முடிவின் முடிவில்

இருள் கவியத்தொடங்கும் அந்திமாலைப் பொழுது.கிராமம் என்ற நிலையிலிருந்து நகரத்தின் அரிதாரம் பூசி மெல்ல நகரத்தின் தோற்றத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் அந்த கிராமத்தின் வட எல்லையில் 'ரயில்வே கேட்' க்கு சற்று தள்ளி சீரான் இடைவெளியில் நன்கு வளர்ந்திருந்த மரங்களில் ஒன்றின் அடியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் இருக்கை மீது சாய்ந்து நின்று கொண்டு ஒரு இலக்கில்லாமல் வெட்ட வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.அவன் உள்ளம் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தது. துரோகம் தந்த வலியால் துடித்து கொண்டிருந்தது.

ஆனந்தி ! இறைவன் படைப்பில் அவனை ஆச்சர்யப்பட வைத்தவள்.அவனை முழுதாய் ஆட்கொண்டவள்.அவளை உயிராய்க் காதலித்தான்.அவளும்தான்.
நான்காண்டுகள் தேன் கூடுபோல் காதல் கோட்டை கட்டி தித்திப்பில் லயித்திருந்த நேரத்தில்தான் அவள் தேன் கூட்டில் கல்லெறிந்து சின்னாபின்னமாக்கி விட்டாள்.
இரண்டு நாள் முன் வழக்கமாக சந்திக்குமிடத்திற்கு வரச்சொல்லியிருந்தாள். என்னவோ ஏதோ என்று தவிப்புடன் அவன் சென்றான்.அவனுக்கு முன்பாகவே
வந்து காத்திருந்தவள் அவனைக் கண்டவுடன் எழுந்தாள்."சரவணா ! நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேள்,எதிபாராத விதமா எங்க வீட்ல என்னை பொண்ணு பார்க்க ஒரு பையன் வீட்டுக்காரங்க்களை எங்க்கப்பா கூட்டிட்டு வந்திட்டார்.அப்பாவுக்கு தூரத்து சொந்தமாம்.ரொம்ப நாள் தொடர்பே இல்லாம இருந்துச்சாம்.தற்செயலா உறவுக்காரங்க வீட்டு விசேசத்தில பார்த்துக்கிட்டாங்க்களாம்.அதுல் அவங்களும் அவங்க பையனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கிறதாகவும் தெரிஞ்ச இடங்கள்ல எதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்கண்ணு சொல்லவே 'நம்ம வீட்டிலேயே கல்யாண வயசில பொண்ணு இருக்கும்போது வேற எங்க போய் தேட போறீங்கன்னு கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டார்.எங்க வீட்ல எல்லாருக்கும் பையன பிடிச்சிப் போச்சி,அதோட அவங்க் வீட்டு ஆட்களுக்கும் என்னை பிடிச்சிட்டதால ஒருத்தருக்கொருத்தர் உறவு முறை சொல்லி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.என்னை தனியா கூட்டிட்டுப் போய் பையன பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க.நான் என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சப்போ எல்லார் முன்னாடியும் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு உனக்கு மட்டும் பிடிக்காமலா போகும்.என்ன சொல்ற பிடிச்சிருக்கா இல்லையான்னு அதட்டி கேட்டதால வேற வழி இல்லாம சரின்னு தலையாட்டிட்டேன்.வீட்ல கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.இனிமே அவங்கள மீறி எதுவும் செய்ய முடியாது.அப்படி எதாவது செஞ்சா என் குடும்பமே தற்கொலை பண்ணி செத்து போவாங்க.அத்னால என்ன தயவு செய்து தர்மசங்கடப்படுத்தாம மறந்திடு,மன்னிச்சிடு " சொல்லிவிட்டு வழிகிற கண்ணீரோடு வேகமாக சென்று விட்டாள்.

இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.எப்படிப்பட்ட இக்கட்டான் சூழ்நிலையில் அவள் இருந்திருப்பாள்.இப்போது அவள் உள்ளுக்குள் எப்படி தவித்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வதைத்தது.எப்படியோ இரவு நெடு நேரத்திற்கு பின் தனனியறியாமல் தூங்கிப் போனான்.

காலையில் தாமதமாக எழுந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவன் தோள்களை ஒரு கை தொட்டது.திரும்பி பார்க்க சரண்யா நின்றிருந்தாள்.சரண்யா ஆனந்தியின் வகுப்புத் தோழி.சந்திக்க முடியாத சமயங்களில் தகவல்கள் தாங்கிச் செல்லும் ரகசிய சிநேகிதி.அவன் நிலையைக்கண்டு அவள் மிகுந்த வருத்தமடைந்தாள்..அவன் கேட்டான் "எப்படியிருக்கிறாள் உன் தோழி ? 'அவளுக்கென்ன கல்யாணமாகப் போற புதுப் பொண்ணு சந்தோசமா இருக்கிறா ! அவள் சொல்ல அவன் வெடித்தான் 'நீயெல்லாம் ஒரு ப்ரண்டா ? ஏன் இப்படி அவளை தப்பா பேசுற ? என மேலே பேச எத்த்னித்தவனை கையமர்த்தினாள். 'நேற்று அவள் உன் கிட்ட வந்து சொன்ன எல்லாத்தையும் அப்படியே நம்பிட்டியா முட்டாள் ! அவள் உங்கிட்ட அவள் சொன்னதுல பாதி உண்மை பாதி பொய் ! சரியா சொல்லனும்னா முதல் பாதி உண்மை இரண்டாவது பாதி பொய். ஆமா அவங்க அப்பா பையன் வீட்டுக்காரங்க்களை கூட்டிட்டு வந்தது வரை உண்மை. அவர் வருவதற்கு முன்னரே போன்ல வீட்டுக்கு எல்லா தகவலும் சொல்லிட்டாரு. அப்ப நான் அங்கதான் இருந்தேன். 'அதாவது பையன் வெளி நாட்டில இருக்கான்.கல்யாணம் பண்ணின ஒரு மாசத்தில கூடவே கூட்டிட்டு போய்டுவான்.வருசத்துக்கு ஒருமுறை விடுமுறையில ஊருக்கு வரலாம். நகை பணம்ணு ஆடம்பரமா வாழலாம்.அப்படி இப்படின்னு ஒரே அமர்க்களமா போச்சி.ஆரம்பத்தில கோபப்பட்ட ஆனந்தி அவர்கள் வரப்போகிற வசதி பற்றி சொல்ல சொல்ல அடங்க்கிவிட்டாள்.ஆசை காதலை மறைத்து விட்டது.சரி சொல்லிவிட்டாள்.இப்போது அவள் புது வாழ்வுக்கான கனவு காண ஆரம்பித்து விட்டாள்.உன் வாயை எப்படி அடைக்க வேண்டுமோ அப்படி பேசி அடைத்து விட்டாள்.எனக்கு நன்றாக தெரியும் நீ இது மாதிரி முட்டாள் தனமா அவளுக்காக வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பன்னு அதனால தான் நான் உனக்கு உண்மைய சொல்லிட்டு உணன்னை மதிக்காம நம்ப வைசி ஏமாத்தினவளுக்காக உருகாம அவளே உன்னை பார்த்து வெட்கப்படுற மாதிரி
வாழ்ந்து காட்டுன்னுசொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.முட்டாள்தனமா எதும் யோசிக்காம புத்திசாலித்தனமா இருந்துக்கோ.ஒருவேளை நான் சொன்னத நம்பலைன்னா இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த வழியாதான் முகூர்த்த புடவை பொருட்களெல்லாம் வாங்க கார்ல போவாங்க.அப்ப தூரமா நின்னு பாரு உன் காதல் தேவதையோட குதூகலத்தை" அவள் முடிக்க 'எனக்கு இல்லைன்னு ஆனதுக்கு அப்புறமா அவ எப்படி இருந்தால் எனக்கென்ன" எது எப்படியோ இதுக்கப்புறம் அவளை பற்றி நான் எதுக்காக தெரிஞ்சிக்கனும்.என்னை கொஞ்சம் தனியா இருக்க விடேன் ப்ளீஸ் ...." அவன் கெஞ்லாக கேட்க அவள் அவனை முறைத்துக்கொண்டே இறங்கிப் போனாள் .

வீட்டில் இருக்க பிடிக்காமல் பைக்கில் வெளியே கிளம்பினான்.தெருமுனையைத் தாண்டும் போது எதிர்ப்பட்ட காரிலிருந்து திறந்திருந்த ஜன்னலின் வழியே கேட்ட சிரிப்பும் கும்மாளமும் அவனை திரும்பிப் பார்க்க வைத்தது.ஆம் ! அது அவளேதான் அவளும் அவள் குடும்பத்தினரும் கல்யாணத்துக்கான பொருட்களை வாங்கிவிட்டு சந்தோசமாக வீடு திரும்புகிறார்கள் போலும்.அவள் அவனைக் கவனிக்கவில்லை.கோபத்தில் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்
முறுக்கினான் சரவணன்.
சரவணனுக்கு தனிமை தேவைப்படும்போதெல்லாம் அவன் நாடுவது ஊரைவிட்டு சற்று தள்ளி ரயில்வே கேட் அருகே மரங்கள் சூழ்ந்த அந்த அதிக நடமாற்றமில்லாத அந்த பகுதிதான்.ஏதாவதொரு மர நிழலில் தன்னை மறந்து மணிக்கணக்கில் அவன் அங்கு அமர்வதுண்டு.இன்றும் அவன் அவ்விடத்தையே நாடினான்.

எவ்வளவு நேரம் அவன் அப்படியே அமர்ந்திருந்தானென்று தெரியாது.தூரத்தில் ரயில்வரும் தடதட ஓசையும், பூமியில் உண்டான அதிர்வும் அவனை சுய நினைவுக்கு கொண்டுவந்தன. பதற்றமாக கைக்கடிகாரத்தை பார்க்க மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.வீட்டிற்கு கிளம்பலாம் என்று அவன் எழ முற்பட்டபோது த்ற்செயலாக அந்த காட்சி அவன் கண்களில் பட்டது.யாரோ வேகமாக ரயில் தண்டவாளங்களை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் தண்டவாளத்தை கடக்க முடியாதே.பின் எதற்காக அங்கு செல்ல வேண்டும் ? ரயில் வரும் ஓசை வேறு கேட்கிறதே ! ஒருவேளை தற்கொலை செய்யவா ? விபரீதம் உணர்ந்தவனாய்.அந்த உருவத்தை நோக்கி குரல் கொடுத்து கொண்டே ஓடத்தொடங்கினான். 'யாருங்க அது ரயில் வர்றது தெரியலயா எங்க போறீங்க நில்லுங்க" என பலங்கொண்ட மட்டும் சத்த மிட்டுகொண்டே நெருங்கினான்.ஆனால் உருவத்திடமிருந்து எந்த மாற்றமுமில்லை.தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.இப்போது நடை இன்னும் துரிதமாகியிருந்தது.

பக்கத்தில் நெருங்க நெருங்கவே அது ஒரு பெண் என்பது தெரிந்தது.இப்போது ரயில் இஞ்சின் சப்தம் மிக சமீபத்தில் கேட்டது.சரவணனும் அந்தப்பெண் உருவத்தை நெருங்கியிருந்தான்.அவள் இப்போது தண்டவாளத்தில் குறுக்காக அமர்ந்துவிட்டாள்.கண்ணிமைக்கும் நேரத்தில் சரவணன் அவளை குண்டுக்கட்டாக தண்டவாளத்திலிருந்து அகற்றி ரயில் கடந்து செல்லும் வரை இறுக்கமாக பற்றிக்கொண்டான். ரயில் கடந்து சென்றதும் கைகளை விடுவித்தான்.மிஞ்சிப்போனால் இருபதிலிருந்து இருபத்திமூன்று வயதுக்குள் இருக்கும்.
“இவ்வளவு சின்ன வயதில் சாக துணிஞ்சிட்ட ! அப்படி என்ன பிரச்சினை உனக்கு ? நீ செத்துட்டா எல்லா பிரச்சினையும் தீர்ந்திடுமா ? நீ செத்தா யாருக்கு என்ன லாபம் ? சாகிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை ? அவன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.அவள் எதுவும் பேசாமல் அவனைவிட்டு விலகி நடக்கத் தொடங்கினாள்.அவன் அவளுக்கு முன்னால் வந்து வழியை மறித்துக்கொண்டு நின்றான். 'பதில் சொல்லாம நீ இங்கிருந்து போக முடியாது.ஊருக்குள்ள போன் பண்ணி எல்லாரையும் வரவச்சி போலிஸ்ல ஒப்படைச்சிடுவேன்.எப்படி வசதி ? இப்போது அவள் அவனை தீர்க்கமாக முறைத்தாள். கண்களில் துளித்திருந்த நீரோடு முகத்தையும் அழுத்தமாக துடைத்துவிட்டு அவனைப்பார்த்தாள்.காரணத்தை சொல்லிட்டா விட்டுவிடுவீங்கள்ல சொல்றேன். 'எனக்கு பக்கத்து ஊர்தான்.அப்பா அம்மா,ரெண்டு தங்கச்சிங்க. தினமும் வேலைக்குப் போனாதான் சாப்பாடு.சாப்பாடும் போட்டு படிக்கவும் வைக்கிறதுக்கு அப்பா நிறைய சங்கடப்பட்டார்.வீட்ல எவ்வளவு சொல்லியும் கேட்காம படிப்ப பாதியில நிறுத்திட்டு வேலைக்குப் போனேன்.ஓரளவுக்கு அப்பாவோட பாரம் குறைஞ்சது.நமக்கு கிடைக்காத படிப்ப நம்ம கூட பிறந்தவங்களுக்கு கொடுக்கலாம்னு நினைச்சி இன்னும் நல்லா உழைக்க ஆரம்பிச்சேன்.ஓரளவுக்கு நல்லா வந்திட்டிருக்கும் போது திடீர்னு எனக்கு அப்பப்ப வயிற்று வலி வருவதுண்டு.அந்த நேரங்களில் பக்கத்தில இருக்கிற மருத்துவமனைகளில் தற்காலிகமா வைத்தியம் செய்வதுண்டு.ஆனால் பத்து நாளைக்கு முன்னாடி வந்த வலியை எந்த மருத்துவத்துக்கும் மட்டுப்படல.அதனால ஜி.எச் ல போய் ஸ்கேன் செய்து பார்த்ததுல வயிற்றுல கட்டி இருக்கிறதாகவும் உடனே அதை அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்றும்.சொன்னாங்க.ஒரு வாரம் முன்னாடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாணில் தூங்கிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பக்கத்தில் அட்மிட் ஆகியிருந்தவரும் நர்ஸும் பேசிக்கொண்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.ஆம் ! அறுவை சிகிச்சைக்காக என் வயிற்றை கிழித்தபோதுதான் தெரிந்ததாம் என் வயிற்றில் மட்டுமல்ல என் கர்ப்ப பையிலும் சிறிது சிறிதாய் மூன்று கட்டிகள் இருந்ததாம்.இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அது வளர்ந்து பெரிதாகிவிட்டால் மீண்டும் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வருமாம்.கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்தாம். அதனால் கர்ப்பப் பையையும் சேர்த்தே நீக்க வேண்டுமாம். இதை என் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்த போது குறைந்தபட்சம் என் உயிரையாவாது காப்பாற்றிக் கொள்ளவேண்டி கர்ப்ப பை அகற்ற சம்மதித்தார்களாம்.உடம்பு சரியாகி வந்த பின் நேரம் வரும்போது என்னிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மறைத்துவிட்டார்கள்.என்னால் இதற்கு முன் போல இனி வேலை செய்ய முடியாது. என் வீடு இருக்கும் நிலையில் என்னை நோயாளியாக படுக்க வைத்துக்கொண்டு சாப்பாடு,மருந்து,மருத்துவ செலவு என்று செய்துகொண்டு வீட்டையும் பார்ப்பது என்பது முடியாத காரியம்.எல்லாம் இருந்து பொண்ணும் எந்த குறையும் இல்லாமல் இருந்தாலே இந்த காலத்தில கல்யாணம் நடக்கிறது
அவ்வளவு லேசான காரியமில்லை.அப்புறம் நான் கடைசி வரைக்கும் பெத்தவங்களுக்கு பாரமாவே இருக்க வேண்டிவரும். எனக்கு அடுத்து இருக்கிற இரண்டு தங்கைகளுக்கும் என்னை இப்படி வைத்துக்கொண்டு திருமணம் நடக்குமாங்கிறது கேள்விக்குறிதான்.அதோட எனக்கு வந்திருக்கிற பிரச்சினை எனக்கு மட்டும் தானா என் பரம்பரையில மத்தவங்களுக்கும் இருக்குமான்னு சந்தேகமே கூட என் தங்கைகளோட
திருமண வாழ்க்கை பாதிக்கப்பட காரணமாயிடும். எல்லாத்துக்கும் மேலா என்னோட குறையை எனக்கு தெரியும்னு அவங்க கிட்ட நானே காட்டிக்கிட்டாலோ இல்ல எங்கிட்ட அவங்க சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ அதை சந்திக்கிற தைரியமும் தைரியும் எனக்கில்லைஎனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தமே அவர்களை தினம்,தினம் கொல்லும். .நான் இறந்து போய்ட்டா கொஞ்ச நாள் வருத்தப்பட்டாலும் அதுக்கப்புறமா அவங்களாவது நிம்மதியா இருப்பாங்க.அதனாலதான் நான் இந்த முடிவெடுத்தேன் தப்பா சொல்லுங்க ? அவள் பேசி முடித்தாள்

அவன் சில வினாடிகள் மௌனம் காத்தான்.அவள் கேட்டாள் 'இப்ப நான் போகலாமா ? முடிஞ்சா எனக்காக வருத்தப்படுங்க யார் நினைத்தாலும் எனக்கு வேற எந்த உதவியும் செய்ய முடியாது. நான் போகிறேன்" சொல்லி நடக்க தொடங்கினாள். 'ஒரு நிமிடம்' சரவணனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவள் பாதங்கள் மேற்கொண்டு நகர தயங்கி நின்றன.

' ஒருவேளை உங்களைப்பற்றிய எல்லாமும் தெரிஞ்சே உங்கள ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டு அந்த புது வாழ்க்கையை ஏத்துக்க தயாரா ? அவன் கேட்க அவள் கசப்பாய் புன்னகைத்துவிட்டு சொன்னாள்.அதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் நிஜத்தில யாருக்கும் இந்த துணிச்சல் வருமா தெரியலை சரி யாரு அந்த பெரிய மனசுக்கு சொந்தக்காரர் ? அவள் கேட்க அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.பெரிய மனசெல்லாம் இல்லைங்க தன்னைப் போலவே வஞ்ச்சிக்கப்பட்ட ஒருத்தருக்கு உதவியா காலம் பூரா ஒரு நல்ல துணையா இருக்கலாம்னு நினச்சி கூட இதை செய்யலாமில்லையா ? அவன் சொல்லவே அவள் 'புரியல யார் அது ? என்ன வஞ்சிக்கப்பட்டாங்க ? அவள் கேட்க அவன் தொடர்ந்தான். 'வேற யாரும் இல்லை நான்தான் என்று தொடங்கி ஆனந்தி அவனை நம்ப வைத்து கழுத்தை அறுத்ததை சுருக்கமாக விளக்கினான்.உன்னை இயற்கை வஞ்சித்தது.என்னை ஒரு பெண் காயப்படுத்தினாள். நீ சாக முடிவெடுத்திட்ட நான் என்ன செய்றதுன்னு தெரியாம வாழ்க்கையே வெறுத்துப் போய் நின்னுக்கிட்டு இருக்கும் போதுதான் இப்ப உன்ன பார்த்தேன். உன்னோட கதையை கேட்ட பிறகு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.இனிமே நீதான் சொல்லனும் என்று அவன் நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.அவள் கசப்பாய் புன்னகைத்தாள். உங்களுக்கு நல்ல மனசுதான் .ஆனா இதை நான் ஏத்துக்கிட்டா என்னோட சுயனலத்துக்காக உங்களுக்கு செய்கிற துரோகம்,ஏன் என்னோட பேராசைன்னே சொல்லலாம். உங்களுக்கு வாரிசே இல்லாமல் போன பாவத்துக்கு நான் காரணமாக வேண்டாம். காதல் தோல்வி கொஞ்ச காலத்துல மறந்து
நீங்க எல்லாரும் போல வாழ ஆசைப்படும்போது இப்ப எடுத்த முடிவுக்காக வருத்தப்படவும் வாய்ப்பிருக்கு.எல்லாத்துக்கும் மேல இதுக்கு உங்க வீட்ல இருக்கிறவங்க குறிப்பா உங்க அம்மா தன்னோட பேரக்குழந்தைகளைப் பார்க்கனும்னு எவ்வளவு ஆசை வச்சிருப்பாங்க .இப்படி எல்லாத்தையும் என் ஒருத்திக்காக நீங்க செய்றது நிச்சயமா தவறு. அதை நான் ஏத்துக்கிட்டா அது அதைவிட தவறு இதுக்குமேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை .அவள் பேசிமுடிக்கும்வரை அமைதி காத்தவன் புன்னகையுடன் தொடர்ந்தான். எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான்.அம்மாவுக்கு என்னோடஅண்ணன்,அக்கா பசங்க நான்கு பேர் பேரன்,பேத்திகள் இருக்காங்க .எனக்கு பிள்ளைகள் இல்லன்னா பெரிசா ஒன்னும் குறைஞ்சிடாது.அது மட்டுமில்ல தேவைப்பட்டா எத்தனையோ ஆதரவத்த குழந்தைகள் இருக்கு.அவங்கள்ல யாரையாவது எடுத்து வளர்த்துக்கலாம். எங்க அம்மாவ சம்மதிக்க வைக்கிறது என் வேலை.எனக்கு தேவை உன் சம்மதம் தான்.அப்புறம இனிமே கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு எடுத்த முடிவை உன்னாலதான் மாத்திக்கிட்டேன்.நாட்டுல இருக்கின்ற ஜனத்தொகையே அதிகம்.இதுல நம்ம பங்குக்கு ஏத்திவிடாம இருக்கிறதே இந்த சமுதாயதிற்கு நாம செய்ற நன்மைதான். எதிர்காலத்துல முடிஞ்சா ஆதரவற்ற குழந்தைகள்,மற்றும் பிள்ளைகளால கைவிடப்பட்ட பெரியவங்களை பாதுகாக்கிற ஒரு காப்பகத்தை உருவாக்கி பராமரிப்போம்.இதுதான் நான் வாழ நினைக்கிற வாழ்க்கை.உனக்கு விருப்பம்னா வந்து என் என்னோட வண்டியில ஏறு.இல்லன்னா உன்னோட விருப்பம். சொல்லிவிட்டு பைக்கில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தான்.அப்போது ஒரு கை அவனுடைய தோள் தொட்டது.திரும்பிப் பார்த்தான்.கண்களில் மின்னும் நீரும் உதட்டில் தவழும் புன்னகையுடன் அவனுக்குப் பின்னால் ஏறி வண்டியில் அமர்ந்தாள். சூழ்ந்திருந்த மரங்கள் மலர்களை தூவி அவர்களை வாழ்த்தின.

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (8-Apr-17, 6:13 pm)
சேர்த்தது : காளிமுத்து
Tanglish : mudivin mudivil
பார்வை : 403

மேலே