வறுமை விலகாதா வையம் செழிக்காதா

தடித்து சிதிலமான தரைகூட நீர்பட்டால்
தளிர்த்துவிடும் தன்மீது விழுகின்ற விதைகளினை
பிடித்து அகம்நிறைத்து பிள்ளைபோல் பெற்றெடுக்கும்
பெருமரமாய் வளர்தற்கு வேர்தாங்கும் உரம்கொடுக்கும்

உதவுவதை கடனாக உள்ளவரை நிலம்செய்யும்
உலகெங்கும் தன்பணியை ஓயாது செய்துநிற்கும்
சூதுவாது அறியாது சேவைசெய்யும் மரம்போலே
சுற்றத்தார் துயர்துடைக்க சோம்புவதேன் மனிதஇனம்

இரந்துவரும் ஏழைக்காய் இரங்கிவிடு இறந்துவிட்டால்
என்னபயன் உந்தனுக்கு இருக்கும்வரை உண்பணத்தில்
கரந்துவாழும் மக்களது கண்ணீரைத் துடைத்துவிடு
காலமெல்லாம் உன்புகழை காவியங்கள் பாடிநிற்கும்

வறள்நிலத்தில் நீர்கசிந்தால் விருட்சங்கள் பலபிறக்கும்
வரள்மனது வேண்டாமே வறியோர்க்காய் நீர்கசிவோம்
வையத்தில் இருக்கும்வரை வறியோர்க்காய் வாழ்ந்திட்டால்
வரும்நாளில் ஏதுமில்லார் வாழ்க்கைதான் சிறக்காதா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (10-Apr-17, 10:35 am)
பார்வை : 94

மேலே