ஐன்ஸ்டீனும் கடவுளும்

ஏதேதோ செய்து
எத்தனையோ முட்டைகளிட்டு
சூத்திரங்கள் பலவமைத்தும்
வியப்புக்குறிகளை சில நொடிகளிலேயே
மற்றொரு கேள்விக்குறியாக்கி விடுகிறது
ஐன்ஸ்டீனுக்கும் எட்டாத அந்த
ஏதோ ஒன்று

முழுமை பெறாத ஒரு முழுமை
பொய்யில் ஒரு உண்மை
உண்மையில் ஒரு பொய்
தலைவெடித்து போகும்
புரியாத ஒரு பெருவெடிப்பு
எங்கிருந்தோ எதார்த்தமாய் உருவானதெனும்
ஸ்டீஃபனின் அசையாத தேகத்தில் ஒரு
அசைக்க இயலாத நம்பிக்கை

ஆற்றலில் இருந்து ஒரு பொருள்
பொருளுக்குள் ஒரு ஆற்றல்
இடையில் ஏனோ விசித்திரமாய்
யாரும் உணர இயல கூடாதென
ஒளியின் இருமடி

இதிலும் விளங்காமல்
இருளும் பகலும்
நன்மையும் தீமையும்
முடிவும் தொடர்ச்சியும் என
குவாண்டமும் கடன் வாங்கும்
இந்தியாவிலிருந்து புறப்பட்டு சீனத்தில்
நிலைகொண்ட யாங் தத்துவங்கள்
கூட்டி கழித்து பார்த்தால்
உனக்குள்ளும் அதுவே
அதுக்குள்ளே தான் நீயும் என ஒரு
விளங்காத விளக்கம்

அந்த புரியாத ஏதோ ஒன்றை
புரிந்தே தீர வேண்டும் என
ஒரு பிரம்மாண்ட அமைப்பில்
ஒரு மிகப்பெரிய மோதலில்
பிறந்த துகள் ஒன்றை
இறுதியில் இந்த அறிவியலும்
கடவுள் துகள் என்றா முடிக்க வேண்டும்

திவ்விய பிரபந்தம் போல்
கடவுளை வர்ணிக்க
வார்த்தைகளே இல்லை
வார்த்தைகளுக்குள் சிக்கினால் அது
கடவுளே இல்லை என
முடிந்துவிடுமோ இத்தேடல்

ஹிக்ஸ் போசானை தாண்டிய பின்னும்
தீராமல் ஒரு விக்ஸ் தையிலம்
உன்னிடமிருந்தால்
நீ உலக மேதை தான்
அப்பப்பா டேய் தம்பி காலியாகிடிச்சு
ஒரு தையிலம் டப்பா வாங்கியாயேன்
இந்த எழவெடுத்த கடவுள்
தலைக்குள்ள வந்து
புரியாத நடனமாடுறானே
நடராசா
புடி புடி புடி அகிலமே ஆடுதாம்

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (12-Apr-17, 12:57 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 70

மேலே