உன் காதல் கொடி

அடர் காட்டில் ஓர் சிறு ஒளி போல்
உன் காதல் தந்தாய் என் உயிர் பயிர் வாழ,
வேர்விட நானும் நாளும் படர்ந்திருந்தேன் உன் தோள்களிலேத் தழுவிடவே,
நெடுமரமாய் நீ உயர உன் உயரத்தில் நானும் சிறு கொடியாய் உனைத் தொடர.

பருத்து உருண்ட உன் உடல் எங்கும் என் கொடிகள் இருக்கியத் தடம் கண்டேன்,
வார்த்து வளர்த்தவன் அதைக் கண்டே
எனை மாய்த்து விடுவதென நோட்டமிட்டே
தினம் வதைத்தே என் கிளை அறுத்தான்.

நாள் பார்த்து என் வேர் அறுக்க
நான் சாய்ந்து விட்டேன் மண் மீதினிலே
துடிதுடித்து என் உயிர் விலக அந்த வனமெங்கும் துயர் சூழ்ந்ததுவே
என் நிலைக்கண்டே இலை சருகானதுவே.

உயிர் உனையே நான் பிரிய உன்
தோள் சாய இனி அங்கு நானில்லை,
தனிமையோடு நீ துவண்டு நிற்க
உற்றத் துணையென்று ஒருத்தியை தேடித்தந்தார்.

கொடியிலும் சாதிக் கொடியென்று மல்லிக் கொடியொன்றை உன்மேல் படரவிட்டார்
உன் மேனியெங்கும் என் தடம் மறைக்க அக்கொடியதும் செழிக்க நீர் விட்டார்
செழித்த இலைகள் பல கொண்டு உன்
உள் காயங்களை மறைத்து வைத்தார்

இயற்கையில் நானோ ஒட்டுக் கொடி
அவள் மட்டும் என்னப் பெரிய சாதிக் கொடி
ஒட்டுக் கொடியல்ல நானும் உனைப் பற்றி படர்ந்த மிளகுக்கொடியல்லவோ
உன் ரணம் ஆற்றும் அருமருந்தல்லவோ

புதுக் கொடி அவளோ நாளும் உன் உயிரை ஒட்டி உறிஞ்சிவிட்டாளே
நித்தமும் உன் தோள் உரசி உன் ரத்தத்தை மொத்தமாய் குடித்துவிட்டாளே

சிலநாளாய் உன் சருகிடும் ஓசையில்லை
காற்றிலே உன் இலைகள் தரும் வாசமுமில்லை
என்ன நிகழ்கிறதென்று நான் அறியேன்
உனை மீண்டும் சேரும் தடமும் அறியேன்

பட்ட மரம் ஒன்று இன்றுக் காலை
வேரோடு சாய்ந்து மடிந்ததென்று செய்தி அறிந்தேன்
தொட்டு உணர நானும் அது நீதான் எனப் புரிந்தேன்
மக்கிக் கிடந்தவள் என்னை இங்கே
இன்று மீண்டும் கதற விட்டாயே.

விட்டுப் பிரிந்தவள் எனை நினைந்தே நீ இன்னுயிர் விட்டு பிரிந்தாயா
இல்லை என்னவள் வாழா உலகில் இனி வாழேன் என்ற சபதம் எடுத்தாயா
என்ன நினைத்தாயோ கனநொடியில்

ஒட்டி படர்ந்த நாட்களையே நீ எண்ணி மகிழ்ந்து வாழ்ந்திருக்கலாமே
இந்த ஒற்றைக் கொடியிவள் துயர் அறுக்க உன் நெடுவுடலை சாய்த்துக் கொண்டாயோ.
வெத்துக் கொடி எனக்காய் உன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாயோ...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (10-Apr-17, 8:18 pm)
பார்வை : 185

மேலே