காணாமல் போன மொழிகள்

உத்திர பிரதேசத்தை சேர்ந்த என் நண்பன்
ஒருவனிடம் "உன் தாய்மொழி எது"வென
கேட்டேன். "இந்தி" என்று கூறினான்.
"உங்க அம்மாவுக்கு இந்தி தெரியும், அவங்க
அம்மாவுக்கு இந்தி தெரியுமா?" என்று
கேட்டேன். "தெரியாது" என்று கூறினான்.
"சரி அவங்க என்ன மொழி பேசினாங்க?"
என்றேன். "போஜ்பூரி" என்றான்.
"டேய் முட்டாள் அப்ப அதுதான்டா உன்
தாய்மொழி" என்றேன். தலையை
சொறிகிறான்.

கோரா, அகா, மிஜ்ஜி இம்மூன்று
மொழிகளும் அருணாச்சலில் பேசிய
மொழிகள். இப்போது இவைகள் முற்றாக
முடிந்துவிட்டது.

உடுப்பியிலும், மங்களூரிலும் பேசி
கொண்டிருந்த "துளு" என்ற மொழி மிக
சமீபத்தில் காணாமல் போய்
கொண்டிருகிறது... பள்ளிகளிலும்
படிக்கவில்லை... ஒருசில வீடுகளில் மட்டும்
இன்னும் பேசுகின்றனர்...
கன்னடர் பள்ளிகளில் துளு படிப்பிப்பதற்கு
சம்மதிக்கவில்லை... துளு தூளாய் போய்
விட்டது...
துளு தாய்மொழியாய் கொண்ட நண்பன்
ஒருவன் மிகவும் வருத்தத்துடன் இதை
தெரிவித்தான்.
மும்பை மாநகரத்தில் வாழும் மண்ணின்
மைந்தர்கள் பலருக்கே இப்போது மராத்தி
தெரிவதில்லை, அந்த மொழி அதிவேகமாக
அழிந்து வருகிறது. இவ்வாறு
அடுக்கிக்கொண்டே போகலாம்.
பல மாநிலங்களில் இந்திக்கு அதிகாரப்பூர்வ
அனுமதியளித்ததின் விளைவு இன்று
பன்மொழி கொள்கை கொண்ட இந்தியாவில்
இந்தி மட்டுமே வாழ்கிறது பிற மொழிகளை
புற்றீசல் போன்று அழித்து.
"மைல்கல்லில் ஆங்கிலத்தை நீக்கி இந்தியில்
எழுதினால் தேசியநீரோட்டத்தில்
இணைந்துவிடலாம்" என்ற உதவியாளரிடம்
"போடா முட்டா மூதி" என்றார் காமராசர்.
இன்று
தமிழகத்தில் எல்லைக் கல் முதல்
எள்ளுருண்டை வரை இந்தியை திணிக்க
முற்படுகின்றனர், பாடத் திட்டங்களில்
இந்தியை கட்டாயமாக்க கடும்
பாடுபடுகின்றனர். ஏன் எதெற்கென்று
கேள்வி கேட்டால் "பிற மாநிலங்களுக்கு
தமிழன் சென்றால் தத்தளித்துவிடக்
கூடாதே!" என்கின்றனர்.
பல இலட்சம் வடமாநிலத்தார் தமிழ் தெரியாமல்
தமிழ்நாட்டில் வாழத்தானே செய்கின்றனர்!
அவர்கள் அன்ன ஆகாரமின்றி மடிந்துவிட்டனரா
? அல்லது ஒரு அறைக்குள்ளேயே முடங்கிப்
போயுள்ளனரா? என்ற நம் கேள்விக்கு
பதிலில்லை.
ஏற்கனவே ஆங்கில மோகத்தில் கட்டுண்டு
கிடக்கும் நம் தமிழகத்தில் இந்தியையும்
அதிகாரப்பூர்வமாக்கினால்
பல்லாயிரமாண்டுகளாக பரவி வாழ்ந்த
பைந்தமிழ் பாழாகும், காணாமல் போகும்.
இன்னும் பத்தாண்டுகளில் இந்த பக்கம் தமிழ்
பேசினால் அந்த பக்கம் நமக்கு தேவைப்படும்
மொழியில் நம் குரலை ஒலிக்கச் செய்ய
தொழில் நுட்பக் கருவிகள் வந்துவிடும்.
ஆகவே மொழி தெரியவில்லையெனில் நாம்
வெளியுலகில் உலாவ இயலாமல்
முடங்கிவிடுவோமென்ற கவலையை
விடுங்கள்.
இன்னும் சில அதிபுத்திசாலி நண்பர்
"அதாவது பாத்தீங்கனா சார். தமிழ் லேங்வேஜ்
எதுக்கும் யூஸ் இல்லாத லேங்குவேஜ் சார்"
என்றார். "ஆமா சார் உங்களைப் போல
ஆளுங்கதான் சார் பெத்து, பேரு வச்சி,
வளத்து ஆளாக்கி விட்ட தாய் யூஸ் இல்லேனு
தெரிஞ்சதும் முதியோர் இல்லத்துல
கொண்டு சேத்துடுறானுங்க சார்" என்றேன்.
முகத்தை துடைத்துக்கொண்டே
கடந்துவிட்டார்.

இந்தியை விரும்பி கற்பவனை தடுக்கவில்லை
உங்கள் விருப்பத்திற்கு பிறரை
கட்டாயப்படுத்தாதீர்கள் என்கிறோம்.
நீங்கள் தாயை காக்கப் போகிறீர்களா? அல்லது
முகத்தை துடைக்ப் போகிறீர்களா என்பதை
நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (6-Apr-17, 10:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 326

மேலே