்கமாய் கேட்ட அம்மாவுக்கு..நச்சென்ற வார்த்தைகளால்….. “நான் சின்ன பாப்பா இல்லேம்மா, என்னை சாக்லேட் குடுத்து தூக்கிட்டு போறதுக்கு” பதிலடி கொடுத்தாள் ரேகா.
ஏன்டி,“ நான் ஒரு வார்த்தை கேட்டா, நீ ஒம்பது வார்த்தையில பதில் சொல்றே, மாமியார் வீட்டுக்கு போனா என் தலையைத் தான் உருட்டுவா ஒன் மாமியா“.
“ஒன் தலை என்னா புட்பாலா? உருட்டறதுக்கு… மீண்டும் பதிலடி வார்த்தைகள் வந்து விழுந்தன.
“ நான் புட்பால் இல்லேடி, போற இடத்துல, புட்பால் கணக்கில நீ ஒத வாங்கக்கூடாதுன்னுதான்,“ கவலைதான் என்றாள் அம்மா.
“நானாவது புட்;பாலாவது, வாய் மட்டும் நீளம் இல்லே, கையும் நீளம்ன்னு காண்பிப்பேனே“ என்றாள்.
ஏன்டி, “என்னய இப்படி படுத்துற, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் “பொண்ணை எப்படி வளர்த்து வைச்சிருக்கா பாரு, வாய் திறந்தா மூடமாட்டேங்குது, இதெல்லாம் எங்க போய் குப்பை கொட்ட போகுதுன்னு பேசிக்கிறாங்க, வாயைக் கொஞ்சம் அடக்கி வைடி” என்றாள் அம்மா.
“என்னம்மா? குப்பை கொட்டுறதுக்கா…. என்னை பெத்தே, என் வாய், நான் திறப்பேன், மூடுவேன் அதைப்பத்தி வாயைத் திறக்க யாருக்கும் உரிமையில்லை.
“இப்படி பேசாதடி, வேலைக்கு போனா அங்ககூட இப்படித்தான் வாயாடிவியா… இப்படி வாயாடின்னா வீட்டுக்கு இல்லே அனுப்பிடுவாங்க“.
“வீட்டுக்கு, அனுப்புவாங்க...அனுப்புவாங்க..அனுப்புற ஆளை... வாயாலே வறுத்துடுத்துட மாட்டேன்“ என்றாள்.
“போடி, ஒன்கூட பேசி..பேசி எனக்கு மூச்சிரைக்குது, தண்ணியாவது கொண்டா… குடிக்க“ என்றாள் அம்மா
“ தண்ணிதானே…. “காவிரி தண்ணீரா….வைகை தண்ணீரா?“ .கேட்டாள்
“அம்மாடி தண்ணீயே வேண்டாள் என்று கும்பிடு போட வைத்த மகள்தான்,
பளப்பள காரில் வந்து இறங்க, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வாய்க்குள் கொசு போவதுகூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அரத்தி எடுத்து வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் “வாய் பேசாதே” என்று இதுவரை அடக்கி வந்த அம்மா.
பிரபல தொலைக்காட்சி நிறுனத்தில் காம்பயராக வேலைக்கு சேர்ந்து விட்டாளாம் வாயாடியான ரேகா.
----- கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (6-Apr-17, 9:33 pm)
பார்வை : 443

மேலே